

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்கள் கட்டாயம் ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். அந்த காப்பீட்டை எடுத்தால் அவர்கள் இல்லாதபோது ஏற்படும் பொருளாதார இழப்பை குடும்பத்தினரால் சமாளிக்க முடியும். இதுகுறித்து முந்தைய அத்தியாயங்களில் அலசினோம். இந்த வாரம் அத்தியாவசிமான மருத்துவக் காப்பீடு (Health Insurance) குறித்து பார்ப்போம்.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் கட்டாயம் மருத்துவக் காப்பீடு இருக்க வேண்டும். எதிர்பாராத விபத்து, திடீர் மாரடைப்பு, நோய் பாதிப்பு உள்ளிட்ட அவசர தேவைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றால் லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. இப்போதெல்லாம் பணக்காரர்களாலே மருத்துவ செலவுகளை சமாளிக்க முடிவதில்லை. ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் நிலைமை சொல்லி புரியவைக்க வேண்டுமா?
சிறிய தொகையை செலவிட்டு காப்பீடு எடுக்காதவர்கள், அவசர சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் கடன் வாங்குகிறார்கள். நிலம், வீடு, நகைகளை விற்கிறார்கள். காலம் முழுவதும் சேமித்த செல்வத்தை திடீரென இழந்துவிடுகிறார்கள். சிகிச்சைக்காக பட்டகடனில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். எனவே சிறிய செலவில் காப்பீடு எனும்பெரிய பாதுகாப்பை உருவாக்கிக் கொள்வதால் நிதி சேதாரத்தில் தப்பி விடலாம்.
தனி பாலிசி முக்கியம்: மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை அறிந்தே மத்திய மாநில அரசுகள் இந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. தனியார் நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு காப்பீடு வழங்கியுள்ளன. இவை குழு காப்பீட்டின்கீழ் எடுக்கப்படுவதால் இதில் மனைவி, குழந்தை, 60 வயதுக்கும் குறைவான பெற்றோரையும் சேர்த்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு நிறுவனத்தில் எடுக்கப்படும் காப்பீட்டு பாலிசி பணியில் இருக்கும் வரைநடைமுறையில் இருக்கும். வேறு நிறுவனத்துக்கு பணி மாறினாலோ, வேலை விட்டுவிலகினாலே இந்த பாலிசியை பயன்படுத்தமுடியாது. இன்னொரு பக்கம் நிறுவனத்தில்எடுக்கப்படும் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ரூ.2லட்சம் வரை மட்டுமே கவரேஜ் இருக்கும்.
இதனை அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு பயன்படுத்த முடியாது. எனவே ஊழியர்கள் நிறுவனத்தின் பாலிசியை நம்பி இருக்காமல்தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களுக்காக பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது.
இவ்வாறு தனிப்பட்ட முறையில் பாலிசி எடுக்கும்போது ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு காப்பீடு வழங்கப்படும். வாடிக்கையாளரின் உடல் நிலைக்கு ஏற்ப பிரீமியம் நிர்ணயிக்கப்படும். அதேபோல 30 வயதுக்கு குறைவாக இருக்கும்போது பாலிசி பிரீமியம் தொகை குறைவாக இருக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் தொகை அதிகரிக்கும்.
இதர திட்டங்கள்: குடும்ப மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மனைவி, குழந்தைகள் மற்ற குடும்ப உறுப்பினர்களையும் ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம். புதிய உறுப்பினர்களை சேர்க்கும்போது பிரிமீயம் தொகை அதிகரிக்கும். உறுப்பினர்களின் தேவைக்கு ஏற்ப கவரேஜ் தொகையையும் அதிகரிப்பது அவசியமாகும்.
60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு சிறப்பு பாலிசி எடுக்கலாம். பிரசவத்துக்கான பேறுகால காப்பீடு, விபத்து கால காப்பீடு, புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய் போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கான தனி காப்பீடு ஆகியவையும் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு காப்பீடு எடுக்கும்போது புகைபிடித்தல், மதுப்பழக்கம், நோய் பாதிப்பு, நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் அதனை மறைக்கக் கூடாது. அதனை மறைத்து காப்பீடு எடுத்தால் பின்னர் இழப்பீட்டை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
காப்பீட்டில் கவனிக்க வேண்டியவை: பாலிசி எடுக்கும் போது அதில் என்னென்ன மருத்துவ பலன்கள் இருக்கின்றன என்பதை கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். நோய்களுக்கான சிகிச்சைகள், பட்டியலில் உள்ள மருத்துவமனைகள், பிரிமீயம் ஆகியவற்றை பிற நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட பாலிசியில் என்னென்ன நோய்களுக்கான சிகிச்சைவழங்கப்படுகிறது? எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்கலாம்? பணமில்லா சிகிச்சை வழங்கப்படுகிறதா? நாம் பணம் செலுத்த வேண்டுமா? செலவழித்த பணத்தை திரும்ப பெற முடியுமா? மருந்துகள் தவிர ஆம்புலன்ஸ், அறை போன்ற இதர செலவினங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்குமா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்கும் மற்றும் 90 சதவீதத்துக்கும் அதிகமாக இழப்பீடு வழங்கும் காப்பீட்டை தேர்வு செய்ய வேண்டும்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in