ருசி பசி - 11: எடை குறைக்க உதவும் கொள்ளு

ருசி பசி - 11: எடை குறைக்க உதவும் கொள்ளு
Updated on
2 min read

இளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு எனும் பழமொழி அனைவரும் அறிந்ததே. இதற்கு காணம், முதிரை போன்ற வேறு பெயர்களும் உண்டு. மலையாளத்தில் மூதிரா என்றும் தெலுங்கில் உலாவாலு என்றும் அழைக்கின்றனர்.

கொள்ளு என்பது ஒருவகை பயறு. இது தட்டையாக பழுப்பு மற்றும் மண்ணின் நிறத்திலும் காணப்படும் ஒரு வகைத் தானியமாகும். இதன் விளைச்சல் தென்னிந்தியாவில் கூடுதலாகும். ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்திலும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவைஇருக்கின்றன. இந்தப் பயிரை நெடுங்காலமாக குதிரைகளுக்கு உணவாக கொடுத்து வந்தனர். குதிரைக்கு இது பிரத்யேக உணவு. அதனால்தான் குதிரை கொழுப்புக் கூடாமல் நல்ல உடல்வாகோடு இருக்கின்றது.

விதவிதமா கொள்ளு: மருத்துவ குணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். ஊற வைத்தோ, வறுத்தோ, குழம்பு, ரசம், துவையல் என விதவிதமாக சமைத்து சாப்பிடலாம். அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் பயன்படுகிறது.

வேகமாக உடல் எடை குறைக்கும். சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால் எடையைக் குறைக்க உதவும். உடலில் நோய், எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தினமும் காலையில் மற்ற எந்த உணவை சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் முளைவிட்ட கொள்ளு, அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூப் அருந்துவதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சர்க்கரை நோயாளிகள் அரிசிக்கு மாற்றாக சாப்பிடலாம்.

கொள்ளு ரசம், கொள்ளு பருப்புப்பொடி, கொள்ளு சட்னி, கொள்ளு வடை, அரிசியுடன் சேர்த்து கஞ்சியாக்கி குடிப்பது நம் முன்னோர்களின் முக்கிய உணவாக இருந்தது. கொள்ளு உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், குளிர்காலங்களுக்கு ஏற்ற உணவாகும். கொள்ளு ரசத்தினால் தொண்டையில் கட்டும் கோழை கல்லடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்யும். பெண்கள் கொள்ளு நீரை அருந்தலாம். சூப்பாகவும் சாப்பிடலாம். மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்க்க வேண்டும்.

சித்த மருத்துவம்: சித்த மற்றும் ஆயுர் வேத மருத்துவத்தில் கொள்ளு முக்கிய மருத்துவ பொருளாக உள்ளது. சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு பயன்படுகிறது. இதய நோயுள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

கொள்ளினால் செய்யப்பட்ட உணவுகள், அனைவரும் உண்ணும் அமிர்தமானாலும் கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தவிர்ப்பது நல்லது என்கிறார் மருத்துவா் கு.சிவராமன்.

கொள்ளு சுண்டல்

கொள்ளு – 1 கப்

தேங்காய் துருவியது 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் -3

பெருங்காயம் 1 சிட்டிகை

தேங்காய் எண்ணெய்

உப்பு தேவைக்கேற்ப

பெருங்காயத்தை சிறிது நீரில் கரைத்து அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, பின்வேகவைத்து மசித்த கொள்ளையும் சேர்த்து கிளரி, தேங்காய் எண்ணெய் ஊற்றி பரிமாறலாம். சிறந்த மாலை நேர சிற்றுண்டியாக இருக்கும்.

- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியா், அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்; தொடர்புக்கு: devavino86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in