

சில ஆண்டுகளுக்கு முன் அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரான கவுஹாத்திக்கு சென்றிருந்தோம். அங்குள்ள ஐஐடி-யில் என் மகனுக்கு இளநிலை டிசைனிங் (B.Des) படிக்க இடம் கிடைத்திருந்தது. இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுள் முதன்மையானவை என ஐஐடி களைச் சொல்லலாம். அங்குள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் படிக்க மிகவும் கடுமையான நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
கவுஹாத்தி ஐஐடி ஏறத்தாழ 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பிரம்மாண்டமான கல்வி நிறுவனம். அங்கிருந்த சில நாட்களில் ஐஐடி பற்றி நிறைய புரிந்துகொண்டேன். நள்ளிரவு வரை இயங்கும் நூலகம், ஏராளமான மன்றங்கள், தனது விருப்பத்திற்கு ஏற்ற மன்றம் இல்லை என்றால் அதை புதிதாகத் தொடங்கும் வசதி என வகுப்பு நேரம் போக அவர்களாகவே தேடி கற்றுக்கொள்ள எல்லா வசதிகளும் இருக்கின்றன.
அங்கு விதிகளே இல்லையா? இருக்கின்றன. அவை குறித்துப் பிறகு பார்ப்போம். பள்ளிகளில் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு வரிசையாகச் செல்லுதல், சீருடை, தலைமுடி, எனப் பல்வேறு விதிகள். இருபாலரும் பயிலும் கல்லூரிகளில் ஒருபுறம் மாணவர் செல்லும் பாதை, மறுபுறம் மாணவிகள் செல்லும் பாதை, உடை, பேச்சு, நடை, என ஏராளமான விதிமுறைகள். பெரியவர்கள் எப்போதும் விதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகள் அவற்றை மீறிக் கொண்டே இருக்கிறார்கள்.
விதிமுறைகள் மீறல்: பள்ளியில் உள்ள விதிமுறைகள், குழந்தைகளின் எதிர்வினைகள் குறித்து நகைச்சுவையாக எடுக்கப்பட்ட திரைப்படம், Middle School, The worst years of My Life. ரேஃப். நடுநிலைப் பள்ளி மாணவர். ஓவியம்வரைவதில் ஆர்வம் அதிகம். அதிலும் கேலிச்சித்திரங்களை வரைவது என்றால் உயிர். அவன் வரைந்ததும் அவை குறிப்பேட்டைவிட்டு வெளியே வந்து பேசுவது போலவே உணர்வான்.
இதுவரை இரண்டு பள்ளிகளில் இருந்து விரட்டப்பட்டவன். மூன்றாவதாக ஒரு பள்ளியில் இடம் கிடைத்திருக்கிறது. இங்கிருந்தும் விலகி விட்டால் சிறைச்சாலைக்குப் போய் தான் படிக்க வேண்டும் என்று அவனது தங்கை கேலி செய்கிறாள். அவனது அம்மா, இது புதுத் தொடக்கம். கவனமாக இரு என்று அறிவுரை சொல்லிப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்.
ஆடை கட்டுப்பாடு: பள்ளிக்கூட வாசலில் நிற்கும் மனிதர் ரேஃபை நிறுத்துகிறார். "நீ ஏன் உடைகளை அணியாமல் வந்திருக்கிறாய்?" என்று கேட்கிறார். அதிர்ச்சியடைந்த ரேஃப், நான் உடைகளைத் தானே அணிந்திருக்கிறேன் என்று கூறுகிறான். அந்த மனிதர், இல்லை. நீ விதி மீறலை அணிந்திருக்கிறாய். அடிப்படை விதி 22-இன் படி இந்த மாதிரியான உடைகளை பள்ளிக்கு அணிந்து வரக் கூடாதுஎன்று அவர் கூறுகிறார்.
அது பற்றி எனக்குத் தெரியாது என்று ரேஃப் கூறுகிறான். இதோ இந்த புத்தகத்தை நன்றாகப்படி. ஆடை அணிவதின் விதிகளை 22-ஆம்சட்டம் கூறுகிறது. இப்புத்தகத்தின் முதல் விதி, உனது பள்ளி முதல்வரை மதிக்க வேண்டும் என்பது. நான் தான் டிவைட். இப்பள்ளியின் முதல்வர் டிவைக்ட் என்று அவர் கூறுகிறார்.
புதுமையான மன்றம்: பள்ளி முதல்வர் பேசும்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டு அவரைப் போலவே நடித்துக் காட்டுகிறான் லியோ என்ற மாணவன். ரேஃப் சிரித்தபடியே பள்ளிக்குள் நுழைகிறான். மாணவ, மாணவிகள் வரிசையாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
எதிர் வரிசையில் வந்து கொண்டிருந்த லியோ, ரேஃப் அருகே வந்து பேசுகிறான். வரிசையாகச் செல்லுங்கள். இப்படி பாதையில் நின்று கொண்டு பேசக்கூடாது. சிரிக்கக் கூடாது. அது விதிமீறல் என்று கூறுகிறார் துணை முதல்வர் ஸ்டிரிக்கர். ரேஃப் வகுப்பறைக்குச் செல்கிறான்.
பிற்பகலில் அரங்கில் மாணவ மாணவிகள் கூடியிருக்கிறார்கள். மாணவர் தலைவ ருக்கான தேர்தல் பிரச்சாரம். ஒரு மாணவன் பேசிய பிறகு மாணவி ஒருவர் பேச வருகிறார். என் பெயர் ஜெனி. நான் காணொலிக் காட்சி மன்ற உறுப்பினர். அப்படி ஒரு மன்றம் இருப்பது இங்கு யாருக்குமே தெரியாது.
ஏனெனில் நான் மட்டுமே அந்த மன்றத்தின் உறுப்பினர். நமது பள்ளியில் கலைகளுக்கு என நிதியே இல்லை. மதிப்பும் இல்லை. என்னைத் தேர்ந்தெடுத்தால் கலைகளை வளர்க்கப் பாடுபடுவேன். உடை சார்ந்தும் உள்ள விதிகளில் மாற்றம் வரச் செய்வேன் என்று பேசுகிறார்.
அவரது பேச்சை முதல்வர் இடைமறித்துத் திசைதிருப்ப முயல்கிறார். ரேஃப் எழுந்து நின்று மகிழ்ச்சியோடு கைகளைத் தட்டுகிறான். விதிகளின்படி கைதட்டக் கூடாது என்று சிலர் முணுமுணுக்கின்றனர்.
புதிய தேர்வு முறை: முதல்வர், தான் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய தேர்வுமுறையின் சிறப்புகளை எடுத்துக் கூறத் தொடங்குகிறார். ரேஃப் அந்தக் காட்சியை ஒரு கேலிச்சித்திரமாக வரையத் தொடங்குகிறான். அதைப் பார்த்து வியந்த மாணவி அவனது குறிப்பேட்டைப் பறித்துப் பார்க்கிறார்.
ஒவ்வொருவராக ஆவலுடன் பார்க்கத் தொடங்குகிறார்கள். அரங்கம் முழுவதும் சலசலப்பு. குறிப்பேட்டை முதல்வர் கைப்பற்றிப் பார்க்கிறார். கல்லறைக்கு மத்தியில் நின்று அவர் தேர்வைப் பற்றிப் பேசுவது போன்ற கேலிச்சித்திரம். முகமெங்கும் கோபம். கூட்டம் முடிந்தது என்று அறிவிக்கிறார். இனி என்ன நடக்குமோ?
அடுத்த வாரம் பார்ப்போம்.