

பலரும் தங்களுடைய கையெழுத்து கோழி கிறுக்கியது போல உள்ளது என்று கவலைப்படுகின்றனர். ஆசிரியர்கள் குழந்தைகளின் கையெழுத்தை நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆரம்ப நிலை வகுப்புகளில்கூட கையெழுத்துக்கென்று தனிப் பாடவேளை இல்லை. கரும்பலகையில் எழுதியுள்ளதையே குழந்தைகள் எழுதுகின்றனர். அதுவும் குறிப்பிட்ட காலக்கெடு விதிக்கப்படுகிறது. வேகமும், வலியும் விரல்களைக் கோழிகளாக மாற்றிவிடுகின்றன. உண்மையில், அழகான கையெழுத்து பெறுவதற்கு பொறுமையும் முறையான பயிற்சியும் தேவை.
முதல் வகுப்பில் இருந்து இந்த பயிற்சியை ஆரம்பித்துவிட வேண்டும். வடிவு ஒற்றி எழுத பழக்க வேண்டும். இதனால், குழந்தைகள் எழுத்துக்களை அறிந்து கொள்வதுடன், எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்கள். பயிற்சி தாள்களை இதற்கு பயன்படுத்தலாம். எழுத வைப்பதைவிட முக்கியமானது, பென்சில், பேனாவை எப்படி பிடித்து எழுதவேண்டும் என்பது, பென்சில், பேனாவை தளர்வான பிடியுடன் சரியாக குழந்தை பிடிப்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அழகான கையெழுத்தை ஊக்குவிக்க எழுதுவதற்கு தோதான நிலையில் வசதியாக அமர செய்து பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் எழுதும்போது விரல்கள் வலிக்கின்றன என்ற புகாரை தவிர்க்கலாம். ரப்பர் பந்துகளை வழங்கி, அழுத்தம் தரச் செய்யலாம். களிமண்ணை வழங்கி விரும்பிய மொம்மைகளை உருவாக்க கற்றுத் தரலாம். இன்னும் விளையாட்டாய் செயல்பாட்டை அமைக்க, குழந்தைகளின் கையில்இடுக்கியை கொடுத்து, தரையில் சிதறியுள்ள பொருட்களை இடுக்கியின் உதவியுடன் எடுக்கச் செய்து பெட்டியில் அடுக்கி வைக்கலாம். இவை, தசைகளை வலுப்படுத்த உதவும். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட எழுத்தை எழுதும்போதும் சரியான வரிவடிவத்தில் நிதானமாக எழுதச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பாடத்தை நடத்திமுடித்தவுடன், அந்தப் பாடத்தில் குறிப்பிட்ட பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதனைப் பாடக்குறிப்பேட்டில் எழுதச் சொல்லலாம். அப்படி எழுதும்போது சரியான எழுத்து வடிவம், எழுத்து சீரமைப்பு மற்றும் இடைவெளியை பராமரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு இரண்டு கோடு அல்லது நான்கு கோடு போடப்பட்ட நோட்டில் எழுத பழக்கலாம். பல் வேறுபட்ட கையெழுத்து முறைகளை (calligraphy) உற்று நோக்கச் செய்யவும். அத்தகைய கையெழுத்து முறைகள் எழுத்து வடிவத்தை ஒழுங்குபடுத்தி, அழகாக எழுத ஊக்கமளிக்கும். அவை எழுத்து வடிவங்கள், இடைவெளி மற்றும் கையெழுத்தின் கலைக்கூறுகள் குறித்து அதிக விழிப்புணர்வை பெற உதவும்.
காந்தி தனது சுயசரிதையில் அவரின் கையெழுத்து அழகாக இல்லை என வருத்தப்பட்டுள்ளளார். மேலும், குழந்தைகளின் கையெழுத்து சிறப்பாக அமைய ஓவியம்வரைந்து பழக அறிவுறுத்துகிறார். ஆகவே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓவியம் வரைவதற்கு அனுதிக்கலாம். வர்ணம் தீட்டச் செய்யலாம். இவை குழந்தைகளின் தசைகளை வலுவடையச் செய்யும். அழகான கையெழுத்திற்கு உதவும். ஆசிரியர்கள் ஒவ்வொரு முறைபாடக்குறிப்பேடுகளை திருத்தும்போதும் நல்ல கையெழுத்து திறன்அமைய தேவையான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்கவும்.
குறிப்பிட்ட எழுத்தின் வரி வடிவத்தில் சிக்கல் இருப்பின் அதன் தேவைக்கு ஏற்ப குறிப்புகளை வழங்கி கையெழுத்தை செம்மையாக்க உதவுங்கள். வெறுமனே சிவப்பு மையினால் திருத்தம் செய்வது மட்டும் கையெழுத்தை அழகாக மாற்றிவிடாது. எழுதுவதற்குப் போதுமான நேர அவகாசம் வழங்க வேண்டும். அழகான கையெழுத்து உடனே நிகழ்வது சாத்தியமில்லை. காலப்போக்கில் கையெழுத்து திறனை மேம்படுத்துவதற்கு நிலையான பயிற்சியும், பொறுமையும் அவசியம்என்பதை உணர்த்தவும். ஆகவே, தினமும் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எழுதுவதற்கு போதுமான காலவகாசம் அளியுங்கள். முயன்று பார்ப்போம்.
- கட்டுரையாளர்: க.சரவணன், சிறார் எழுத்தாளர். (சிவப்புக்கோள் மனிதர்கள், ஸ்பேஸ் கேம், இளவரசியை காப்பாற்றிய பூதம் உட்பட பல சிறார் நாவல்களின் ஆசிரியர்)