

அப்துல் கலாம் என்று சொன்னதுமே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவர் சொன்ன பொன்மொழி ஒன்றுதான். "கனவு காணுங்கள்" என்பதுதான் அது. கண்டிப்பாக ஒவ்வொருவருமே கனவு காண வேண்டும்.
அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், கனவு காணும் முன்னர் அதற்காக விதைகள் வேண்டும் அல்லவா. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் மரம் வளர்க்க ஆசைப்படுகிறோம் என வைத்துக்கொள்வோம், அதற்கு விதை வேண்டும் அல்லவா? அந்த விதை எங்கே இருக்கும்?
எங்கே வளரிளம் பருவ குழந்தைகளை சந்திக்க நேர்ந்தாலும் அவர்களிடம், “நீங்கள் என்னவாக விருப்பம்?” என்று கேட்பேன். பலவிதமாக விடைகள் கிடைக்கும். அதில்நுட்பமாகக் கவனித்தால் அவர்கள் பார்த்தவர்களின் பாதிப்பு இருக்கும். "எங்க ஊர் டெய்லர்போல ஆகணும்" என்று பல மாணவர்கள் சொன்னபோது ஆச்சரியப்பட்டேன்.
ஏன் என விசாரித்தபோது அவர் விதவிதமாக ஆடைகளை உடுத்துவார். ஊரில் ஒரு ட்ரென்ட் உருவாக்குவார் என்றனர். அவர்கள் பார்த்து வியந்த உள்ளூர் நபரை இலக்காகக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், உலகம் என்பது நம்முடைய ஊர் மட்டுமில்லை அல்லவா? ஒருவேளை எல்லா ஊர்களில் வசிக்கும் (எல்லா ஊரும் சாத்தியமே இல்லை) தையல் கலைஞர்களையும் பார்த்துவிட்டு பிறகு தனது ஊர் தையல் கலைஞர் போல வளர முடிவெடுத்தால் தவறில்லை. முதலில் பார்க்க வேண்டும். எந்த எந்த மாதிரியான மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஆமாம், அவர்களை எப்படி பார்ப்பது?
அதற்கு ஒரு பெரிய கருவி இருக்கிறது. அதுதான் புத்தகம். பல்துறை ஆளுமைகளை நமக்கு அது அறிமுகம் செய்யும். இருக்கும் துறைகளை, வளரும் துறைகளை, வரப்போகும் துறைகளை நமக்குக் கோடிட்டுக் காட்டும். வெறும் புத்தகங்கள் மட்டுமா என்றால் இல்லை. நாளிதழ்கள், ஊடகங்கள், இணையம் என பல வழிகளில் ஆளுமைகள் அறிமுகம் ஆவார்கள். அவர்களின் வழியே நாம் நம் உயரங்களையும் இலக்குகளையும் தீர்மானிக்கலாம்.
ஊர்க்குருவியாக வெறும் நம்ம வீட்டு கூரையை மட்டும் பார்த்துவிட்டு நம்ம கூட்டுக் கூரையைத் தொட்டால் போதும், அவ்வளவு தூரம் பறந்தால் போதும் என்று இருந்துவிடுவோமா? கூரையைப் பிய்த்து ஒரு ராட்சச கழுகாக மாறி உயர உயரப் பறந்து நம்முடைய விருப்பமான மரத்தினை அடைவதுதானே உண்மையான லட்சியமாக இருக்க முடியும்?!
இன்னும் சொல்லப்போனால் கரோனா காலத்திற்குப் பின்னர் பல குழந்தைகளின் இலக்குகள் பின்னோக்கிப் போய்விட்டது. குடும்பச்சூழல், வீடடைப்பு, பள்ளிகள் இல்லாமை இவை அனைத்துமே காரணமாக இருக்கலாம். ஆனால், நாம் மீண்டு எழ வேண்டிய தருணம் இது. ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் இப்படி ஒரு பேரழிவு வந்ததுண்டு. துணிவுடன் மீண்டெழுந்திருக்கிறது மனித இனம். நாம் கண்டிப்பாக ஒவ்வொருவரின் கைப்பிடித்தும் எழுவோம். இலக்குகளைப் பெரிதாக்குவோம்.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’
தொடர்புக்கு: umanaths@gmail.com