ஊடக உலா-5: ஊடக வரலாறு புரிந்தால் மாயை உடையும்!

ஊடக உலா-5: ஊடக வரலாறு புரிந்தால் மாயை உடையும்!
Updated on
2 min read

இன்றைய மாணவர்கள் பலருக்கும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் எளிதாகக் கிடைத்துவிட்டதால், தாங்களே ஒரு ஊடகமாக மாறிவிடக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும், தெரிந்தோ தெரியாமலோ, ஒரு ஊடகமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு ஒரு படி மேலே செல்பவர்கள்தான் தனியாக யூடியூப் போன்ற சேனல்களை உருவாக்கிச் செயல்படுகின்றனர்.

இப்படியான மாணவர்களுக்கு சரியான பயிற்சியை வழங்கும்போது, அவர்கள் மிக எளிதாக அடுத்த கட்டத்துக்கு பயணிக்க முடிகிறது. பெரும்பாலான மாணவர்கள் தான் சேர்கின்ற படிப்பில் என்ன கற்றுத் தருகிறார்கள் என்பதை அறியாமலேயே படிப்பில் சேர்ந்து விடுகின்றனர். அப்படி கண்மூடித்தனமாகச் சேர்வது சரியான ஒன்றல்ல.

பாடத்திட்டத்தை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்

ஊடகம் தொடர்பாக எந்த படிப்பில் சேர விரும்பினாலும், முதலில் அந்த கல்லூரிஅல்லது பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அந்த படிப்பு தொடர்பான முழு விபரங்களையும் அறிந்து கொள்வது அவசியம். பெரும்பாலான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அவர்கள் வழங்கும் பாடத்திட்டத்தை பருவம் வாரியாக விரிவாகப் பதிவேற்றியுள்ளனர்.

இதன் துணை கொண்டு, நீங்கள் படிக்க விரும்பும் பாடங்கள் அதில் உள்ளனவா என்பதை அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் இதழியல் மற்றும் தொடர்பியல் படிப்பிற்கான பாடத்திட்டத்தினை https://tinyurl.com/tzfek5me எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

சரி, இன்று செயல்பட்டு வரும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இதழியல் சார்ந்து என்ன கற்றுத்தரப்படுகிறது, அது சவால் நிறைந்த இன்றைய ஊடகங்களில் பணி செய்ய உதவும் வகையில் உள்ளதா போன்றவற்றை அறிந்து கொள்வோம்.

பொதுவாகவே, எந்த ஒரு ஊடகப்படிப்பாக இருந்தாலும், அதில் முதல் பருவத்தில் அறிமுக நிலையிலேயே பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். பிற துறையிலிருந்து வரக்கூடிய மாணவர்களுக்கும் ஊடகம் தொடர்பான அடிப்படைப் புரிதலை உருவாக்கவே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக “ஊடகத்தின் வரலாறு” என்று ஒரு பாடம் முதல் பருவத்தில் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதன் துணை கொண்டு பொதுவான ஊடகத்தின் வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.

ஏதோ இந்த வசதி வாய்ப்புகளெல்லாம் நம்மை எளிதாக வந்தடைந்து விட்டன என்ற மாயையை ஊடகத்தின் வரலாறு உடைக்கிறது. ஊடகம்கடந்து வந்த பாதை மற்றும் படிநிலைகளை இந்த பாடத்தின் துணை கொண்டு மாணவர்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நம்ப முடியாத மாற்றம்!

இன்று நாம் நினைத்தவுடன் ஒரு நேரலையைச் செய்துவிட முடிகிறது. ஒரு நிகழ்வை வீடியோ எடுத்து, அதனை எடிட் செய்து, நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்பே பதிவேற்றம் செய்துவிடவும் முடிகிறது.

இவையெல்லாம் ஒரு காலத்தில் சாத்தியம் இல்லாத ஒன்று. வெளிநாட்டு ஊடகங்களை வான் அஞ்சல் கடிதம் வழியாக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். ஒரு சில நாடுகளின் ஊடகங்களை, இந்தியாவில் உள்ள தூதரகங்களின் துணை கொண்டு மட்டுமே நாடமுடியும் என்ற சூழல் இருந்தது.

இன்று அது அப்படியே தலைகீழ் ஆகிவிட்டது. புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை ஒரே ஒரு சொடுக்கில் ஆயிரக்கணக்கான ஊடகங்களுக்கு மின்னஞ்சல் வழியாக வாழ்த்து அட்டைகளாக அனுப்பிவிட முடிகிறது. காலமும் செலவுமும் எவ்வளவு மிச்சமாகிவிட்டது! இதேதான் ஊடகத்திலும் நிகழ்ந்துள்ளது.

அதனை மனதில் கொண்டே, இதழியல் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடங்களைப் படிப்பதன் ஊடாக மாணவர்கள், தாம் எந்த கட்டத்திலிருந்து, எந்த இடத்திற்கு முன்னேறியுள்ளோம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

(உலா வருவோம்)

கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னை பல்கலைக்கழகம்

தொடர்புக்கு: bbcsakthi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in