

பிளேக் எனும் கொள்ளை நோயை பல்வேறு விவேகமான செயல் திட்டங்களால் கட்டுக்குள் கொண்டு வந்தார் டாக்டர் பத்மநாப பல்பு என்று கடந்த வாரம் பார்த்தோம். அப்படிப்பட்ட டாக்டர் பத்மநாப பல்புவை மனதாரப் பாராட்டினார் மைசூர் மன்னர் சாயாஜிராவ் மகாராஜா. மேலும் தனது ஆஸ்தான மருத்துவர் இன்னும் உயரங்களை அடைய நுண்ணுயிரியல் துறையில் சிறப்புப் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளுக்கு அனுப்பிவைத்தார்.
1900-ம் ஆண்டு, பிரிட்டிஷ் மெடிக்கல் கவுன்சில் தனது வைராலஜி பிரிவுக்குத் தேர்ந்தெடுத்த முதல் ஆசிய மருத்துவர் என்ற பெருமையுடன் நுண்ணுயிரியலில் முதுநிலை பட்டம் பெற்று நாடு திரும்பினார் பத்மநாப பல்பு. தன்னை முழுமையாக ஆதரித்த கர்நாடக மக்களுக்காகத் தொடர்ந்து அரும்பணியாற்றிய பத்மநாபன், பிளேக்தவிர மற்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொண்டார்.
ஒன்றே குலம், ஒருவனே தேவன்!
காலரா, காமாலை போன்ற பல்வேறு தொற்றுநோய்களுக்கு முக்கியக் காரணம்மக்களின் சுகாதாரமின்மையும் விழிப்புணர்வின்மையும்தான். ஆகவே, ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் தானே மூன்று முதல் நான்கு முறைவரை நேரடியாகச் சென்று சுகாதாரம் குறித்த புரிதலை ஏற்படுத்தினார்.
பெங்களூரின் தடுப்பூசி நிறுவனத்தின் இயக்குனராகவும் மாநிலத்தின் சுகாதார அமைப்பின் இணை ஆணையராகவும் பத்மநாபனை உயர்த்தி அழகுபார்த்தது கர்நாடக அரசு.
எவ்வளவுதான் சாதித்தாலும், தான் பிறந்த மண்ணில் தனக்கு நேர்ந்த நிராகரிப்புகள் அவரை உறங்கவிடாமல் செய்தது. தனக்கு நேர்ந்தது தனது மக்களுக்கு நிகழாமலிருக்க வேண்டி ஒடுக்கப்பட்ட மக்கள் வேதனை குறித்து ஆங்கில மற்றும் மலையாளப் பத்திரிக்கைகளில் எழுதியும், பேசியும் வந்தார்.
தனது எண்ணத்தை செயல்படுத்த வேண்டி, 1903-ம் ஆண்டு தனது குருவான நாராயண குருவின் ஆசிகளுடன் எஸ்.என்.டி.பி. எனும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். "ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்...மனுஷ்யனே..." எனும் நாராயண குருவின் வரிகளை வலிமையாக்கினார்.
வேலையிலிருந்து நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு சாதிய அடக்குமுறைக்கு எதிரான களப்பணியில் முழுமூச்சாக இறங்கினார். ஒருமுறை பதிமூன்றாயிரத்துக்கும் அதிகமான ஈழவ மக்களின் கையெழுத்தைப் பெற்று சாதியக் கொடுமைகள் பற்றி அரசுக்கு மனு கொடுத்தார்.
தனது கடிதங்கள் மூலம் மகாத்மா காந்தி, கர்சன் பிரபு ஆகியோரின் கவனத்துக்கு இச்சமூக நோயை கொண்டு சென்றார். தனது கோரிக்கைகளை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் அனுப்பி வைத்தார். இவையனைத்தையும் புத்தகமாக அச்சிட்டு அனைத்து மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
இருந்தும் பெரிய மாற்றங்கள் நிகழாமல் போகவே, தனது தலைமை மருத்துவர் பதவியையும், மைசூர் அரசு அளித்த திவான் பதவியையும் புறக்கணித்து 1920-ம் ஆண்டு திருவிதாங்கூருக்கே திரும்பினார்.
சுவாமி விவேகானந்தரின் நெறி முறைகளைத் தொடர்ந்து கடைபிடித்து வந்த பத்மநாபனின் தொடர் முயற்சிகளுக்கு உறுதுணையாக நின்றது பாரிஸ்டர் ஜி.பி. பிள்ளை மற்றும் சகோதரி நிவேதிதா அவர்கள்தான். இறுதியில் அவரது இடையறாத குரலுக்கு அரசு செவிமடுத்தது.
கோயில் மற்றும் அரசியல் பிரவேசம்
பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் என அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு, அரசாங்கப் பணிகளில் அனைத்து சமுதாயத்தினருக்கும் நியமனம் என அவரால் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. இட ஒதுக்கீடு மட்டுமன்றி பத்மநாப பல்பு தொடங்கி வைத்த எஸ்.என்.டி.பி., இன்னும் பல சமுதாய முன்னேற்றங்களையும் தோற்றுவித்தது.
மது எதிர்ப்பு, பால்ய விவாக மறுப்பு, பெண் கல்வி, தாழ்த்தப்பட்டோரின் அரசியல் பிரவேசம் ஆகியவற்றை வலியுறுத்தியதுடன் கிராமப்புறங்களில் சாலை வசதிகள், கோயில்களுக்குள் செல்ல அனுமதி, ‘திருக்குழி', ‘தாலிக்கட்டு' போன்ற தேவையற்ற சடங்குகளை எதிர்த்தது என சாமானிய மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து செயலாற்றியது.
எஸ்.என்.டி.பி வேரூன்றி செழித்ததைக் கண்டு மகிழ்வுற்ற பத்மநாப பல்பு மாநிலமெங்கும் கோயில்கள் நிறுவினார். அத்துடன் நிற்காமல், தனது மகன் நடராஜ குருவையும் சமூகப் பணிக்குத் திருப்பி தனக்குப் பிறகு தனது பணிகள் நிற்காமல் தொடர ஏற்பாடு செய்தார். பல செயற்கரிய செயல்களைச் செய்த டாக்டர் பத்மநாப பல்பு, தனது எண்பத்தி எட்டு வயதில், 1950-ம் ஆண்டு ஜனவரி 25 அன்று இயற்கை எய்தினார்.
“ஒரே மதம்... ஒரே இனம்... ஒரே இறைவன்... அந்த இறைவனின் பெயர் தர்மம்..."என்ற வரிகளுடன் அன்று அவர் உருவாக்கிய எஸ்என்டிபி அமைப்பு இன்றும் நாடெங்கும், உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் கல்வி, ஆரோக்கியம், தொழில், வாழ்வாதாரம் மேம்பட உதவி வருகிறது.
டாக்டர் பத்மநாப பல்பு எனும் இந்த எளிய மருத்துவர் அழிக்க விரும்பியது இரண்டே இரண்டு பெரிய நோய்களைத்தான். உடல் சார்ந்த பிளேக் நோயை அவர் இருக்கும்போதே அழித்துவிட்டார். தீண்டாமை எனும் சமூக நோயை அழிக்க தமது சந்ததியை, அதாவது நம்மை ஊக்கப்படுத்திச் சென்றிருக்கிறார்.(மகத்துவம் தொடரும்)
கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர்,
சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com
முந்தைய அத்தியாயம் | மகத்தான மருத்துவர்கள் - 4: சமூக அநீதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பத்மநாப பல்பு