

சோமு ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன். ஆனால், சோம்பேறி. யாராவது ஊக்கமூட்டும் வகையில் மேடையில் பேசினால் மிகுந்த உற்சாகம் கொள்வான். அதெல்லாம் ஓரிரு நாட்கள்தான். காற்று போன பலூன் போல உற்சாகம் வடிந்து பழையபடி சோம்பேறித்தனம் வந்துவிடும். காலை எட்டு மணிக்குத்தான் படுக்கையை விட்டு எழுவான். அவசரமாகக் கிளம்பி ஓடினாலும் பள்ளிக்குத் தாமதமாகிவிடும்.
தினமும் வீட்டுப்பாடம் முடிக்காமல் தாமதமாக வருவதால் ஒருநாள் வகுப்பாசிரியர், “தினமும் தாமதமாக வர்றியே,வெட்கமாயில்லை, சரியான சோம்பேறி" என்று திட்டினார். அன்றுமுதல் நண்பர்கள் அவனை ‘சோம்பேறி சோமு ‘என அழைக்கத் தொடங்கினர். சோமுவுக்கு தன்நிலையை எண்ணி அவமானமாகவும், தன்னை கிண்டல் செய்பவர்கள் மீது கோபமாகவும் இருந்தது.
அவனது சித்தப்பா ஒரு மேஜிக் நிபுணர். அவரிடம் சென்று தனது பரிதாபமான நிலையைக் கூறி தன்னைக் கிண்டல் செய்பவர்களை எல்லாம் குரங்காக மாற்றக்கூடிய மந்திரத்தை தனக்கு கற்றுக் கொடுக்கும்படி வேண்டினான். பொறுமையாக அவன் சொல்வதைக் கேட்ட அவரும், “உனக்கு அந்த மந்திரத்தை கற்றுத் தருகிறேன். ஆனால், அதை அவ்வளவு சுலபமாக ஒரே நாளில் கற்றுக் கொள்ள முடியாது. அதற்கு சில விதிமுறைகளை நீ கடைபிடிக்கனும்” என்றார்.
மந்திரத்தை கற்றுக் கொள்ள தான் எதையும் செய்யத் தயார் என்றான் சோமு. “சரி 21 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு இங்கே வா, நான் சில பயிற்சிகளை உனக்கு அளிப்பேன், அதை நீ தவறாமல் செய்தால் 22 ஆவது நாள் மந்திரத்தை கற்று தருவேன்” என்றார். ஒரு நிமிடம் மலைத்தவன் சரி 21 நாட்கள்தானே என்று ஓப்புக் கொண்டான்.
‘ஸ்மார்ட்’ ஆவது எப்படி?
மந்திரத்தை கற்கும் ஆர்வ மிகுதியால் அம்மா அப்பாவிடம் சொல்லி காலை எழுப்பிவிடச் சொன்னான். போதாக்குறைக்கு அலாரம் வேறு வைத்துவிட்டு படுத்தான்.
தினமும் சரியாக காலை 4 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு சித்தப்பா வீட்டிற்கு சென்று அவர் கற்றுக் கொடுக்கும் உடற்பயிற்சிகளையும், தியான முறைகளையும் ஒரு மணி நேரம் செய்து விட்டு வீடு திரும்பினான். 21 நாட்கள் முடிந்து 22-வது நாள், “நல்லது சோமு மந்திரத்தை கற்று கொள்ள உன் உடலும் மனமும் தயாராகிவிட்டது. வா உனக்கு மந்திரம் கற்று தருகிறேன்' என்றார்.
சோமுவோ,“வேண்டாம் சித்தப்பா, இனி அந்த மந்திரம் எனக்குத் தேவைப்படாது. தினமும் காலை 4 மணிக்கு எழுவது முதல் ஒரு வாரம் சிரமமாக இருந்தது. அலாரம் அடித்தாலும் அம்மா, அப்பா எழுப்பினாலும் சோம்பேறித்தனம் எழவிடாமல் செய்தது. ஆனால், என்னை கிண்டல் செய்தவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்து கிளம்ப செய்தது.
அதிகாலை குளியலும், நீங்கள் கற்றுக் கொடுத்த உடற்பயிற்சிகளும் என் உடலை சுறுசுறுப்பாக்கியது. தியானமோ என் நினைவாற்றல், கவனம், சிந்திக்கும் ஆற்றலை அதிகரித்தது.
பயிற்சி முடித்து வீட்டுக்குச் சென்றாலும் 2 மணி நேரம் அதிகப்படியாக இருந்ததால் வீட்டுப்பாடங்களை எழுதவும் படிக்கவும் நேரம் கிடைத்தது. அம்மாவுக்கும் தேவையான சிறுசிறு உதவிகள் செய்துவிட்டு பள்ளிக்கு நேரத்தோடு போக முடிந்தது. முன்பு வகுப்பில் தூங்கி வழியும் நான் இப்போது சுறுசுறுப்பாக நன்றாகப் பாடங்களை கவனித்து பதில் செல்வதாலும், நல்ல மதிப்பெண் எடுப்பதாலும் எல்லா ஆசிரியர்களும் பாராட்டுகிறார்கள்.
நண்பர்களும் இப்போது ‘சோம்பேறி சோமு’ என்று அழைக்காமல் ‘ஸ்மார்ட் சோமு’ என்று அழைக்கிறார்கள். என் பழக்க வழக்கங்களை நான் மாற்றிக் கொண்ட பின் என்னை சுற்றியுள்ள மனிதர்களும் மாறிவிட்டார்கள். இனிமேல் எனக்கு எதற்கு அந்த மந்திரம்” என்றான். தன்னுடைய தந்திரம் பலித்ததை எண்ணி மகிழ்ந்த சித்தப்பா சோமுவை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
நல்ல நேரம் வர காத்திருக்காதீர்
அன்பு மாணவர்களே! வெற்றியாளர்கள் என உலகம் கொண்டாடுபவர்கள் யாவரும் நல்ல நேரம் வரட்டும் என காத்திராமல் விடியுமுன் எழுந்து சூரியனை எழுப்பியவர்களே. எந்த ஒரு செயலையும் நம் பழக்கமாக மாற்ற 21 நாட்களுக்கு தொடர்ந்து செய்வது அவசியம். ஒவ்வொருவரின் உடலிலும் உயிரியல் கடிகாரம் என்று ஒன்று உண்டு.
இரவு உறங்கச் செல்லும் முன் காலை 4 மணிக்கு அலாரம் அடிக்கும் முன் எழுந்து விட வேண்டும் என உங்கள் மனதுக்கு பத்து தடவை சொல்லிப் பாருங்கள். சுற்றுலா செல்ல 5 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டுமென்றால் காலை 4 மணிக்கு முன்னதாகவே யாரும் எழுப்பாமலே எழுந்து விடுவீர்கள் அல்லவா? அது உங்கள் உயிரியல் கடிகாரத்தின் வேலைதான். அதை முடுக்கி விட்டு தினமும் செயல்பட செய்து விட்டால் அதிகாலையில் அதிகப்படியாகக் கிடைக்கும் நேரம் உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றிவிடும்.
கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், சென்னை தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com