

மனம் ஒரு குரங்கு என்பார்கள். ஒரு இடத்தில் நில்லாமல் தாவிக் கொண்டிருக்கும் மனதை அடக்கப் பழகிவிட்டால் நாம் நினைத்ததை நடத்தி முடிக்க முடியும்.
கடந்த வாரம் சொன்னதுபோல, நல்ல காற்றோட்டமான, இயற்கை வெளிச்சம்படும் இடத்தில் இயல்பாக உட்கார்ந்து கொள்ளவும். நிதானமாக ஒன்பதில் இருந்து 15 முறை நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும்.
முதுகுத் தண்டை நேராக்கி சாதாரணமாக சம்மணமிட்டு, கைகளை தியான முத்திரையில் வைத்து உட்கார வேண்டும். தியான முத்திரை என்பது ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு, மற்ற விரல்கள் நன்றாக நீட்டிய நிலையில் இருப்பதாகும்.
இப்போது கண்களை மூடிக்கொண்டு பொறுமையாக மூச்சை இழுத்து விட வேண்டும்.
படிக்கும் பருவத்தில் இருக்கும் உங்களுக்கு கவனிக்கும் திறனும், கவனித்தவற்றை மனதில் பதிய வைக்கும் நினைவாற்றலும் அத்தியாவசியம். ஏனென்றால் இந்த பருவம், உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான பருவம். இவை இரண்டையும் ஏற்படுத்தக்கூடிய தாடாசனம் அறிந்துகொள்வோம் வாருங்கள்.
தடுமாற்றத்தை எளிதில் கடக்கலாம்!
முதலில் கால்களை நேராக சேர்த்து வைத்து நிற்க வேண்டும். கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு, தாடையை சற்றே கீழ் நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். முதுகை நிமிர்த்தி நிற்க வேண்டும். பின்னர் மூச்சை உள்ளிழுத்து கைகளை மேலே கொண்டு சென்று, உள்ளங்கைகளை சேர்த்து வைக்க வேண்டும்.
மெதுவாக மூச்சை விட்டுக் கொண்டேகைகளை கீழே இறக்க வேண்டும். எடுத்தவுடன் எல்லோருக்கும் ஆரம்பத்திலேயே மூச்சு பயிற்சி எளிதாக இருக்காது. அப்படி கடினமாக இருக்கும் பட்சத்தில், கைகளை கீழே இறக்கும் போது உங்களுக்கு பிடித்த பெயரை உச்சரித்தபடி கைகளை கீழே இறக்கலாம்.
வாயைத் திறந்து இப்படி ஏதாவது ஒலியை எழுப்பும் போது நம்மையறியாமல் மூச்சை வெளியிட உதவும். இந்த ஆரம்ப நிலையை மூன்று முறை செய்ய வேண்டும்.
அடுத்து மூச்சை இழுத்து கைகளை உயர்த்தும் போது, குதிகாலோடு முடிந்த வரையில் உடலையும் மேலே உயர்த்தி 5 நிமிடம் இருந்துவிட்டு, பின் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுபோன்று மூன்று முறை செய்ய வேண்டும்.
தொடர்ந்து இந்த ஆசனத்தை செய்து வந்தால் கால்கள் வலுப்பெறுவதோடு, நம்முடைய மனதையும் ஒருமுகப்படுத்த முடியும். இந்த வயதில் ஏற்படக்கூடிய மன தடுமாற்றத்தை எளிதில் கடந்து விடலாம். இந்தப் பயிற்சியை ஒரே கவனத்துடன் தொடர்ந்து செய்து வரும் குழந்தைகளுக்குக் கவனக் குவிப்புத் திறன் வளரும். எனவே படிக்கும் மாணவர்களுக்கு உகந்த ஆசனம் தாடாசனம். போதிய உயரம் இல்லையே என்று வருத்தப்படும் குழந்தைகள் சிறு வயதில் இருந்தே இந்த ஆசனத்தை செய்துவந்தால், நிச்சயமாக நல்ல உடல் வளர்ச்சியைப் பெறலாம்.(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்