மாறட்டும் கல்விமுறை - 4: ஏமாற்றம் இல்லா எதிர்பார்ப்பு

மாறட்டும் கல்விமுறை - 4: ஏமாற்றம் இல்லா எதிர்பார்ப்பு
Updated on
2 min read

வாழ்க்கையில் வெற்றி என்பதை இரண்டே இரண்டு சொற்களில் அடக்கிவிடலாம் என்பார்கள். எதிர்பார்ப்பு மேலாண்மை (Expectation Management) என்பவைதாம் அவை.

எல்லா உறவுகளின் வெற்றியும் இம்மந்திரச் சொற்களில் அடங்கியுள்ளது. வியாபார நிறுவனங்கள் தொடங்கி குடும்ப உறவுகள்வரை எதிர்பார்ப்பு மேலாண்மையின் கீழ்வரும் எனும்போது கல்வியிலும் இதன் பங்கு இருக்கும் அல்லவா! இதன் பங்கு இருக்கிறது என்பது மட்டுமல்ல, மிகவும் அதிகமான தாக்கம் செலுத்துகிறது என்றே சொல்லலாம்.

முகநூலில் ஒரு பத்துவயதுச் சிறுவன் நான் எல்லாவற்றையும் கற்றுவிட்டேன் என்று சொல்கிறான். அவனால் முடிகிறதே. ஏன் என் மகனால் முடியவில்லை? பதினைந்து வயதுப் பையன் ஒரு பெரிய நிறுவனம் தொடங்கி இருக்கிறான். என் மகனும் அதுபோல் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? இரண்டரை வயதுக் குழந்தை திருக்குறள் சொல்கிறது. உலக நாடுகளின் பெயர்களைச் சொல்கிறது. ஏன் என் குழந்தையால் முடியாதா?

ஊடகங்களில் அடிக்கடி இவை போன்ற காணொளிகளும் செய்திகளும் சுற்றிச் சுற்றி வருவதால் நீர்க்குமிழிபோல் தோன்றி மறைய வேண்டிய எண்ணங்கள் மனத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கின்றன. இதற்கென நாம் எடுக்கும் முயற்சிகள் குழந்தையிடத்தில் எந்த மாற்றமும் இல்லாததைக் கண்டு முதலில் ஏமாற்றமும், பிறகு கோபமும், பிறகு கழிவிரக்கமுமாக இந்த எதிர்பார்ப்பு நம்மில் தாக்கம் செலுத்துகிறது.

கல்வியோடு தொடர்புடைய எதிர்பார்ப்புகள்: பள்ளிக் குழந்தைகள் நாளும் புதிது புதிதாக எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். பள்ளியில் சேர்ந்த அன்று முதலே கற்றல் தொடங்கியிருக்க வேண்டும். பாடவும் வேண்டும், ஆடவும் வேண்டும். ஓவியம் வரைய வேண்டும். நீச்சலடிக்க வேண்டும்.

குதிரையேறவும் வேண்டும். என்னென்ன உண்டோ அதையெல்லாம் என் குழந்தையும் செய்ய வேண்டும். புரியாத பகுதியாக இருந்தாலும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும். பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்க வேண்டும். எல்லா வகுப்புகளிலும் எல்லாத் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பெறவேண்டும்.

பள்ளிக்கூடங்களின் எதிர்பார்ப்புகள்: குறிப்பிட்ட கற்பித்தல் முறையில், குறிப்பிட்ட பாடப்புத்தகத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நபரின் மூலம் ஒரு குழந்தை ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கூடம் எதிர்பார்க்கிறது.

ஒரு குறிப்பிட்ட முறையில் கற்று வந்த ஆசிரியர், எவ்விதப் பயிற்சியும் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளில் வேறொரு முறையில் கற்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஒரே செயல்பாட்டின் மூலம் வகுப்பிலுள்ள எல்லா குழந்தைகளும் ஒரேபோல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

ஒருமுறை பயிற்சி நடத்தினால்போதும் எல்லா ஆசிரியர்களும் மாறிய, புதிய, சமீபத்திய மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வார்கள். வகுப்பில் நடைமுறைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறது. ஒருமுறை பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர் அடுத்தமுறை அந்தப் பள்ளியின் கருத்தாளராகி புதியதாக வரக்கூடிய எல்லாருக்கும் பயிற்சியளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

உங்கள் எதிர்பார்ப்பு என்ன? - “எதையாவது எதிர்பார்ப்பதற்கு முன்னால் அங்குள்ள சூழலும் நம் சூழலும் ஒன்றுதானா? நம் வாழ்க்கையில் இதபோல் நடந்திருக்கிறதா? குறுகிய காலத்தில் நடந்த மாற்றங்கள் நிலைத்ததுண்டா? எல்லாவற்றையும்விட இப்படி எதிர்பார்ப்பது சரியா? எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அதற்காக வாழ்நாளை அர்ப்பணிக்க முடியுமா? என்றெல்லாம் யோசித்த பிறகு அத்தகைய எதிர்பார்ப்பை வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்” என்பதே அந்தக் கருத்து.

அரைகுறையாகத் தெரிந்த ஒரு கருத்தின் அடிப்படையில் உருவாக்கும் எதிர்பார்ப்பு மிகவும் ஆபத்தானது. அந்த எதிர்பார்ப்பின்படி நடக்கும் என்று நம்புவீர்கள். நீங்களும் சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். ஆரம்ப அறிகுறிகளால் புளகாங்கிதம் அடைவீர்கள். ஆனால், நாளாக நாளாக அது ஒளிபட்ட பனிபோல் காணாமல் போக, நிலை குலைந்து போவீர்கள்.

எனவே எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்வதற்கு எதிர்ப்பு காட்ட வேண்டாம்.

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in