

பரபரப்பான இந்த இயந்திரத்தனமான வாழ்வியல் முறையில், வலிமையான உடலும் உறுதியான மனமும் மட்டுமே மனித வாழ்க்கையை முழுமையாக்குகிறது.
உடலோ - உள்ளமோ, இந்த இரண்டில், எது சோர்வு அடைந்தாலும், அது நம் வாழ்க்கையை முடக்கிவிடும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இது நம் முன்னோர் வாக்கு. நோயற்ற வாழ்க்கை என்பது இன்றைய சூழலில் எந்த வயதினருக்கும் ஒரு பெரும் சவாலாகவே மாறி வருகிறது. சிறு பிள்ளைகளில் இருந்து வயது முதிர்ந்தோர் வரை பலவிதமான நோய்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
இதைத் தவிர்க்க மாணவப் பருவத்திலேயே நோயற்று வாழும் வழியை யோகக்கலை மூலம் நாம் அறிந்து கொள்வோம்.
நம்முடைய முன்னோர்கள் நமக்கு தந்த மாபெரும் பொக்கிஷம் யோகா. யோக சாஸ்திரத்தை உருவாக்கிய பதஞ்சலி முனிவர்,“யோகம் செய்வதற்கும் யோகம் வேண்டும்” என்றார்.
யோகப்பயிற்சி செய்யும் போது சரியான முறையில் மூச்சை இழுத்து விடும்போதுதான் பலன் அதிகம்.யோகாவைப் பற்றிய உங்களுடைய பல சந்தேகங்களுக்கு விடையளிப்பதே இந்தத் தொடரின் நோக்கம்.
அட! இதைத்தானே செய்தோம்!
ஓடும் ஓட்டத்தில், நாகரிகம் என்கிற பெயரில் நம்முடைய பாரம்பரியத்தை மறந்து வாழ்வியலில் நாம் செய்துக் கொண்ட சமரசம்தான் இன்று நமக்கே வினையாகிப் போனது.
இன்று காசு கொடுத்து ஆரோக்கியத்திற்கு என்று எதையெல்லாம் நாம் செய்துகொண்டிருக்கிறோமோ அதே விஷயங்களைதான் நம்முடைய முந்தைய தலைமுறை மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வியல் முறையாக வகுத்து வைத்திருந்தனர். தங்களுடைய ஆரோக்கியத்தின் தடமாக பகுத்துக் கொண்டனர்.
பணமும் நேரமும் வீணாகியப் பின்புதான், “அட இத தானே நாம ஆரம்ப நாள்ல இருந்து செஞ்சிட்டு வந்தோம்” என்று கண் கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரமாய், கசப்பான உண்மை நமக்கு உரைக்கும்.
இன்றும் நம் வீட்டில் இருக்கும் நமது தாத்தா பாட்டிகள், கண்ணாடி அணியாமல் புத்தகம் படிப்பதை பார்க்க முடியும். அன்று இயற்கையோடு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும், எடுத்துக் கொண்ட கலப்படம் இல்லாத உணவும் தான் இதற்கு காரணம்.
ஆரோக்கிய குறைபாடுகள் எதனால்?
நம் தந்தையும் தாயும், அவர்கள் தந்தையும் தாயும் பின்பற்றி வந்த வாழ்வியல் முறைகளை நாம் பின்பற்ற தவறியதே இதற்கு காரணம். இன்று டிரெண்டிங்கில் இருக்கும் சிறுதானிய வகைகள் அனைத்தும் நம் பாரம்பரிய உணவு வகைகள்தான். ஏதோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிய உணவு வகை அல்ல. அவை நம்முடைய பாட்டனும், முப்பாட்டனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவை.
ஒரு நாளின் 24 மணி நேரத்தில்நமக்கே நமக்காக நம் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் நேரம் விலைமதிப்பில்லாதது. அது நம்முடைய எதிர்கால நலனுக்காக நாம் செய்யப் போகும்ஆரோக்கிய முதலீடு. செய்ய வேண்டும் என்று நினைத்தாலே போதும்.
இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினை நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் ஞாபக மறதி பிரச்சினை.
படித்தது மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா ?
எத்தனை படித்தாலும் மனதில் பதியவே இல்லை என்று ஒரு சாராரும். படித்தேன்…புத்தகத்தை மூடி வைத்து விட்டு மீண்டும் திறந்தால், மறந்து போனது போல் இருக்கிறது என்று ஒரு சாராரும் சொல்லப் பார்த்திருப்போம். இக்கால குழந்தைகள் கால நேரம் இன்றி ஓடிக் கொண்டிருக்க அவர்களை உடல் ஆரோக்கியத்துடனும், மன வலிமையுடனும் வைத்திருக்க யோக பயிற்சியால் நிச்சயம் முடியும் .
யோகப் பயிற்சியானது மனதையும் உடலையும் செம்மையாக்கும். நம் குழந்தைகள், அதிலும் பதின்ம வயது குழந்தைகள் தேக பலத்துடன்...புத்தி பலத்துடன் வளரஇனியாவது யோகக்கலையை பற்றி அவர்களுக்கும் தெரிந்து கொள்ள உதவுவோம்.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்