

அபுதாபியின் நியூயார்க் பல்கலையில் பணிபுரியும் மேரி அல்-ஹண்டாவி ஒருநாள் காரில் சென்றபோது வழியில் சிவப்புக்கோடைச்சவுக்கு செடி கண்ணில் பட்டது. அதில் வெள்ளை வெள்ளையாக முத்துபோல உப்பு படிகங்கள். வியப்பாக உப்பு திரளை சுற்றி நீர் திவலைகள் திரண்டு இருந்தன. ஏதோ புதிய கண்டுபிடிப்பை நோக்கி செல்கிறோம் என்றது மேரியின் மனது.
மண் பானையில் சிறுசிறு துளைகள் இருக்கும். அந்த துளைகள் வழியே நீர் கசிந்து பானையின் வெப்பத்தை உறிஞ்சி அவை ஆவியாகிவிடும். பானை நீர் குளிர்ந்து விடும். அதுபோல நமது தோல் வியர்வையை சுரந்து ஆவியாகும்போது உடல் குளிர்கிறது.
ஆனால், சிவப்புச்சிறுசவுக்கு போன்ற உவர்வளரி தாவரங்கள் உப்பு கூடுதலாக இருக்கும் பாலை பகுதியில் வாழ்பவை. இந்த தாவரத்தின் வெளியே சிறு திரளாக முத்து போல உப்பு வெளிப்படும். செடியின் மேற்பரப்பில் உள்ள நீர் பசை ஆவியாகி, வெறும் உப்பு மட்டும் படிக வடிவில் படிந்து விடும். வீசும் காற்றில் இந்த உப்பு ஓரளவு அடித்து செல்லப்படும். இப்படி உப்பை வியர்வையைபோல இந்த செடி வெளியிடுவது குளிர்ச்சி அடைவதற்கல்ல. வேறெதற்கு?
கில்லாடி செடி!
முத்து போல உடல் முழுவதும் நீர் திவலைகளை கொண்ட சிவப்புச்சிறுசவுக்கு தாவரத்தை சுற்றி வீடியோ கேமரா பொருத்தி மேரி ஆய்வு செய்தார். காலையில் சுரக்கும் உப்பு கரைசல் வெய்யிலில் உலர்ந்து உப்பு படிகமாகியது. ஆனால் இரவில் எப்படியோ காற்றிலிருந்து ஈரப்பசையைக் கவர்ந்து நீர் துளி தோன்றியதைக் கண்டார்.
மேலாய்வு செய்ய தாவரத்தை தனது ஆய்வகத்தில் வளர்த்து சோதனை செய்தார். 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியபோது இரண்டு மணி நேரத்தில் 15 மில்லிகிராம் நீரை காற்றிலிருந்து கவர்ந்து இழுத்து உப்பு படிகம் பூத்தது சிவப்புச்சிறுசவுக்கு. ஆனால் உப்பு படிகத்தைக் கழுவி அகற்றிய கிளைகளில் வெறும் பத்தில் ஒரு பங்கு நீரை மட்டுமே காற்றிலிருந்து கவர முடிந்தது.
திறந்த நிலையில் இருந்தால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உப்பு உறிஞ்சிவிடும். ஆனால் பாலை வெயிலில் குறைந்த ஈரப்பதம் உள்ள நிலையில் உலர்ந்த உப்பு படிகத்தில் நீர் திவலைகளைக் கண்டார் மேரி. இதிலிருந்து ஏதோ புதிய வேதியியல் மாற்றம் நிகழ்வது தெரிந்தது.
தாவரம் உமிழும் உப்பின் வேதித்தன்மையை பரிசோதனை செய்தார்.
பத்துக்கும் மேற்பட்ட உப்புகளின் கலவை அதிலிருந்தது. சமையலுக்குப் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு பெருமளவில் இருந்தது. ஜிப்சம் உப்பும் செறிவாக இருந்து. அடுத்தது, அந்த மர்ம வேதிப்பொருள் அகப்பட்டது. அதுதான் லித்தியம் சல்பேட் உப்பு. கூடுதல் அளவு காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்கும் திறனை லித்தியம் சல்பேட் உப்பு கொண்டிருக்கிறது எனக்கண்டார்.
காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ள நிலையில் அதன் நீரை கவர்வது கடினம். ஆனால், வியப்பாக காற்றில் ஈரப்பதம் வெறும் ஐம்பது சதவிகிதம் இருக்கும்போது கூட, கஞ்சனிடம் காசு கறப்பது போல, லித்தியம் சல்பேட் காற்றிலிருந்து நீரை கவர்ந்தது.
கல்லில் நார் உரித்தாற்போல பாலைவன தாவரங்கள் வறண்ட சூழலிலும் காற்றிலிருந்து கடைசி சொட்டு நீரையும் கவர்ந்து இழுக்கின்றன என்ற கண்டுபிடிப்பு தாவரங்களின் பரிணாம வளர்ச்சியைப் புலப்படுத்துகிறது. மேலும் வறண்ட நிலையிலும் நீரை காற்றிலிருந்து பிரித்து எடுக்கும் புது தொழில்நுட்ப சாத்தியங்களையும் சுட்டுகிறது.
கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி,
புது டெல்லி.
தொடர்புக்கு: tvv123@gmail.com