

ஐஏஎஸ் எனும் இந்திய ஆட்சி பணியில் அமர, பள்ளி நாட்களில் இருந்தே குறி வைத்தல் நல்லது. பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடங்கள் ஐஏஎஸ் பணியில் சேர மிகவும் உதவும். அது மட்டுமின்றி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்கிற இலக்கு மாணவர்களிடம் சமூக அக்கறையை வளர்க்கும்.
இதை உணர்ந்துதான் பள்ளியில் பயிலும் போதே ஐஏஎஸ் ஆக விரும்பி அதற்கு குறி வைத்திருக்கிறார் ஏ.மணிகண்டன். உத்தர பிரதேசத்தில் உள்ளது உலக அதிசயமான தாஜ்மகால். ஆக்ராவின் கூடுதல் ஆட்சியர் இவர்தான். ஆக்ராவின் தலைமை வளர்ச்சி அதிகாரி பொறுப்பு மணிகண்டனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் வடக்கு மேலூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் ஏ.மணிகண்டன். இவர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம், வள்ளி தம்பதியின் மூத்த மகன். இவருக்கு ஏ.சத்யா எனும் மணமான சகோதரியும் உள்ளார்.
மணிகண்டன் தன் கிராமத்தின் அருகில் நெய்வேலியில் உள்ள தொல்காப்பியனார் நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். தன் வீட்டில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு அன்றாடம் நடந்தே சென்று படித்துள்ளார். பிறகு 9 முதல் ப்ளஸ் 2 வரை நெய்வேலியின் என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிப்பை தொடர்ந்துள்ளார்.
மருந்தியல் படித்த முதல் ஐஏஎஸ்!
அப்போது 2004 -ஆம் ஆண்டில், கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப்சிங் பேடி ஐஏஎஸ் இவர் படித்துவந்த பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ளார். ககன்தீப்சிங் பேடியின் பள்ளி வருகை, ப்ளஸ் 2 மாணவர் மணிகண்டனுக்கு, தானும் ஒரு ஆட்சியராக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
தமிழ் வழிக்கல்வி பயின்ற மணிகண்டனுக்கு ஆங்கில அறிவு அதுவரை பெரிதாகக் கிடைக்கவில்லை. எனினும், கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. மருந்தியல் கல்லூரியில் ஆங்கிலவழி பட்டப்படிப்பை முடித்தார். இவர் தான் பி.பார்ம் எனும் இளநிலை மருந்தியல் பயின்று தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ் வென்ற முதல் மாணவர். இவருக்கு பின் இன்றுவரை அந்த பட்டம் பெற்றவர்கள் எவரும் இப்பணிக்கு வரவில்லை.
ஒரே நேரம் 2 பட்டம்!
தான் யூபிஎஸ்சி எனும் குடிமைப்பணி தேர்வில் வென்றது குறித்து மணிகண்டன் ஐஏஎஸ் கூறுகையில், “ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைப் படிப்பது என்பது அப்போது பலரும் அறியாதது. நான்பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்ற பின் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விப் பிரிவில் பி.எஸ்சி. உளவியலுக்கு விண்ணப்பித்து இடமும் கிடைத்தது. சனி, ஞாயிறுகளில் கோவையில் தொலைதூரப் பிரிவில் நேரடி வகுப்புகளையும் இதர நாட்களில் எனது கல்லூரியிலும் கல்வியைத் தொடர்ந்தேன்.
இதன் பலனாக 2009- இல் எனக்கு ஒரே நேரத்தில் இளநிலையில் இரண்டு பட்டங்கள் கிடைத்தன. மனப்பாடம் செய்வதை நிறுத்தி, புரிந்துகொண்டு படிக்கத் தொடங்கினேன். பி.பார்மில் தங்கப்பதக்கம், பி.எஸ்சி. உளவியலில் முதல் வகுப்பும் பெற்றேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பார்ம் முடித்தேன். இதன் இடையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலின் யூபிஎஸ்சிக்கானப் பயிற்சி நிலையத்தில் இணைந்தேன்” என்றார் மணிகண்டன்.
இவ்வாறு கல்லூரி படிப்பை முடித்து அடுத்த கட்டத்துக்குத் தயாரான மணிகண்டனுக்கு ‘இந்து குழும’ நாளேடுகளில் கட்டுரைகளை எழுதும் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் நட்பு கிடைத்துள்ளது. இவர்,மணிகண்டனுக்கு தனது நண்பரும் உயர்அதிகாரியுமான விவேகானந்தன் ஐஆர்எஸ்என்பவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இவர்தான் தனக்கு குருவாக இருந்து வழிநடத்தி யூபிஎஸ்சி வெல்ல பேருதவி புரிந்ததாக மணிகண்டன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
கைகொடுத்தது தமிழ்!
மேற்கொண்டு மணிகண்டன் கூறும்போது, “எம்.பார்ம் பயிலும் போது யூபிஎஸ்சியில் இரண்டு முறை எழுதியும் முதல்நிலை தேர்வைக் கூட வெல்ல முடியவில்லை.
2012-இல் டிஎன்பிஎஸ்சி எழுதி பட்டமேற்படிப்பின் வகுப்புகளை முடித்து ஆகஸ்ட் 2012-இல் மருந்து ஆய்வாளர் பணியில் சேர்ந்தேன். 2014-இல் யூபிஎஸ்சி பணி பிரிவுகளில் ஒன்றான இந்திய ரயில் கணக்கு பணி (ஐஆர்ஏஎஸ்) கிடைத்தது. தொடர்ந்து நான் பள்ளியில் வைத்த குறியை கைவிடாமல் முயன்று 2016-இல் ஐஏஎஸ் வென்றேன்” என்றார் உற்சாகமாக.
ஐஏஎஸ் வென்று உத்தரப்பிரதேச மாநிலப் பிரிவை பெற்றவருக்கு முதல் பயிற்சி பணி சோன்பத்ராவில் கிடைத்தது. அடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் எம்.பி.தொகுதியான வாரணாசியில் உதவி ஆட்சியர் ஆக்கப்பட்டார். தற்போது ஆக்ராவின் கூடுதல் ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார் மணிகண்டன்.
2014-இல் யூபிஎஸ்சியை ஆங்கிலத்தில் எழுதி எழுந்த சில சிக்கல்களால், ஐஏஎஸ் கைநழுவியது. பிறகு யூபிஎஸ்சி முதன்மை தேர்வை தமிழில் எழுதி 2016 -இல் ஐஏஎஸ் பெற்ற மணிகண்டன் தமிழ் வழியில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரி.
கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in
முந்தைய அத்தியாயம்: நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 1: ஐஏஎஸ் ஆக இதெல்லாம் தெரியணும்!