

ஒரு தேவாலயம். பலரும் அங்கு செய்யும் பிரசங்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அங்கிருக்கிறார். எப்போதும் வித்தியாசங்களை யோசித்துக்கொண்டிருக்கும் அவருக்கு பிரசங்கத்தில் மனம் லயிக்கவில்லை.
அந்த தேவாலயத்தில் தொங்க விடப்பட்டிருந்த விளக்கு காற்றில் அங்குமிங்கும் ஆடுவதைப் பார்க்கிறார்.
அதில் ஒரு ஒழுங்கு இருப்பதையும் பார்க்கிறார். தனது நாடித்துடிப்பினையும் அது அலையும் ஒழுங்கினையும் ஒப்புநோக்குகிறார். ஒரு தத்துவம் பிறக்கிறது.
பின்னர் வீட்டிற்கு வந்தபிறகு நூலில் சில பொருட்களைக் கட்டி ஆடவிட்டு அந்த ஒழுங்கினை ஆராய்கிறார். தனி ஊசலுக்கான அறிவியலாக அது உருவெடுக்கிறது. பின்னாளில் பெண்டுலமாகி கடிகாரங்களில் உதவியது. இவ்வாறு ஆராய்ந்தது கலிலியோதான் (1564 – 1642).
உண்மையை சொன்னதால் பிரச்சினை!
மருத்துவ படிப்பில் வெற்றிபெறாவிடினும் கலிலியோ பேரார்வத்துடன் கற்ற கணிதம் கைகொடுத்தது. பைசா நகரின் அருகில் உள்ள டஸ்கினி மாநிலத்தின் சிற்றரசர் கலிலியோவை பைசா நகரின் பல்கலைக்கழகத்தில் கணிதப்பேராசிரியராக பணியமர்த்தினார்.
மாணவர்களின் சந்தேகங்களை தெளிவாகப் போக்கிவந்தார். இது சக பேராசிரியர்களுக்கு பிடிக்கவில்லை. கலிலியோ கணிதம் பயின்றவரல்ல எனவே இவரைப் பணியில் இருந்து நீக்கவேண்டும் என்று வாதிட்டனர். பல்கலைக்கழக நிர்வாகமோ “நாங்கள் கலிலியோவுக்கு சம்பளம்தரவில்லை.
சிற்றரசர்தான் தருகிறார்” என்றது.இது ஒருபுறம் இருக்க, இத்தாலி மன்னரின்மகன் கண்டுபிடித்த தூர்வாரும் இயந்திரம்தொடர்பாக தமது கருத்தினை வெளிப்படையாகத் தெரிவித்ததால் அவரது கோபத்திற்கு ஆளானார் கலிலியோ. இதனால் பைசா நகரப் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் நண்பர்களின் உதவியோடு வெனிஸ்நகரின் பதுவா பல்கலையில் பணியில் சேரவசந்தகாலம் தொடங்கியது. பலவிதமான ஆய்வுகளையும் சுதந்திரமாக நடத்தினார். தானே தொலைநோக்கிகளை வடிவமைத்து கோள்களை ஆராய்ந்தார்.
பூமியிலிருப்பது போன்றேசந்திரனிலும் மலைகள், பள்ளத்தாக்குகள்உள்ளன என்று கண்டறிந்தார். வியாழன் கோளுக்கும் அழகழகான நிலவு இருப்பதை உறுதி செய்தார். சூரியனில் புள்ளிகள் இருப்பதையும் கண்டறிந்தார். நிலவுக்கும் சூரியனுக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவதா என அக்காலஅறிஞர்கள் பலரும் கொதித்தெழுந்தனர்.
அறிவியலுக்கு வந்த சோதனை
டாலமி, அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து நம்பப்பட்டுக்கொண்டிருந்த புவிமையக் கோட்பாட்டை கோபர்நிகசின் கருத்துக்களைக் கொண்டு தகர்த்தார். அதற்கு உதவியாக அமைந்தது கெப்ளர் ஆய்வுகள். அவரது காலத்திற்கு முன்புவரை விண் பொருட்களை கண்களாலும் தொலைநோக்கிகளாலும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கலிலியோ கோள்களின் இயக்கத்தை கணிதவியல் மூலம் கணிக்கும் பழக்கத்தை கொண்டுவந்தார். இதனால் கிறிஸ்தவத்திருச்சபையின் கோபத்திற்கும் ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கோபர்நிக்கசின் கோட்பாடுகளைப் போதிக்கக்கூடாது என்றநிபந்தனையோடு விடுவிக்கப்பட்டார். பின்னரும், ‘இரண்டு உலக அமைப்புகள் பற்றியஉரையாடல்’ என்ற நூலினை பதிப்பித்தார்.
இதிலும் கோபர்நிக்கசின் கோட்பாடுகளையேஐயத்திற்கிடமின்றி விளக்கினார். போப்பிடம்கொண்ட உடன் பாட்டை மீறிய குற்றச்சாட்டுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் “சூரியன்தான் பூமியை சுற்றுகிறது தான் சொன்னது தவறு” என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவைத்தனர்.
அவ்வாறு அவர் சொன்னாலும் மனதுக்குள் பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்றும் தெரிவித்துக்கொண்டார். வீட்டுச் சிறையில் இருந்தபடியே இயக்கவியல் தொடர்பான நூலை அயல்நாட்டுக்கு கடத்தி அங்கேயே பதிப்பித்தார். நூல் வெளிவந்தபோது முற்றிலும் பார்வை இழந்திருந்தவர் அதனை தொட்டு உணர்ந்தவாறே இயற்கை எய்தினார். 352 ஆண்டுகள் கழித்து 1994-ல் கலிலியோ நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
(தொடரும்)
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com
முந்தைய அத்தியாயம் - அறிவியல்ஸ்கோப் - 4: நம்புவதா அல்லது ஆராய்வதா?