நானும் கதாசிரியரே! - 12: கஞ்சனும் ஊதாரியும் சந்தித்தால்…

நானும் கதாசிரியரே! - 12: கஞ்சனும் ஊதாரியும் சந்தித்தால்…
Updated on
2 min read

கதை எழுதும் பயிற்சியில் முக்கியமான கட்டங்களை அழகாகக் கடந்து வருகிறீர்கள். சொற்களை வைத்து கதை உருவாக்குவதில் பலரும் அருமையான கதைகளை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

நாம் வாழும் உலகில் எல்லோரும் உருவத்தில் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதேபோல எல்லோரின் குணநலன்களும் ஒன்றுபோல இருப்பதில்லை. அவர்கள் சந்தித்து பேசிக்கொள்ளும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் அல்லவா? அதை நாமே உருவாக்கி கதையாக எழுதினால் என்ன?

விதவிதமான மனிதர்கள்: கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? எப்போதும் சிரிக்க சிரிக்கப் பேசி அந்த இடத்தையே கலகலப்பாக வைத்திருப்பவர், சிரிப்பதற்கே பணம் கேட்பேன் என்பதுபோல சிடுசிடு என்று இருப்பவர், வாழ்நாள் முழுக்க பயணம் செய்ய விரும்புபவர், எங்கு சென்றாலும் மாலைக்குள் வீட்டுக்கு வந்துவிட நினைப்பவர், மாற்றுத்திறனாளிகளை மரியாதையுடன் நடத்துபவர், மாற்றுத்திறனாளிகளை எப்போதும் கேலி செய்பவர், கறுப்பு நிறத்தில் உள்ளவர்களை கிண்டல் செய்பவர், எந்த வேறுபாடும் இல்லாமல் நன்கு பழகுபவர் என விதவிதமான மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். அவர்களில் ஏதேனும் ஓர் இடத்தில் சந்தித்தால் எப்படி இருக்கும்?

உதாரணத்திற்கு, ஒருவர் செலவே செய்யாத கஞ்சனாக இருப்பார். இன்னொருவர் கடன் வாங்கி தேவையற்ற செலவு செய்பவராக ஊதாரியாக இருப்பார். இன்னொருவரோ எவ்வளவு தேவையோ அதற்கு மட்டுமே செலவு செய்பவராக இருப்பார். இவர்கள் மூன்று பேரும் ஒரே வண்டியில் இரண்டு நாட்கள் பயணம் செய்தால் எப்படி இருக்கும்?

ஓஹோ மழை வந்தது... இன்னொன்றும் பார்ப்போம். செழியனுக்கு மழை என்றாலே பிடிக்காது. முகிலன் மழை பெய்தால் மழை நிற்கும்வரை நனைவான். இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஆனால், இருவருக்கும் ஆகாது. எதற்கெடுத்தாலும் சண்டை போடுவார்கள். ஒருநாள் பள்ளி விட்டு பேருந்துக்காகக் காத்திருந்தான் செழியன். நீண்ட நேரமாகியும் பேருந்தே வரவில்லை. அப்போது, முகிலன் சைக்கிளில் வந்தான்.

பேருந்து வர ரொம்பவும் தாமதமாகும் என்பதால் செழியனை தன் சைக்கிள் ஏற்றிக்கொண்டான். இருவரும் பேசாமலே சென்றார்கள். சிறிதுநேரத்தில் மழை தூற தொடங்கியது. ‘சைக்கிளை நிறுத்து… சைக்கிளை நிறுத்து மழைன்னாலே எனக்கு பிடிக்கவே பிடிக்காது’ எனக் கத்தினான் செழியன். ஆனால், மழை பெய்த உற்சாகத்தில் சைக்கிள் பெடலை வேகமாக மிதித்தான் முகிலன்.

தான் சொல்வதை முகிலன் கேட்காததால் தொப்பென்று சைக்கிளில் இருந்து குதித்து விட்டான் செழியன். கீழே விழுந்து லேசான காயம். இதை எதிர்பார்க்காத முகிலன், சைக்கிளை நிறுத்திவிட்டு ஓடிவந்தான். முகிலனை முறைத்தான் செழியன். அவன் அதைக் கண்டுகொள்ளாமல் தன்னிடம் இருந்த பாலித்தீன் பையை வைத்து புத்தகப் பைகளுக்குள் நீர் புகுந்துவிடாமல் பாதுகாத்தான் முகிலன். அதற்குள் இருவரும் நன்கு நனைந்துவிட்டனர்.

மழையில் நனையாமல் ஒதுங்குவதற்கு அங்கே இடமே இல்லை. அதனால், இருவரும் நனைந்துகொண்டே சென்றனர். நேரம் செல்ல செல்ல, செழியனுக்கும் மழையில் நனைவது பிடித்துவிட்டது. இருவரும் பாட்டுப்பாடி நடனம் ஆடிக்கொண்டே சென்றனர். அப்போது திடீரென்று, மழை தேவதை வந்தது. ’உனக்குத்தானே என்னை பிடிக்கவே பிடிக்காது’ என்று செழியனைப் பார்த்து கேட்டது. அதன் கண்கள் கோபத்தில் கொதித்தன. அதற்கு அப்பறம் என்ன நடந்திருக்கும் என நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

வீட்டுக்கதை: தமிழ் மட்டுமே தெரிந்த பத்து வயது சிறுவன். பஞ்சாபி மட்டுமே தெரிந்த பத்து வயது சிறுமி. இருவரும் காட்டுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். எப்படித் தப்பித்தனர் என்பதை ஒரு கதையாக எழுதுங்கள்.

- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in