

டிக்டாக் இந்தியாவில் தடை செய்துவிட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால், டிக்டாக் ஏற்படுத்திய தாக்கம் ஒட்டுமொத்த சமூக ஊடகத்தையே அதிரச் செய்தது.
‘ஷார்ட் வீடியோஸ்’ எனப்படும்குறுங்காணொளிகள் வெற்றிபெறப் பல காரணங்கள் உண்டு. அந்த காரணங்களேதான் சிக்கலும். குறுங்காணொளிகள் சுமார் 15 நொடிகள் முதல் அதிகபட்சம் 300 நொடிகள் வரைதான் இருக்கும்.
உடனுக்குடன் அடுத்த வீடியோக்களுக்கு தாவி விடலாம். டேட்டாவும் பெரிதாக செலவாகாது. அடுத்துப் பாடல், ஆடல், நகைச்சுவை நடிப்பு என டிரெண்டிங்கில் உள்ள வீடியோக்களை உருவாக்குவது மிக மிகச் சுலபம். நல்ல வீடியோவாக இருந்தால் அது மிக எளிதாக லைக்குகளை அள்ளிவிடும்.
சாதாரண கிராமத்து மனிதர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என பலரையும் பிரபலமாக்கியது. அதனால் அந்த நபர்களுக்குப் பணம், புகழ் கிடைத்தது. பலர் திரைத்துறையில் கால்பதித்தார்கள்.
நமக்கு அக்கம்பக்கத்தில் வசிக்கும் சிறுவர்களுக்குக்கூட நட்சத்திர அந்தஸ்து கிடைத்துப் பல பொருட்களை விளம்பரம் செய்தார்கள். திறமைக்கான பலனையும் அனுபவித்தார்கள். இவை எல்லாவற்றுக்கும் கூடவே சிக்கலும் சேர்ந்துகொண்டது.
லைக்குகள் வாழ்க்கை அல்ல!
நம் திறமைகளை வெளிப்படுத்தத்தான் ஊடகமே தவிர அதன் அளவுகோள்கள் நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. இங்குதான் பலர் தவறு செய்கிறார்கள். அதிகமான லைக்குகள், அதிகமான வியூஸ் (பார்வைகள்) வரவேண்டும் என்ற காரணத்திற்காகத் தவறான வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆபத்தான சாகசங்களைப் படம்பிடித்தால் வைரலாகிவிடலாம் என மரணம் வரை சென்று விடுகிறார்கள்.
நம் மூளை நம்மைச் சுற்றிஉள்ள உலகிலிருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டேதான் இருக்கும். அப்படிதான் ஆபாசமான பாடல்களுக்கு நடனம் ஆடினால் அதிகமான லைக்ஸ் கிடைக்கிறது என்பதைக் கண்டுணரும் ஒரு பதின்வயது சிறுமியின் மூளை அதை அப்படியே செய்து தானும் லைக் வாங்கிவிடலாம் என நினைத்து ஆக்ஷனில் இறங்கிவிடும்.
குடித்துவிட்டு கோமாளித்தனம் செய்தல், ஆபாச வசவு வார்த்தைகளைப் பேசுதல், பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு நாகரிகமற்ற முறையில் ஆடி, பாடி படம் பிடித்தல் போன்ற அர்த்தமற்ற காரியங்களில் ஆண்களும், பெண்களும் போட்டிப்போட்டுக் கொண்டு ஈடுபடுகிறார்கள்.
இதன் மூலம் அதிக விய்வுஸ் கிடைப்பதால் தவறான முன்னுதாரணமாகவும் மாறிப்போகிறார்கள். இத்தகைய பக்குவமற்ற செயல்களை கற்றுக்கொள்வதன் விளைவாக ஓடும் பேருந்தில் ஆபத்தான செய்கைகளைச் செய்வது, கத்தியை வைத்து பந்தா காட்டலாம் என வீடியோக்கள் எடுத்து மறுநாள் காவல் நிலையத்தில் மன்னிப்பு கேட்ட பல மாணவர்களை பற்றிய செய்திகள் நீங்கள் அறிந்ததே. இன்னும் தெரிந்து கொள்ள நிறைய உண்டு.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com