மகத்தான மருத்துவர்கள் - 4: சமூக அநீதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பத்மநாப பல்பு
ஒரு மருத்துவர் தான் பெற்ற கல்வி மூலமாக நோய் தீர்க்க மருத்துவம் பார்க்கலாம். ஆனால், சமூக அநீதிக்கு எதிராக சிகிச்சை அளிக்க முடியுமா? டாக்டர் பத்மநாப பல்பு வாழ்க்கையில் அதுதான் நிகழ்ந்தது.
கேரளாவில் திருவிதாங்கூர் அரசுக்கு உட்பட்ட ‘பேட்டை’ ஊரில் 1863-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 2ம் தேதி பிறந்தவர் பத்மநாப பல்பு. மரங்களில் இருந்து கள் இறக்கும் தொழிலை மேற்கொண்ட, ‘அவர்ணா’ என மற்ற சமுதாயத்தினரால் ஒதுக்கப்பட்ட ஈழவ சமுதாயத்தில் பிறந்தார்.
அவரது தந்தை தச்சக்குடி பல்பு சாதிய அடக்குமுறைகளை எதிர்க்கும் மனநிலையுடன் இருந்ததால் தனக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் தனது குழந்தைகளுக்காவது கிடைக்க நினைத்தார். தனது பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பித்து, மெட்ரிக் கல்வியும் பயிலச் செய்தார். பள்ளியில் தேர்ச்சி பெற்ற மகனை மருத்துவம் பயில ஊக்குவித்தார்.
மறுக்கப்பட்ட கல்வியை ஊட்டிய தமிழகம்
ஏற்கெனவே மருத்துவத்தின் மீது தீராக்காதல் கொண்டிருந்த பத்மநாபன் அதற்கான நுழைவுத் தேர்வு எழுதி மாநிலத்திலேயே இரண்டாவது மதிப்பெண் குவித்தார்.
இருப்பினும் வயது வரம்பு கூடுதல் என்று காரணம் காட்டி மருத்துவக் கல்வியைஅவருக்கு நிராகரித்தது கேரள அரசு.தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்திருப்பதுதான் உண்மையான காரணம் என்பதை உணர்ந்தவர், தனது சாதியைப் பற்றிக் கவலைப்படாத ஊருக்குச் சென்று மருத்துவம் படிக்க முடிவெடுத்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது தமிழகத்தை.
தாய் தனது நகைகளை எல்லாம் அடகு வைத்துத் தந்த பணத்துடன், சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் பத்மநாபன். எல்.எம்.எஸ். என்ற மருத்துவப் பட்டம் பெற்று ஈழவ சமுதாயத்தின் முதல் மருத்துவராக ஊருக்குத் திரும்பினார்.
பாரபட்சம் இல்லாத சேவை
மருத்துவரான பின்னரும் சாதியை மறைமுகமாகக் காரணம் காட்டிய திருவிதாங்கூர் அரசு அவரைப் பணியில் சேர்க்க மறுத்தது. இருப்பினும் பத்பநாபன் சோர்ந்து போகவில்லை. மருத்துவப் பணி செய்ய கர்நாடகாவைத் தேர்ந்தெடுத்தார். 1891-ம் ஆண்டு மைசூர் அரசாங்கத்தின் மருத்துவர் பணிக்கு விண்ணப்பித்தார்.
நினைத்தது போலவே அவரை இருகரம் நீட்டி வரவேற்ற மைசூர் அரசு, புதிதாகத் தொடங்கப்பட்ட தடுப்பூசிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ கண்காணிப்பாளராக அவரை நியமனம் செய்தது. செயிண்ட் மார்த்தா மருத்துவமனையின் தலைமை மருத்துவராகவும் உயர்த்தியது.
மன நலம் பாதித்தவர்கள், தொழுநோயாளர்கள், காசநோய் பிணியாளர்கள் என அனைவருக்கும், அனைத்து தட்டு மக்களுக்கும் எந்தவித பாரபட்சமும் இன்றி, எப்போதும் உறுதியுடனும் உற்சாகத்துடனும் உழைத்த பத்மநாப பல்புவை, கடவுள் தங்களுக்காக அனுப்பிய வரம் என்றே கொண்டாடினர் அம்மாநில மக்கள்.
அன்றே பரவிய பெருந்தொற்று!
ஆனால், சோதனை வேறு வடிவில் வந்தது. உலகெங்கும் கோடிக்கணக்கான உயிர்களை பலிகொண்ட, மனித வரலாற்றின் கருப்புப் பக்கங்கள் (Black Death) என்று குறிப்பிடப்படும் அளவு கொடிய நோயான ‘பிளேக்' எனும் கொள்ளை நோய் நமது நாட்டிலும் பரவி, மும்பையில் இருந்து ரயில் மூலமாக 1898ம் ஆண்டு பெங்களூர் வந்தடைந்து, கர்நாடகாவிலும் தீ போலப் பரவியது. அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான மக்களை பிளேக் நோய் பலியெடுக்க, டாக்டர் பத்மநாப பல்புவை பிளேக் நோய் கட்டுப்பாட்டிற்கான மருத்துவராக நியமித்தது அரசு.
இன்று கரோனா தொற்றின்போது நாம் மேற்கொண்ட ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதலை அன்றே அமல்படுத்தினார் பத்மநாபன்.
வாகன வசதிகள் இல்லாத அச்சமயத்தில் மாட்டு வண்டிகள் மூலமாக நோயுற்ற மக்களைச் சென்றடைந்து மருத்துவ உதவிஅனைவருக்கும் கிடைக்கப் போராடியிருக்கிறார். அத்துடன் சாக்கடைகளை சுத்தப்படுத்துவது, வடிகால்களை சீராக்குவது,நோயைப் பரப்பும் எலி மற்றும் பெருச்சாளிகளைப் பிடித்துக் கொல்பவர்களுக்கு சன்மானம் அளிப்பது என்ற முனைப்புடன் இயங்கிய அரசுக்குப் பக்கபலமாக நின்றார்.
ஆரம்ப நிலையிலேயே நோயுற்றவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தி, தக்க சிகிச்சையும் அளித்து உயிரிழப்புகளைப் பெருமளவில் குறைத்துக் காட்டினார். அவரது விவேகமான செயல்திட்டங்களால் பிளேக் நோய் கட்டுக்குள் வந்தது.
(மகிமை தொடரும்)
கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com
