கையருகே கிரீடம்-5: துப்பறிவாளர் ஆவது எப்படி? :

கையருகே கிரீடம்-5: துப்பறிவாளர் ஆவது எப்படி? :
Updated on
2 min read

ரகசிய உளவாளி ‘007' ஜேம்ஸ் பாண்டின் சாகசங்களைப் பார்த்து நானும் அப்படி சாகசம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டதுண்டா? தமிழ்த்திரைப்படங்களில் சிஐடி அதிகாரியாக வரும் கதாநாயகன், தடயங்களைக் கொண்டு சாதுர்யமாக துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடிப்பதைப் பார்த்து துப்பறிவாளராகும் ஆசை உங்களுக்குள் துளிர்த்ததுண்டா? டிடெக்டிவ், இன்வெஸ்டிகேஷன் அதிகாரி, சிஐடி போலீஸ் எனப் பலவாறாக அழைக்கப்படும் துப்பறிவறிவாளராக நீங்கள் ஆகலாம்.

காவல்துறையில் சிஐடி (Criminal Investigation Department) என்ற சிறப்பு பிரிவில் உள்ள காவல் அதிகாரிகள், குற்றங்களை துப்புத்துலக்கி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் சிரமமான பணியை செய்கிறார்கள்.

தமிழக காவல்துறையில் சிஐடி பிரிவில் அதிகாரியாகவும் காவலராகவும் பணிபுரிந்து துப்பறியும் வேலையை செய்யலாம். ஐபிஎஸ் அதிகாரிகள், துணை கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி), உதவி ஆய்வாளர்கள் ஆகிய பதவிகளில் அதிகாரியாக நேரடியாக தமிழக காவல் பணியில் சேரலாம். காவலராகத் துப்பறியும் பணியில் ஈடுபடும் வாய்ப்புகளும் உண்டு.

என்ன படிக்க வேண்டும்?

ஐபிஎஸ் அதிகாரியாக ஏதாவது ஒரு பட்டப் படிப்பை நிறைவு செய்து, ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றிபெற வேண்டும். இந்தத் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

டிஎஸ்பி ஆக பணியில் சேர ஏதாவது ஒரு பட்டப் படிப்பை நிறைவு செய்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

உதவி ஆய்வாளராக பணிபுரிய, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். தேர்வில் பங்கேற்க ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருப்பது அவசியம். தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரிய மின்னணு மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியலில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு (டிப்ளமோ) நிறைவு செய்திருக்க வேண்டும்.

கைரேகை நிபுணராக வேண்டுமெனில், அறிவியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். காவலராக பணியில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. காவல்துறையில் பணியில் சேர உடல் தகுதியும் தேவை. எனவே உடல் தகுதித்தேர்வும் உண்டு. மேலும் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

மத்தியப் புலனாய்வுத் துறைகள்

மாநில காவல்துறையின் சிஐடி பிரிவைப் போல, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பல புலனாய்வுத்துறைகள் உள்ளன. சிபிஐ (Central Bureau of Investigation), ஐபி (Intelligence Bureau), ரா (Research and Analysis Wing), என்ஐஏ (National Investigation Agency) போன்ற புலனாய்வு அமைப்புகளைப் பற்றி ஊடகங்களின் மூலமாக நீ அறிந்திருக்கலாம்.

இந்த அமைப்புகள் சார்ந்த அதிகாரிகள் எந்த விதமான துப்பறியும் வேலைகளை செய்கிறார்கள். எப்படி சிபிஐ அதிகாரியாவது, அதற்கு என்ன படிக்க வேண்டும் போன்றவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடரும்)

கட்டுரையாளர், ‘ஏவுகணையும் கொசுக்கடியும்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in