

ஒவ்வொருவருக்கும் ஒரு ஆளுமை உத்வேகம் தரும் நபராக அமைந்திருப்பார். அதுவே அந்த நபரின் திருப்புமுனையாகவும் அமைந்திருக்கும்.
அந்த ஆளுமை தன் வீட்டில் இருக்கலாம், தன் தெருவில் இருக்கலாம், பள்ளியில் இருக்கலாம், ஊரில் இருக்கலாம், சமகாலத்தில் தலைவராகவோ, ஆராய்ச்சியாளராகவோ, எழுத்தாளராகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரே ஒரு நபர் என்றில்லாமல்கூட பல நபர்களாகவும் இருக்கலாம்.
இப்படி ஆளுமைகளை உத்வேகமாகக் கொள்வது சரியா? அவர்கள் ஒரு பாதையை பிடித்து வெற்றி பெற்றிருப்பார்கள். வெற்றி என்பது ஒருவகையில் ஒரு நிலைதான்.
ஒருவருக்கு வெற்றி எனச் சொல்வது மற்றவர்களுக்கு வெற்றியாக இல்லாமல் இருக்கலாம். ஒருவர்கோடீஸ்வரனாக மாறினார் என்பது வெற்றியா? அதனை எப்படி அடைகின்றார், நேர்மையான வழியில் சென்றாரா, மற்றவர்களையும் அரவணைத்தாரா எனபல கேள்விகளுக்குப் பின்னரே அதுவெற்றி.
பணம் பலருக்கு வெற்றியாகக்கூட இல்லாமல் இருக்கலாம். அதே போலவே மகிழ்ச்சியும் ஒரு வகை மனநிலை. ஓட்டப் பந்தையத்தில் மூன்றாம்இடத்தை பிடித்த குழந்தை முதல் இடத்தை பிடித்த குழந்தையை விடமகிழ்ச்சியாக இருக்கக்கூடும். முதலிடம் பிடித்த குழந்தை இன்னும் சில நிமிடங்கள் முன்னரே ஓடி இருக்கலாம் என வருத்தப்படக்கூடும். ஆகவே வெற்றியும் மகிழ்ச்சியும் மனநிலையை பொருத்தது.
ஆனாலும் எல்லா ஆளுமைகளிடமிருந்தும் தெரிந்து கொள்ள ஒன்று உண்டு. எவ்வாறு சவால்களை எதிர்கொண்டார்கள் என்பதே அது. அந்த சவால்கள் அவர்களது பள்ளிப்பருவத்திலோ, கல்லூரி பருவத்திலோ, பொருளாதாரம் சார்ந்தோ, சாதி-மதம் காரணமாகவோ, போட்டி நிறைந்த உலகினாலோ வந்திருக்கலாம்.
ஆனால், அதனை முழு திராணியுடனும் திடத்துடனும் எதிர்கொண்டு இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் துறையில் பெரும் ஆளுமைகளாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.
அவ்வளவு ஏன்! நம் கைகளில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்குமே ஒரு நெடிய வரலாறு இருக்கும். அந்த வரலாற்றில் எல்லாம் ஒரு தவிர்க்கமுடியாத ஆளுமைகள் இருப்பார்கள். இப்படி நமக்கு ஆளுமைகளின் வரலாறுகள் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
இன்னொன்று வெற்றிக்கான ரகசியம் வெளிப்படையாக இருக்காது. அதை நாம்தான் கண்டுணர வேண்டும். யோசித்துப் பாருங்கள் ஒரு டைம் மெஷினில் பயணித்து நூறாண்டுகளுக்கு முன்னர் ஐன்ஸ்டீன் வீட்டிற்கு போய்வருவது எப்படி இருக்கும்? ஐ!
ஆளுமைகளை பிடித்துக்கொண்டு செல்லுதல் அலாதியான அனுபவம். ஒன்று அவர்களைப் பற்றி அறிந்துகொள்வது. அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த சமூக பொருளாதார நிலை, ஆளுமைகளின் வீடுகளின் நிலைமை, எந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் சடாரென பெரும் ஆளுமையாக உருவெடுத்தார்கள் என்று அறிந்துகொள்ளுதல் ஒரு அற்புதமான அனுபவம்.
இவற்றை எல்லாம் வாசிக்கும்போது நமக்குள் நம்மை அறியாமல் அவர்களின் போர்க்குணங்கள் தொற்றிக்கொள்ளும். விடாப்பிடியான மனநிலை தொற்றிக்கொள்ளும். சுறுசுறுப்பு பற்றிக்கொள்ளும். புதிய பரிமாணத்தில் வாழ்வினை பார்க்க ஆரம்பிப்போம். சிக்கல்கள் சின்னதாகிவிடும். ஒவ்வொரு ஆளுமை வாழ்வும் ஒரு பொக்கிஷம். மெல்ல மெல்ல நாமும் அவர்களின் ஒளியால் வலுப்பெறுவோம்.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’
தொடர்புக்கு: umanaths@gmail.com
முந்தைய அத்தியாயம் | சின்னச் சின்ன மாற்றங்கள் - 4: உயரங்களை பெரிதாக்கு!