வாழ்ந்து பார்! 39: சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகள்

வாழ்ந்து பார்! 39: சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகள்
Updated on
2 min read

இந்த உத்திகளைப் பயன்படுத்தினாலே சிக்கல்கள் தீர்ந்துவிடுமா? என்று வினவினாள் மணிமேகலை. இந்த உத்திகள் சிக்கலைக் கண்டறிந்து தீர்விற்கான வாய்ப்புகளைத் தெரிந்து கொள்வதற்கான கருவிகள் மட்டுமே. அவ்வாய்ப்புகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதை சிக்கலைத் தீர்க்க விரும்புபவர்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றார் எழில்.

அதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா? என்று கேட்டாள் கண்மணி. இருக்கின்றன. ஒரு வாய்ப்பினைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய விளைவிற்கு ஏற்ப வழிமுறைகள் மாறும் என்றார் எழில்.

தவிர்ப்பதும் தள்ளிப்போடுவதும்! - மதியழகன் தன் பெற்றோருடன் உறவினர்வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த வயதான ஒருவர் மதியழகனைப் பார்க்கும்பொழுது எல்லாம் கேலிசெய்தார். இச்சிக்கலிலிருந்து விடுபட மதியழகன் என்ன செய்ய வேண்டும்? என்று எழில் வினவினார்.

அவரைக் கேலிசெய்ய வேண்டும் என்றான் இளவேனில். கேலிசெய்யாதீர்கள் எனச் சொல்ல வேண்டும் என்றான் காதர். பெற்றோரிடம் முறையிட வேண்டும் என்றாள் தங்கம். அவரைக் காண்பதையே தவிர்க்க வேண்டும் என்றான் சாமுவேல். அருமை. சிக்கலைக் கையாள அதனைத் ‘தவிர்த்தல்’ ஒரு வழிமுறை என்றார் எழில்.

தேர்வில் மனப்பாடப் பாட்டு உடனடியாக நினைவிற்கு வரவில்லை என்றால், அதனை அப்போதைக்கு தள்ளிவைத்துவிட்டு மற்ற வினாகளுக்கு விடையளிப்பேன். பாட்டு நினைவிற்கு வந்ததும் அதனை எழுதுவேன் என்றாள் சுடர். அது ‘தள்ளிப்போடும்’ வழிமுறை என்றார் எழில்.

என் அப்பா சுற்றுச்சூழல் ஆர்வலர். அதனால் மகிழுந்தோ (Car), விசையுந்தோ (Bike) வாங்க மறுக்கிறார். மிதிவண்டியையும் பொதுப்போக்குவரத்தையும் மட்டுமே பயன்படுத்துகிறார். சொந்த வண்டியில்லாததால் பல நேரங்களில் காலதாமதமாகும் சிக்கலைச் சொன்னால், ‘நேரத்தைத் திட்டமிடக் கற்றுக்கொள்’ என்கிறார். அவர்எப்பொழுதும் உரிய நேரத்திற்குச் சென்றுவிடுகிறார். இஃது என்ன வழிமுறை? என்று வினவினாள் கயல்விழி. கொள்கைக்கு மாறான சிக்கலைக் கையாளும் ‘உறுதியாக இருத்தல்’ வழிமுறை இது என்றார் எழில்.

சமரசமும் தீர்வுதானா? - என் தங்கையும் நானும் சேர்ந்து விளையாடுவோம். அதில் அவள் தோற்றால் அழுவாள். அதனால் ஒவ்வொரு முறையும்நான் தோற்பேன். இப்படி ‘விட்டுக்கொடு’ப்பதும் சிக்கலைத் தீர்க்கும் வழிமுறையா? என்று வினவினான் முகில். ஆம் என்ற எழில் ஆனால், சில வேளைகளில் அவளை தோல்வியடையச் செய்து அதனை ஏற்றுக்கொள்ள அவளைப் பழக்க வேண்டும். இல்லையென்றால் பின்னாட்களில் அவள் வருத்தப்படுவாள் என்றும் எச்சரித்தார்.

நாள்தோறும் வீட்டைப் பெருக்கும் பொறுப்பு எனக்கும் என் அண்ணனுக்கும் உரியது. ஆனால், அவர் அதனைச் செய்ய மாட்டார். அதனால் இருவருக்கும் சண்டை வரும். கடந்த மாதம் நாங்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதன்படி இப்பொழுது ஒருநாள் அவரும் மறுநாள் நானும் அவ்வேலையைச் செய்கிறோம். இந்த வழிமுறைக்கு என்ன பெயர்? என்று வினவினாள் நன்மொழி. இதற்கு சமரசம் என்று பெயர் என்றார் எழில்.

விடுதலைநாள் விழாவில் விடுதலைவீரர்கள் மூவரின் வண்ணப்படங்களை கையால் வரைந்து திறக்க வேண்டும் என்பது தலைமையாசிரியரின் விருப்பம். அதனை நிறைவேற்றும் பொறுப்பு என்னிடமும் அருளினியனிடமும் கொடுக்கப்பட்டது. எனவே, உருவங்களை அழகாய் வரையும் நானும் சிறப்பாய் வண்ணந்தீட்டும் அருளினியனும் இணைந்து செயலாற்றினோம். இது சிக்கலைத் தீர்க்க ‘இணைந்து செயலாற்று’ம் வழிதானே என்று வினவினான் தேவநேயன். ஆம் என்றார் எழில்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com ­

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in