சுலபத்தவணையில் சிங்காசனம்-14: அகழ்வாராய்ச்சி செய்ய ஆசையா?

சுலபத்தவணையில் சிங்காசனம்-14: அகழ்வாராய்ச்சி செய்ய ஆசையா?
Updated on
2 min read

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

கீழடி அகழ்வாராய்ச்சிகளைப் பற்றி ஊடகங்களில் அறிந்திருப்பீர்கள். ஏறக்குறைய 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது நமது தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை எடுத்துச் சொல்கிறது.

உங்களுக்கு இப்படி அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வரலாற்றின் பழைய பக்கங்களுக்கு புது வெளிச்சம் பாய்ச்ச ஆசையா? எப்படி அகழ்வாராய்ச்சியாளர் ஆவது? என்ன படிக்க வேண்டும்?

தொல்லியல் ஆராய்ச்சிப் பிரிவுகள்

வரலாற்றை ஆராயும் தொல்லியல் ஆராய்ச்சியில் பல பிரிவுகள் உண்டு. அகழ்வாராய்ச்சி (Excavation), வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பராமரித்தல், கல்வெட்டு ஆராய்ச்சி (Epigraphical Study), கடலடி தொல்லியல் ஆய்வு, அருங்காட்சியகங்கள் அமைப்பது-பராமரிப்பது உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன.

என்ன படிக்க வேண்டும்?

கலை, அறிவியல், பொறியியல் என பல துறை படிப்புகள் தொல்லியல் துறையில் பயன்படுகின்றன. தமிழ், சமஸ்கிருதம், பாலி, பாரசீகம், அரபு உள்ளிட்ட மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் தொல்லியல் ஆய்வுகளில் பங்களிக்கலாம்.

வரலாறு, இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகிய துறைகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களும், வேதியியல், பூலோகவியல் உள்ளிட்ட அறிவியல் துறைகளில் பட்டமேற்படிப்பு படித்தவர்களும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆகலாம்.

தொல்லியலில் தொழில்நுட்பங்கள்

கட்டுமானப் பொறியியல், கட்டிடக்கலை உள்ளிட்ட பொறியியல் பட்டதாரிகளும் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடலாம். ஆளில்லா விமானங்கள், தரை ஊடுருவும் ரடார் கருவிகள், லேசர் வருடி (Scanner), காந்த அளவி (Magnetometer) உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் தொல்லியல் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை மட்டுமன்றி செயற்கைக்கோள் படங்கள், ஆளில்லா கடலாய்வு வாகனங்கள்,முப்பரிமாண அச்சு, உருவ செயலாக்கம் (Image processing), கணினி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தொடர்பான படிப்புகளை படித்தவர்கள் தொல்லியல் ஆய்வுக்கு மிகவும் அவசியம்.

சிறப்பு தொல்லியல் படிப்புகள்

தொல்லியல் நிறுவனத்தின் (Institute of Archaeology) இரண்டாண்டு தொல்லியல் பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Archaeology) குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசத்தின் நோய்டா நகரில் உள்ள இந்த நிறுவனம் இந்திய தொல்லியல் மதிப்பாய்வு (Archaeological Survey of India-ASI) அமைப்பைச் சார்ந்தது. சென்னையில் உள்ளதமிழக தொல்லியல் துறையின், கல்வெட்டியல்நிறுவனம் (Institute of Epigraphy) ஓராண்டு கல்வெட்டியல்-தொல்லியல் பட்டயப்படிப்பை வழங்குகிறது.

முதுகலைப் பட்டதாரிகள் இந்த பட்டயப்படிப்புகளில் சேரலாம். கல்வி உதவித்தொகையும் உண்டு.

வேலைவாய்ப்புகள்

இந்திய தொல்லியல் மதிப்பாய்வு (ASI) அமைப்பு தேசிய அளவில் தொல்லியல் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இந்த அமைப்பில் பணியில் சேர மத்திய பொதுப்பணிகள் ஆணையமும் (UPSC), பணியாளர் தேர்வாணையமும் (SSC) தேர்வுகளை நடத்துகின்றன.

தமிழக அரசின் தொல்லியல் துறையில் வேலைவாய்ப்புகள் உண்டு. இதற்கு தமிழ்நாடு பொதுப்பணிகள் ஆணையம் (TNPSC) தேர்வுகளை நடத்துகிறது. இவை தவிர கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆய்வுப்பணிகளில் ஈடுபடலாம். தனியார் அருங்காட்சியகங்களில் பணியில் சேரலாம். இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்திலும் (Indian Council of Historical Research) தொல்லியல் தொடர்பான ஆராய்ச்சி வாய்ப்புகள் உள்ளன.

வரலாற்றை படிப்போம். வரலாற்றை படைப்போம்!

(தொடரும்)
கட்டுரையாளர், ‘அடுத்த கலாம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in