

குழந்தைகள் வாசிக்கக் கற்ற பிறகும், வளரிளம் பருவத்துக்குள் நுழையும்போதும், விரும்பி வாசிக்கும் புத்தகமாக துப்பறியும் கதைகள் நிச்சயமாக இருக்கும்.
பருவ வயதில் ஏதாவது சாகசம் செய்ய துடித்துக் கொண்டிருப்பர் குழந்தைகள். வகுப்பறைகளில் காணாமல் போன ரப்பர் பென்சிலைக் கண்டுபிடிப்பதில் வெற்றி அடைந்துவிட்டால் கூட கதாநாயக பாவனை பருவ வயதினரிடையே கொப்பளிக்கும். இதற்காகவே துப்பறியும் கதைகளை வாசித்து சில மாயாஜாலங்களை அறிந்துகொள்வர்.
பெரும்பாலும் கடைகளில் பெரியவர்கள் கதாநாயகராக இருந்து, பெரிய பெரிய கொலைகள், கொள்ளைகள் நடந்த பிறகு,ஏன்? எப்படி? என ஆராய்ந்து கண்டுபிடிக்கும் சாகசக் கதைகளே நிறைய கிடைக்கும்.
இன்றைய தினம் துப்பறியும் கதைகள் கொண்ட புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் முன்னர் புத்தக எழுத்தாளரைப் பற்றி அறிந்து கொள்வோமா? சத்யஜித்ரே திரைப்படத்துறையில் சாகசம் செய்தது போலவே, எழுத்துத் துறையிலும் சாதனை படைத்திருக்கிறார்.
சிறிய வயதிலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகள் முழுவதையும் வாசித் திருக்கிறார். ஓவியராக வாழ்க்கையை தொடங்கியவர், திரைப்படத்துறையில் பதேர் பாஞ்சாலி திரைப்படம் மூலம் இயக்குநரானார். முதல் படத்துக்காகவே,11 சர்வதேச விருதுகள் கிடைத்தன. பதேர் பாஞ்சாலி குழந்தைகளுக்கான படம் என்பது கவனிக்க வேண்டியது. 1992-ல்வாழ்நாள் சாதனையாளர் விருது ரேயிக்குவழங்கப்பட்டது.
அவரது தாத்தாவால் தொடங்கப்பட்டது சந்தேஷ் எனும் குழந்தைகள் பத்திரிக்கை. ரேயின் அப்பாவால் பொருளாதார நெருக்கடியால், தொடரஇயலாமல் போனது. 1961-ல் ரேயால் மீண்டும் தொடர்ந்து இயங்கத் தொடங்கியது சந்தேஷ் குழந்தைகள் பத்திரிக்கை.
சந்தேஷ் பத்திரிக்கையில்தான் துப்பறியும்கதையை தொடராக எழுதத் தொடங்கி யிருக்கிறார் சத்யஜித்ரே. வங்காள மக்களின் ஷெர்லாக்காக எண்ணப்பட்டது, ரேயின் பெலுடா கதாபாத்திரம். பெரிதும் கிடைத்த வரவேற்பால் பெலுடா துப்பறியும் கதைகள் தொடர் தொடர்ந்தது.
முதலில் எழுதப்பட்டது டார்லிஜிங்கில் ஓர் அபாயம் துப்பறியும் கதை. அதன் பிறகு, 35 பெலுடா கதைகளை எழுதியுள்ளார். அனைத்து புத்தகங்களுமே நமக்கு தமிழில் கிடைக்கும்.
சத்யஜித்ரேவுடன் நேரடியாகப் பழகிய, வங்காள மொழியை நன்கறிந்த வீ.பா. கணேசன் மொத்தக் கதைகளையும் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். சத்யஜித்ரேயின் துப்பறியும் கதைகளில் சில, திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன.
ரேயின் மகன் சந்தீப்ரே சில பெலுடா கதைகளை திரைப்படமாக எடுத்துள்ளார். ஜொய் பாபா பெலுநாத், சோனார்கெல்லா போன்ற கதைகள், பிள்ளையாருக்கு பின்னே ஒரு மர்மம், தங்கக் கோட்டை என்று தமிழில் திரைப்படமாக நமக்கு யூ டுயூப் சேனலிலேயே கிடைக்கிறது.
