

தேசிய இமயமலை சாகசத்தில் பங்கேற்று 14,000 அடி உயரம் ஏறினேன். அந்த பனிமலைப் பயணம் எனது பல படிப்பினைகளைத் தந்து எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள என்னை தயார்ப்படுத்தியது.
மலைத்தொடர்களை பார்ப்பதற்கே மலைப்பாக இருக்கும். அதிலும் பசுமை போர்த்திய மலைகளும், பனி மலைகளும் நம்மைவேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். மலையேற எல்லா இளையோருக்கும் பிடிக்கும். தமிழர்களுக்கும் மலைக்கும் நெடிய தொடர்புண்டு. மலையும் மலையைச் சார்ந்த பகுதிகளையும் குறிஞ்சி என்று நாம் அழைத்து மகிழ்கிறோம்.
மலையேற்றம் தொழிலாக
மலை, மலை சார்ந்த பகுதிகள் குறித்து உங்களுக்கு ஈர்ப்பு இருந்தால் மலையேற்றத்தை வாழ்க்கையாக நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். மலையேற்றம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல அது ஒரு தொழிலும் கூட. எப்படி தொழில்முறையாக மலையேற்றத்தை முன்னெடுப்பது? எங்கே மலையேற்றத்தை கற்றுக்கொள்வது?
இந்திய மலையேற்ற அமைப்பு (Indian Mountaineering Foundation) தேசிய அளவில் மலையேற்றப் பயிற்சிகளை கண்காணிக்கிறது. இந்த அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு பயிற்சி நிலையங்கள் இந்தியாவில் உள்ளன.
உத்தர்காண்ட் உத்தர்காஷி பகுதியில் உள்ள நேரு மலையேற்ற நிறுவனம், மேற்கு வங்கம் டார்ஜிலிங் பகுதியில் அமைந்துள்ள இமாலய மலையேற்ற நிறுவனம், இமாச்சலப்பிரதேசத்தின் மணாலியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாயி மலையேற்றம் மற்றும் உடன் விளையாட்டுகள் நிறுவனம், ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாஹல்காம் பகுதியில் உள்ள ஜவஹர் மலையேற்ற நிறுவனம் ஆகியவற்றில் மலையேற்ற பயிற்சி பெறலாம். இவை தவிர பிற மலையேற்ற பயிற்சி நிறுவனங்களும் உண்டு.
மலையேற்றப் படிப்புகள்
நான்கு விதமான மலையேற்றப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அடிப்படை மலையேற்றப் படிப்பு (Basic Mountaineering Course-BMC), மேம்பட்ட மலையேற்றப் படிப்பு (Advanced Mountaineering Course-AMC), தேடுதல்-மீட்பு படிப்பு (Search And Rescue-SAR), மற்றும் கற்பித்தல் முறை (Method of Instruction-MOI) ஆகிய படிப்புகள் உண்டு.
அடிப்படை படிப்புக்குப் பிறகு மேம்பட்ட படிப்பில் சேரலாம். இரண்டு படிப்புகளுக்கும் 28 நாட்கள் பயிற்சியளிக்கப்படும். அடிப்படை படிப்புக்கு குறைந்தபட்ச வயது 16, மேம்பட்ட படிப்பில் 18 வயதானவர்கள் சேரலாம். மேம்பட்ட படிப்பை முடித்தவர்கள் மற்ற இரண்டு படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் சேரலாம். கற்பித்தல் முறை படிப்பை படித்தவர்கள் மற்றவர்களுக்கு மலையேற்ற பயிற்சி அளிக்கலாம்.
வேலைவாய்ப்புகள்
தேசிய, சர்வதேச மலையேற்ற சாகசங்களில் பங்கேற்கலாம். மலையேற்றம் ஒருவிளையாட்டாக ஒலிம்பிக் போட்டிகளில் தற்போது சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதில் பங்கேற்று பதக்கம் வெல்லலாம். இப்படி தேசிய-சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் விளையாட்டு ஒதுக்கீட்டில் மத்திய மாநில அரசுப்பணிகளில் சேரலாம். மலையேற்ற வீரர்களின் பயிற்சியாளராக விளையாட்டு ஆணையத்தில் பணியாற்றி சர்வதேச போட்டிகளுக்கு அவர்களை தயார் செய்யலாம்.
மலையேற்ற வழிகாட்டியாக சுற்றுலாத்துறையிலும் சாகச மையங்களிலும் சொகுசு விடுதிகளிலும் பணியாற்றலாம். மலையேற்ற பயிற்சியாளராக, பயிற்சிப்பள்ளிகளிலும் பொழுதுபோக்கு பூங்காக்களிலும் பணியாற்றலாம்.
முழு நேரப்பணியாக இல்லாமல், பகுதி நேரமாக வார இறுதி நாட்களில் மலையேற்ற வழிகாட்டியாக பணியாற்றலாம். YHAI போன்ற நிறுவனங்கள் நடத்தும் மலையேற்ற சாகசங்களில் வழிகாட்டியாகவும், முகாம் தலைவராகவும் வருடத்தில் சில நாட்கள் பணியாற்றும் வாய்ப்புகளும் உள்ளன.
மலையேற்றம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.indmount.org/IMF/course
(தொடரும்)
கட்டுரையாளர், ‘பொறியியல் புரட்சிகள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.
தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com