

பதின்வயதில் பெற்றோரைவிடவும் நண்பர்களே மிக முக்கியமானவர்களாகத் தெரிவார்கள். பெற்றோருக்கு உங்களைப் பற்றித் தெரியாத அந்தரங்க விஷயங்கள் கூட உங்கள் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.
உங்களின் எதிர்காலத்தில் நீங்கள் எடுக்கப்போகும் பல முடிவுகளுக்கான கருத்து உருவாக்குவதில் உங்கள் நண்பர்கள் முக்கிய பங்குவகிப்பார்கள்.
நண்பர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் நீங்கள் நிச்சயம் உங்கள் நண்பர்களைத் தக்கவைத்துக்கொள்ள முயல்வீர்கள். இல்லை...இல்லை... கடும் முயற்சி செய்வீர்கள்! அங்குதான் சிக்கலே.
இன்று இணையத்தில் சிக்கிக்கொள்ளும் இளையோரிடம், “ஏன்இதைச் செய்தாய்?” என்று கேட்டால்பலர் நண்பர்களைதான் கைகாட்டியிருக்கிறார்கள். நண்பனை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இந்த ஆபத்தான காரியத்தில் ஈடுபட்டிருப்பார்கள்.
மற்றொரு புறம் நண்பர்களிடம் தங்களை நட்சத்திரமாகக் காட்டிக்கொள்ளவும் தேவையில்லாத வேளைகளைச் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். அப்படி சமூகவலைதளத்தில் உயிரைக் கூட விட்டுவிடும் பதின்வயது மாணவர்களின் மிகப்பெரிய வில்லன் “#Challenges”.
நான் செய்ததை நீயும் செய்
கடந்த வாரம், லைக்குகளுக்காக சமூகவலைத்தளங்களில் போய் சிக்கிக்கொள்வதை பற்றி பார்த்தோமல்லவா, இதற்கு லைக்குகள் மட்டும் காரணமல்ல, நண்பர்கள் என்கிற இன்னொரு மிக முக்கிய காரணமும் இருக்கிறது.
“இதோ என் போல் செய், சவால்” என்று ஆபத்தான செய்கையைச் செய்து காணொளி எடுத்து ரீல்ஸ், ஷார்ட் வீடியோ வெளியிடுவது. அதில் நண்பர்களை டேக் செய்து சவால் விடுவது. அப்படி விடுக்கப்படும் ஆபத்தான சாவல்களை நான் இங்கு பட்டியலிடப் போவதில்லை.
அதேநேரம் சவால்கள் என்றாலே முழுக்க வில்லனாக கருதுவதற்கில்லை. அதற்கும் காரணம் உங்களைப் போன்ற மாணவர்கள்தான்.
குட்டி வீடியோ புரட்சி!
டிக்டாக் செயலியில் ஷார்ட் வீடியோகளாக அமெரிக்க மாணவர்கள் #historyChallenge - ஐ வைரலாக்கினார்கள். இந்த சவால் மூலம் வரலாற்றுப் பாடங்கள் தொடர்பான தகவல்களைச் சின்ன வீடியோக்களாக்கி வைரலாக்கினார்கள். இது உலக அளவில் மாணவர்கள் செய்த புரட்சி. வரலாற்றுத் தகவல்கள் குவிந்தன. இன்று பல மாணவர்கள் செய்திகளையே டிக்டாக், ரீல்ஸ், யூடியூப் ஷார்ட் வீடியோக்கள் மூலமாகத்தான் பெறுகிறார்கள்.
அப்படிப் பார்த்தால் அறிவு கொடையாகவும் சிறு வீடியோக்கள் உள்ளன. மிகவும் நகைச்சுவையாகவும், ஆனந்தமாகவும், பல பாடங்களை கற்கலாம், அந்த பாடங்கள் தொடர்பான பரிசோதனைகளைக் கூட சின்ன சின்ன வீடியோக்களில் பார்த்துவிடலாம்.
இப்படி நன்மைகளைத் தரும் சவால்கள் இருக்கையில் ஏன் உயிருக்கு ஆபத்தான சவால்களில் சிக்கிக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் மட்டும் புரிந்துகொண்டால் போதாது. உங்கள் நண்பர்களுடன் விவாதியுங்கள். பயனுள்ள சவால்கள் உங்களிடமிருந்து புறப்படட்டும்!
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com
முந்தைய அத்தியாயம்: சைபர் புத்தர் சொல்கிறேன்-5: ரீல்ஸ்-ஷார்ட் வீடியோஸ் கவனம் தேவை