நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 1: ஐஏஎஸ் ஆக இதெல்லாம் தெரியணும்!

நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 1: ஐஏஎஸ் ஆக இதெல்லாம் தெரியணும்!
Updated on
2 min read

நாட்டின் உயரிய அரசு பதவிகளில் ஒன்று இந்திய ஆட்சிப் பணி என்றழைக்கப்படும் ஐஏஎஸ். அது மட்டுமல்ல மத்திய அரசின் இந்தியக் குடிமைப் பணிகளில் மொத்தம் 22 வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றாகவும் முதன்மையாகவும் கருதப்படுவதே ஐஏஎஸ்.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களால்தான் இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் சேர முடியும். இதற்காக மத்திய அரசின் யூபிஎஸ்சி வருடந்தோறும் மூன்று வகை தேர்வுகளை நடத்துகிறது. இவை, பிரிலிம்ஸ் எனும் முதல்நிலை, மெயின்ஸ் எனும் முதன்மை நிலை மற்றும் நேர்முகத்தேர்வு ஆகும்.

யூபிஎஸ்சி தேர்வில் பெறும் ரேங்க் எனும் தரவரிசையைப் பொறுத்து குடிமைப்பணிகளில் ஒன்று கிடைக்கும். இவற்றில் பொது அதிகாரம் உள்ளிட்ட சில துறைகளில் ஐஏஎஸ் பணிக்கு மட்டும் பல சிறப்புகள் உண்டு. நம் நாட்டையும் அதன் மாநிலங்களையும் ஆளும் அரசுகளின் பின்புலமே, இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் எனலாம்.

அந்த அளவுக்கு தம் அனுபவத்திறனால் ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்குச் சேவை செய்கின்றனர். இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி பொதுமக்களுக்கு புதிய சட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் பெரும்பாலும் ஐஏஎஸ் அதிகாரிகளே வடிவமைக்கின்றனர்.

இதற்கு, மாவட்ட ஆட்சியர்களாக ஐஏஎஸ் அமர்த்தப்படுவது காரணம். ஒரு கிராமத்தின் கடைக்கோடி நபர்
வரை நேரில் சென்று குறைகளைக் கேட்டு ஆட்சியரால் மட்டுமே உதவ முடியும். இதனால், பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சனைகளையும் அறிந்து தீர்க்கும் வல்லமையை ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்டுள்ளனர்.

ஐஏஎஸ் அடுத்தடுத்து முக்கியத்துவம் பெறுவது, இந்தியக் காவல் பணி எனும் ஐபிஎஸ். இதற்கு ஐஏஎஸ் அதிகாரிகளைப் போல் ஐபிஎஸ் அதிகாரிகளும் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்றனர்.

இவர்களது பணித்திறன் நம் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும். எனவே, ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிய இந்த இரண்டு அதிகாரிகள் மட்டுமே குறிப்பிட்ட மாநிலங்களில் பணி அமர்த்தப்படுகிறார்கள். அங்கு பேசும் மொழியும் கற்றுத் தரப்படுகிறது.

இந்த இரண்டைபோல் சிறந்ததாகக் கருதப்படும் மற்றொன்று, இந்திய அயலகப் பணி (Indian Foreign Service) எனும் ஐஎப்எஸ். இந்திய வனப் பணி (Indian Forest Service) என்பதும் ஐஎப்எஸ் என்றே குறிப்பிடப்படுகிறது. வனப்பணிக்கு மட்டும் முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் தனியாக நடத்தப்படுகின்றன. மத்திய வருவாய்த்துறையில் ஐஆர்எஸ்(கஸ்டம்ஸ்), ஐஆர்எஸ் (ஐடி) என இரண்டு பணிகள் உள்ளன.

யூபிஎஸ்சி வென்று குடிமைப்பணியில் உள்ள எல்லா பிரிவு அதிகாரிகளுக்கும் பிரதமர், முதலமைச்சர், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நிர்வாக ஆலோசனை வழங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தேர்தலில் வென்று பதவி வகிக்கும் ஆட்சியாளர்களின் யோசனைகளை அமலாக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது.

நாளேடு வாசிப்பு அவசியம்

யூபிஎஸ்சி வெற்றியாளர்களுக்குத் தாம் பெற்ற பணிக்கு ஏற்ற வகையில், பயிற்சி நிறுவனங்களில் உரிய பயிற்சிகளும், திறனும் அளிக்கப்படுகிறது. இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன.

இந்த 22 வகை உயரிய பணியைப் பெற பள்ளியில் படிக்கும் நாட்களிலிருந்தே மாணவர்கள் குறி வைக்கலாம். இச்செயல், ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை சமூக அக்கறையுடன் வளர்த்து எடுக்கும். பள்ளிகளின் அடிப்படைக் கல்வியும் யூபிஎஸ்சியில் வெல்ல மிகவும் உதவியாக இருக்கும்.

பெற்றோர், தம் குழந்தைகளை இளம் வயது முதலே மருத்துவராகவும், பொறியாளராகவும் வர வேண்டும் எனச் சொல்லி வளர்ப்பதுண்டு. இதேபோல், யூபிஎஸ்சியில் வெல்லலாம் எனக்கூறி குழந்தைகளை வளர்க்க முடியும். இதற்கு மாணவப் பருவம்முதல் அவர்களுக்கு சில பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவது அவசியம்.

இதில் பள்ளிப் பருவம் முதல் நாளேடுகளையும், பத்திரிகைகளையும் வாசிப்பை வழக்கப்படுத்திக் கொள்வது முக்கியம். இதனால், சமூகஅறிவு வளர்ந்து, அவர்களுக்கு யூபிஎஸ்சியில் வெற்றி எளிதாகும். இது பெரும்பாலான வெற்றியாளர்களின் பொதுவான கருத்தாகவும் உள்ளது.

தோல்வி சகஜம்!

இதைவிட முக்கியமாகத் தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் மாணவர்களுக்குத் தேவைப்படுகிறது. தமக்கு விளையாட்டு மற்றும் கலை அறிவுப் போட்டிகளில் திறன் இல்லை என்றாலும் தோல்விக்கு அஞ்சி விலகியிருக்கக் கூடாது. மாறாக அவற்றில் கலந்து கொண்டால் தோல்வியை ஏற்கும் மனப்பான்மை வளரும்.

யூபிஎஸ்சியின் முதல்நிலை தேர்வுக்குஆங்கில அறிவு கட்டாயமாகிறது. ஆங்கிலத்தின் அடிப்படையில்தான் யூபிஎஸ்சியின் முதல்நிலை தேர்வை எதிர்கொள்ள முடியும்.

ஏனெனில், கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. முதல்நிலையை வென்றபின் இதர இரண்டு நிலைகளிலும் தம் தாய்மொழியான தமிழில் எழுதவும், நேர்முகத் தேர்வை சந்திக்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதற்குமுன் ‘இந்து தமிழ்’ நாளேட்டின் இணைப்பிதழாக வெளியான ‘வெற்றிக்கொடி’யில், ‘யூபிஎஸ்சி வென்றவர்கள்’ எனும் தலைப்பில் கடந்த மே 2016 இல் ஒரு தொடர் வெளியானது.

இதைப் படித்தவர்களில் சிலர், வெற்றியாளர்கள் பட்டியலில் இணைந்தனர். மீண்டும் வெளியாகும் இத்தொடரிலும் யூபிஎஸ்சி வெற்றியாளர்களின் உழைப்பும், அனுபவமும் பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு:
shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in