போவோமா ஊர்கோலம் - 15: இந்தியா - பாகிஸ்தான் எல்லை தங்களை வரவேற்கிறது!

போவோமா ஊர்கோலம் - 15: இந்தியா - பாகிஸ்தான் எல்லை தங்களை வரவேற்கிறது!
Updated on
2 min read

தார் பாலைவனத்துக்குச் சென்று வந்தது மனநிறைவைத் தந்தது மாதிரியே, உடல் முழுவதும் வலிகளைக் கொடுத்தது. முதல்முறை ஒட்டக பயணம், அதுவும் ஒரு மணி நேரத்துக்குக் கூடுதலான பயணம் செய்தது கால்கள் வலி கண்டன. மறுநாள் முழுவதும் அறையிலேயே தங்கி இருந்தோம்.

எங்கு செல்லவும் தோணவில்லை. உடல் களைப்பு நீங்க நன்றாக ஓய்வெடுத்தோம். மறுநாள் காலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் இந்தோ- பாகிஸ்தான் எல்லைக்கு செல்ல கிளம்பினோம். குஜராத்திலேயே இந்தியா-பாகிஸ்தான் எல்லை பார்க்க நினைத்தோம். ஆனால், குஜராத் வெள்ளத்தில் தத்தளித்ததால் அங்கு செல்ல முடியாமல் போனது. இங்காவது பார்க்க வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு ஜெய்சல்மர் வந்தோம்.

இந்தோ-பாகிஸ்தான் எல்லை செல்வதற்கு ஜெய்சல்மரில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் பாகிஸ்தான் எல்லை அருகே இருக்கும் தனூத் மாதா கோயில் வரை தான் நம்மால் செல்ல முடியும். அந்த கோயிலில் இந்திய ராணுவத்தின் அனுமதி பெற்று, அங்கிருக்கும் வாடகை காரில் மட்டுமே எல்லைக்கு செல்ல முடியும். எல்லை அருகே ஏனோ இரு சக்கர வாகனங்களை அனுமதிக்கவில்லை.

மெய்சிலிர்த்த தருணம்: 'இந்தியா - பாகிஸ்தான் எல்லை தங்களை வரவேற்கிறது' என்ற பலகையைப் பார்த்தபோது வேறு ஒருவிதமான உணர்வு மேலிட்டது. அப்படி ஒரு உணர்வு இதற்குமுன் எப்போதும் ஏற்பட்டது இல்லை. அங்கிருக்கும் உயரமான கோபுரத்திலிருந்து பார்த்தால் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் சின்னதாகத் தெரியும்.

எல்லைக் கம்பிகளைத் தொட்டு பார்த்து, அங்கிருக்கும் ராணுவ வீரர்களுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிறைய புகைப்படங்கள் எடுத்துவிட்டு மீண்டும் தனூத் மாதா கோயிலை வந்தடைந்தோம். 1971-ல் நடந்த போர் நினைவு சின்னம் அங்கிருந்து. அந்த கோயிலை இந்திய ராணுவம் தான் பராமரித்து வந்தது. அந்த கோயிலுக்கு மத்திய அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் என நிறைய பேர் வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள்.

அங்கிருந்து லோங்கிவாலா என்ற போர் நினைவு சின்னம் இருக்கும் இடத்துக்கு வந்தடைந்தோம். இந்திய ராணுவத்தின் பஞ்சாப் ரெஜிமண்ட்டை சேர்ந்த வீரர்கள் 1971ல் நடந்த போரின் போது சண்டையிட்டு பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறார்கள். அதன் நினைவாக இந்த போர் நினைவு சின்னம் இருக்கிறது. அந்த போரின் போது பயன்படுத்தப்பட்ட டாங்கிகள், துப்பாக்கிகள், விமானங்கள் எல்லாம் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.

அந்த போரின் போது எடுக்கப்பட்ட சில வீடியோ காட்சிகளையும் நமக்கு திரையிட்டுக் காட்டினார்கள். மெய்சிலிர்த்துப் போனோம். நமக்காக ரத்தம் சிந்திய அத்தனை ராணுவ வீரர்களுக்கும் வீர வணக்கம் செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

இன்றும் ராஜ வாழ்க்கை: ஜெய்சல்மர் வருவதற்கு மாலை ஆகிவிட்டது. சற்று ஒய்வு எடுத்துவிட்டு, சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் ஜெய்சல்மர் கோட்டைக்குக் கிளம்பினோம். கோட்டை பாதி வரை இரு சக்கர வாகனங்கள் செல்லலாம். ராஜஸ்தானில் நிறையக் கோட்டைகள் இருந்தாலும், இது கொஞ்சம் வித்தியாசமானது. ராஜாக்கள் காலத்தில் எப்படி மக்கள் இங்கு வசித்து இருந்தார்களோ, அப்படித்தான் இப்போதும் இங்கு மக்கள் தங்கள் வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

கி.பி 1156 -ல் ஜெய்சால் என்பவரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. பிரான்ஸ் உள்ளிட்ட வெகு சில நாடுகளில் தான் இதுபோன்று மக்கள் வாழும் கோட்டைகள் இருக்கின்றன. அதில் இந்த ஜெய்சல்மர் கோட்டை மிகமுக்கியமானது. ஜெய்சல்மர் கோட்டை மீது ஏறி கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். ஜெய்சல்மரின் மொத்த அழகையும் அங்கிருந்து ரசிக்க முடியும்.

சூரிய அஸ்தமன நேரத்தில் அங்கிருக்கும் வீடுகள் ஜொலிப்பதையும் அந்த கோட்டை மீதிருந்து ரசிக்க முடியும். ஜெய்சல்மர் கலைப் பொருட்கள் பிரசித்தியானது. நமக்குப் பிடித்த சில கலைப்பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் அறைக்கு வந்தோம். நாளை காலை ராஜஸ்தான் தலைநகருக்குப் புறப்பட வேண்டும்.

- கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in