தயங்காமல் கேளுங்கள் - 59: காயம் பட்ட இடத்தில் இயற்கையின், ‘பேச் ஒர்க்’ தழும்பு

தயங்காமல் கேளுங்கள் - 59: காயம் பட்ட இடத்தில் இயற்கையின், ‘பேச் ஒர்க்’ தழும்பு
Updated on
1 min read

காயம் ஏற்பட்டால் தழும்பு வருவதேன் என்பது குறித்து கடந்த வாரம் பேசத் தொடங்கினோம். தழும்பு மறைய கொலாஜன் எனும் புரதம் எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்கினோம்.

பொதுவாக, நம் உடலில் ஒரு ஆழமான வெட்டுக்காயம் ஏற்படும்போது, தோலின் மூன்று அடுக்குகளும் வெட்டுப்படுகின்றன. அந்தக் காயம் இரத்த நாளங்களைப் பாதிக்கும்போது இரத்தம் கசியத் தொடங்குகிறது. வெட்டுப்பட்ட இந்த இரத்த நாளங்கள், தாமே சுருங்கிக் கொள்ள முயற்சிக்கும் அதேவேளையில், இரத்தத்தில் உள்ள தட்டணுக்களும், அதன் இரத்த உறைதல் புரதங்களும், இரத்தப்போக்கை நிறுத்த முயல்கின்றன.

அதேசமயம், இரத்தத்தின் வெள்ளை அணுக்கள் காயத்தில் கிருமித்தொற்று எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கின்றன. காயம் ஏற்பட்ட மறுவிநாடி ஆரம்பித்து, 48-72 மணிநேரம் வரை நீடிக்கும் இந்த முதல்கட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து நிகழ்வது, இரண்டாம் அடுக்கின் ஃபைப்ரோ-ப்ளாஸ்ட் செல்களின் கொலாஜன் மற்றும் ஈலாஸ்டின் சுரப்பு.

பொதுவாக நமது தோலுக்கு வெளியிலிருந்து ஏதாவது அழுத்தம் ஏற்படும்போது, தோலில் காயம் ஏற்படாமல் இருக்க இரண்டுவிதமான செயல்கள் நிகழ்கின்றன. சருமத்திற்கு இடையூறு ஏற்படும்போது, காயம் ஆகாமல் உடனடியாக வளைந்தும், நெகிழ்ந்தும் கொடுப்பது கொலாஜன்கள் என்றால், இடையூறு நீங்கியவுடன் எதிர்திசையில் வேலை செய்து சருமம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப உதவுவது ஈலாஸ்டின்கள் ஆகும்.

ஆனால், இதே தோலின் நெகிழும் தன்மையை மீறி காயங்கள் ஏற்படும்போது, எப்போதும் ஒருவகை ஒழுங்கு அமைப்புடன் செயல்படும் இந்த கொலாஜன்கள் மற்றும் ஈலாஸ்டின்கள் காயத்தின்போது ஒரே திசையில் சுரப்பதுடன், காயத்தின் காரணமாக உண்டான பிளவை நீக்கி தோலை ஒன்றுசேர்க்க கிட்டத்தட்ட ஒரு கட்டிடத்தின் தரையில் விழுந்த ஓட்டையை சிமென்ட்டைக் கொட்டி நிரவுவது போல பணிபுரிந்து, தழும்புகளாக உருவாகிறது.

இன்னும் தெளிவாகச் சொல்லுவதானால், கிழிந்த பேப்பரை கம் கொண்டு ஒட்டவைப்பது போன்ற நிகழ்வு தான் இது. உண்டான காயத்தை விரைவில் ஆற்றவேண்டும் என்ற எண்ணத்துடன் துரிதமாக உடல் வேலை செய்வதால், இந்த தழும்புகள் இருக்கும் இடத்தில் மூன்றடுக்குகளின் மற்ற திசுக்கள் மற்றும் சுரப்பிகள் எதுவுமில்லாமல், வெறும் கொலாஜன் மற்றும் ஈலாஸ்டின் நார்கள் மட்டுமே பின்னிப்பிணைந்து தம்மை வலுவாக்கிக் கொள்வதால் அவை தழும்பாக உருவாகி, பிற்பாடு மாறாத வடுக்களாகவே நம் உடலில் தங்கிவிடுகின்றன.

இந்த இரண்டாம் நிலை நான்கு நாட்களில் தொடங்கி, ஓரிரு வாரங்கள் வரை நீடிக்கிறது. அதற்குப் பின்னான remodelling of scar எனப்படும் மீள்வடிவமைப்பு வருடங்கள் வரை நீடிக்கிறது. இதில் கொலாஜன்கள், ஈலாஸ்டின்கள் மட்டுமன்றி அவற்றைத் தருவிக்கும் செல்கள் மையோ-ஃபைப்ரோபிளாஸ்ட் (myofibroblast) செல்களாகத் தூண்டப்பட்டு, தழும்பு சுருங்குதல் நடைபெறுகிறது. இதற்குப் பின் தழும்புகள் பொதுவாக வெண்மை நிறத்துடன், சுருங்கி, வலியுணர்வு முற்றிலும் இல்லாமல் காணப்படுகிறது.

(தழும்பு ஆலோசனை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in