டார்ஜிலிங்கில் ஒரு அபாயம் கதைதான் ரேயின் முதல் துப்பறியும் கதை. பெலுடாவும், தபேஷும் ஒன்றுவிட்ட அண்ணன் தம்பி. பெலுடா துப்பறிவதில் ஆர்வமும், திறனும் கொண்டவர். தபேஷ் பெலுடாவுடன் பயணித்து பெலுடா துப்பறிவதை ஆர்வமுடன் கவனித்து ஊக்கமளிப்பவர்.
தபேஷ் சொல்வது போலத்தான் கதைத் தொடர் அமைந்திருக்கும். டார்ஜிலிங்கிற்கு பொழுதுபோக்கு பயணம் செய்யும் பெலுடாவும், தபேஷும், தபேஷின் தந்தையும், அங்கு தங்கியிருக்கும் நாட்களில், ராஜன் பாபு என்ற நபருக்கு நடக்கும் சிறு அசௌகரியத்திற்கான காரணத்தை தன் துப்பறியும் திறனால் கண்டறிந்து, ராஜன் பாபுவின் துன்பத்தைப் போக்குகிறார்கள்.
ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கான காரணத்தையும், தன் கூர்மையான அறிவால் யோசித்துச் சொல்லும் பெலுடா நமக்குபிடித்த கதாநாயகன் ஆகிறார். டீக்கடைக்குச் சென்று திரும்பும் தபேஷை பார்த்து, "இன்று நீ டீக்கடையின் வலதுபக்கம்தானே அமர்ந்திருந்தாய்" என்று கேட்கிறார் பெலுடா.
"ஆமாம் எப்படிக் கண்டுபிடித்தாய்" என்று ஆச்சரியப்படுகிறார். "ஏனெனில் உன் கன்னத்தின் வலது பக்கம் கறுப்பாக உள்ளது. இடதுபக்க கன்னம் வெளுப்பாக உள்ளது. அந்த டீக்கடையின் வலது பக்கம் லேசாக வெயிலடிக்கும் . அதை வைத்து சொன்னேன்" என்கிறார் பெலுடா.
அண்ணனிடமிருந்து துப்பறியும் திறனை இவ்வாறு பேச்சுவாக்கில் கற்கும் தபேஷ், தனியாக சிலவற்றை ஆராய்ந்து பார்க்கவும் விரும்புகிறார்.
ராஜன்பாபுவுக்கு வரும் மிரட்டல் கடிதம் எந்த நோக்கத்தில் எழுதப்பட்டது, யார் எழுதியது, அவருக்கு நடக்கும் மிரட்டல் சம்பவம் என்ன காரணத்தால் நடைபெறுகிறது என்பதை பெலுடா கண்டறியும் திறனை, முழுமையாக அறிய புத்தகத்தை முழுவதுமாய் ஒரேமூச்சில் வாசிக்க முடிகிறது.
வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த இப்படி துப்பறியும் கதைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். அதுவும் பெலுடா வரிசை கதைகள் சிறுவர்களுக்காகவே சத்யஜித்ரேயால் எழுதப்பட்டது.
பெலுடா கதைகளை வாசிக்கத் தொடங்கினால், நம் வாழ்வில் சிறு கவனக்குறைவால் நமக்கு சிலநேரங்களில் நேர இருக்கும் அபாயத்தை தவிர்த்துக்கொள்ள முடியும். அத்தகைய நுண்ணறிவை பெலுடா வரிசை புத்தக வாசிப்பு நமக்கு தரும்.
கட்டுரையாளர்: ஆசிரியை,அரசு மேல்நிலைப் பள்ளி,திருப்புட்குழி, காஞ்சிபுரம்.
தொடர்புக்கு : udhayalakshmir@gmail.com
முந்தைய அத்தியாயம்: கதை கேளு கதை கேளு 4: அப்பாவின் அனுபவங்கள்