

‘முன்னமொரு காலத்துல’ என்று தொடக்கம் பெறும் ஆயிரமாயிரம் கதைகளைக் கேட்டிருப்பீர்கள். பறக்கும் நாய்; பேசும் யானை; குழந்தையுடன் விளையாடும் கரடி என அவ்வுலகமே வேறுபட்டது. இந்தக் கதைகளுக்கு எல்லாம் தோற்றுவாய் யார்; யார் எழுதுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?
உண்மையில் இந்த மாயாஜால தேவதைக் கதைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் மக்கள் வழக்கில் இருப்பவை. தனி ஒருவர் இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஆழ வேரூன்றி, பல வடிவங்களில் உயிர்ப்புடன் இருக்கின்றன. இத்தகு தேவதைக் கதைகளைக் காப்பாற்றுவதற்காக பெரும்பாடுபட்ட ‘கிரிம் சகோதரர்களை’ உங்களுக்குத் தெரியுமா? அவர்களால்தான் சிண்ட்ரெல்லா, தூங்கும் அழகி, ஸ்னோ ஒயிட் போன்ற கதைகள் இன்றும் நிலைத்திருக்கின்றன.
கதைகளினூடாக வளர்ந்தவர்கள்: ஜெர்மனியின் கசேல் மாகாணத்தில் 1785-ல் ஜேக்கப் கிரிம் பிறந்தார். அதற்கடுத்த 13ஆவது மாதத்திலேயே தம்பி வில்ஹெல்ம் கிரிமும் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் என்றாலும், இவ்விருவர் மட்டும் இளம் வயதில் இருந்தே இணைபிரியாது ஒட்டிக்கொண்டனர். சிறு வயதில் செவிலியரிடமிருந்து கதை கேட்கத் தொடங்கியவர்கள், தங்கள் வாழ்வே கதைகளின் ஊடாகப் பயணிக்கப் போகிறதென அறிந்திருக்க மாட்டார்கள்.
வில்ஹெல்முக்கு கவிதைகளும் ஓவியங்களும் பிரியம். ஜேக்கப் சட்டம் படிக்க மார்பர்க் பல்கலைக்கழகம் சென்றபோது அடுத்த வருடமே தானும் அங்குச் சட்டம் படிக்கச் சென்றார், வில்ஹெல்ம். புத்தகம், நடனம், ஓவியம், ஷேக்ஸ்பியர் நாடகம் என்று சகோதரர்கள் இருவரும் சதா கலையுலகில் திளைத்தனர்.
பேராசிரியர் உண்டாக்கிய திருப்புமுனை: பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சவிக்னி இவர்களின் புத்திக்கூர்மையைக் கண்டறிந்தார். மாலையில் வீட்டிற்கு அழைத்துச் சென்று பல விஷயங்களை விவாதித்தார். அவர் வீட்டிலிருந்த “மத்திய காலத்தைச் சார்ந்த ஜெர்மானிய பாடல்களின்” நூல் தொகுதியால் இவ்விருவரும் ஈர்க்கப்பட்டனர்.
சொந்த நாட்டின் பாரம்பரிய வரலாற்றை மறந்து, பழங்கால கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரமே உயர்வானது என பேராசிரியர்களும் மயங்கும் காலம் அது. கிரேக்கத் தொன்மக் கதைகளை மெச்சினர். இதனால் தாம் விரும்பும் ஜெர்மானிய கதைகள் மெல்ல அழிந்துபோகுமோ என்ற பதற்றம் இருவரையும் சூழ்ந்தது.
ஆனால், உதிரி உதிரியாக புழக்கத்தில் உள்ள தேவதைக் கதைகளைத் தொகுத்து வெளிக்கொணர்ந்தால், சொந்த நாட்டின் மகிமையும் பழமையும் மக்களுக்குத் தெரியவரும் என நினைத்தார்கள். அதற்கேற்றார்போல் கிளமென்ஸ் பிரெண்டானோ எனும் கவிஞர் தன் நண்பருடன் சேர்ந்து நாட்டார் வழக்கில் உள்ள கதைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தது, இவர்களுக்கு ஊக்கம் கொடுத்தது. ஆனால், குடும்பப் பொறுப்பினால் அப்பணி சற்று சுணக்கம் கொண்டது.
போர் தந்த அழுத்தம்: பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் இத்தாலி, ஆஸ்திரியா நாடுகளைத் தொடர்ந்து ஜெர்மனி மீது 1806ஆம் ஆண்டு படையெடுத்து வந்தார். இவர்களின் பூர்வீக கசேல் நகரம் ஒரே இரவில் சூறையாடப்பட்டது. ஜெர்மன் மொழி தூக்கியெறியப்பட்டு, பிரெஞ்சின் ஆதிக்கம் மேலோங்கியது.
கிரிம் சகோதரர்களின் வீட்டை அந்நியர்கள் ஆக்கிரமித்தனர். ஜெர்மானிய பழக்க வழக்கங்களும் பாரம்பரிய மிக்க கலாச்சாரங்களும் அந்நியர் காலடியில் நசுங்குவதைக் கண்டு பொறுக்கமாட்டாமல் வழிதேடினர்.
தாம் நேசித்து வந்த நாட்டார் தேவதைக் கதைகளில், ஜெர்மானிய பழமரபு குடிகொண்டிருப்பதை கிரிம் சகோதரர்கள் உணர்ந்தனர். எனவே முன்பைவிட தீவிரமாகச் சேகரிக்கத் தொடங்கினர். ஆனால் அக்கதைகள் நூலகத்திலோ, புத்தகக் கடைகளிலோ இல்லை. ஜெர்மனியின் ஒவ்வொரு குடிமகன் இதயத்திலும் இருந்தது. எங்ஙனம் அதைச் சேகரிப்பது?
(சகோதரர்களின் தேடல் தொடரும்) கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர். தொடர்புக்கு: iskrathewriter@gmail.com