

தாவரங்கள் விதை பரவலுக்கு பறவைகளையும், பூச்சிகளையுமே அதிகம் சார்ந்து இருக்கின்றன. இந்நிலையில், ஒலி மாசு தாவரங்களை கூட பாதிக்கிறது. இரைச்சல் அதிகமுள்ள இடங்களை விட்டுப் பறவைகள் இடம் பெயர்வதால் அது தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது.
ஒலி மாசு கடல் வாழ் உயிரினங் களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. கடலில் கப்பல்களால் ஏற்படும் சத்தம்,ஆழ்கடலில் எண்ணெய் வளத்தைக் கண்டறிவதற்குச் சோனார் கருவிகளைப் பயன்படுத்திச் செய்யும் அதிர்வுசோதனைகள் (Seismic Testing) ஆகியவை மூலம் வளைகுடா பகுதிகளில் மட்டும் 3 கோடி கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.கப்பல்களில் பயன்படுத்தப்படும் சோனார் கருவிகள் 235Db அளவிலான சத்தத்தை வெளியிடுகின்றன. அப்படியென்றால் அவற்றால் ஏற்படும் பாதிப்பைநீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
திமிங்கலங்கள், டால்பின்கள்உள்ளிட்ட கடல் பாலூட்டிகள் ஒலியை வைத்து எதிரொலி இடமாக்கம் (Echolocation) மூலம் தகவல் தொடர்பை மேற்கொள்கின்றன. அதாவது ஒலியை அனுப்பி, அது ஒரு பொருளின் மீது மோதி எதிரொலியாகத் திரும்பி வரும்போது அதை வைத்தே தகவல் அறியும் ஆற்றல் இது. இந்த ஆற்றலின் மூலம்தான் அவை வேட்டையாடுதல், இனப்பெருக்கம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றன. ஒலி மாசுவால் இந்தத் திறனில் சிதைவு ஏற்பட்டுள்ளது.
சரி, இத்தகைய சீரழிவை ஏற்படுத்தும் ஒலி மாசுவைக் குறைக்க முடியுமா? சரியான திட்டமிடுதல் மூலம் முடியும். இன்று நகரமயமாக்கல் அதிகரித்து வரும்நிலையில், சாலை அமைப்பு, தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஒலி மாசு ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து அங்கே கண்காணிப்புகளும், கட்டுப்பாடுகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டும்.
ஒலி மாசுவில் இருந்துவிலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றைக் காப்பாற்ற அவற்றின் வசிப்பிடங்களான காடுகள், புல்வெளிகள், நீர்நிலைகள் ஆகியவற்றுக்கும் மனித வசிப்பிடங்களுக்கும் இடையேயான எல்லைகள் கண்டிப்புடன் வகுக்கப்பட வேண்டும். தனி மனிதர்களாகிய நாமும் வாகன பயன்பாட்டைக் குறைப்பது, ஒலி பெருக்கிகளைத் தவிர்ப்பது உள்ளிட்ட நம்மால் ஆன சிறிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.(ஒலி தொடரும்)
கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com
| வாசிப்போம் விவாதிப்போம் அன்பான ஆசிரியர் மற்றும் பெற்றோர்களே, பாடத்திட்டத்தை தாண்டி நமது குழந்தைகளுக்கு கலை, இலக்கியம் அவசியம், நீதி போதனை அவசியம் என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கிவிட்டோம். மகிழ்ச்சி! ஆனாலும் இவை அத்தனையையும் விட வாழ்க்கைக்கு ஆதாரமானது சுற்றுச்சூழல் அறம். சூழலியலின் முக்கியத்தை உணர்த்த வரும் ‘பூ பூக்கும் ஓசை’ தொடரை வாசிப்போம் மாணவச் செல்வங்களுடன் விவாதிப்போம். |