

இருபது வருடங்களுக்கு முன் ஊடகப் படிப்பு என்றால் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை மட்டுமே. சென்னை பாரதிய வித்யா பவனில் சான்றிதழ் படிப்பு ஒன்றும் நடத்தப்பட்டு வந்தது.
ஆனால், இன்று பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஊடகம் தொடர்பாக 16-க்கும் அதிகமான படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு படிப்பும், அதனதன் அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
இன்றைய டிஜிட்டல் மீடியா மற்றும் சோஷியல் மீடியாவின் வளர்ச்சி படிக்கும் போதே மாணவர்களுக்குப் பல வாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கிறது. குறிப்பாக அவர்களைத் தொழில் முனைவோராகவும் ஆக்கிவிடுகிறது. அதற்கு மிக முக்கியக் காரணம், அவர்களின் கிரியேட்டிவிட்டி. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்யாமல், தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி, தானே முதலாளியாகி விடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்காக இன்று ஏராளமான ஊடகம் தொடர்பான படிப்புகள் வந்து விட்டன. அதில் முதன்மையான படிப்பாகக் கருதப்படுவது இதழியல்.
இதழியலில் முதுகலை பட்டம் மட்டுமே (M.A. Journalism and Communication) வழங்கப்பட்ட நிலை மாறி, இன்று இளங்கலையிலும் (B.A. Journalism) பல்வேறு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது எழுத்துத்திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
குறைந்த செலவில் படிக்க...
சென்னைப் பல்கலைக்கழகம், மதுரைகாமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவை இதழியல் பட்டப் படிப்பை நடத்துகின்றன.
இவற்றில் பல முதுகலையில் மட்டுமே வழங்குகின்றன. ஒரு சில பல்கலைக்கழகங்கள் இன்டகிரேட்டடு முறையில் பிளஸ்2 முடித்தவுடன் ஐந்தாண்டு படிப்பாகஇளங்கலை, முதுகலை இரண்டையும் சேர்த்தே படிக்கும் வாய்ப்பளிக்கின்றன. இதுதவிர அரசு கலைக்கல்லூரிகளிலும் ஊடகப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
குறைந்த செலவில் இதழியல் படிப்பினைப் படிக்க விரும்புபவர்கள் அரசு பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் நாடலாம். உதாரணமாக இந்த படிப்புக்கு சென்னைப் பல்கலைக்கழகம் வருடத்திற்கு ரூ.5,400/- மட்டுமே கல்விக்கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், இது வருடக் கட்டணம், பருவக் (செமஸ்டர்) கட்டணம் அல்ல. ஆனால், இதே படிப்புக்குத் தனியார் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் என்ன கட்டணத்தினை வசூல் செய்கின்றன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
இது போன்றே தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்திலேயே இதழியல் கல்வியைப் பெறலாம்.
இதழியல் படிப்பில் சேரும் மாணவர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டியது, எந்த இடத்தில் படிக்க வேண்டும் என்பதை. ஒவ்வொரு மாணவரின் வசதி வாய்ப்பை பொருத்து இது மாறுபடும். முடிந்த மட்டும் எந்த இடத்தில் சேர்ந்தாலும், அந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் படிப்பின் தன்மையை அறிந்துகொள்வது நலம்.
தமிழகத்தில் எந்தெந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்தப் படிப்பு உள்ளது என அறிந்துகொள்ள: www.tngasa.in அல்லது www.tngasa.org
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை தொடர்புகொள்ள: https://www.tn.gov.in/website_directory/5
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com