

இரண்டு வெவ்வேறு எடைகொண்ட பொருட்களை ஒரு கட்டிடத்தில் இருந்து கீழே போட்டால், இரண்டில் எந்த பொருள் விரைவாகத் தரையை வந்தடையும்? இந்த கேள்விக்கு இன்றும் பலர் அளிக்கும் பதில், இருப்பதிலேயே எடை அதிகமாக உள்ள பொருள்தான் விரைவாகத் தரையை வந்தடையும் என்பதே.
வரலாற்றில் பலருக்கும் இதில் ஐயம் இருக்கவே செய்தது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தாலியில் உள்ள பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தின் மேல் இருந்து இரண்டு வெவ்வேறு எடை கொண்ட பொருட்களை வீசி காட்டினார் ஒருவர். இதன்மூலம் வெவ்வேறு எடைகொண்ட பொருட்களை உயரமான இடத்தில் இருந்து வீசினால் இரண்டுமே ஒரே நேரத்தில்தான் தரையை வந்தடையும் என்ற உண்மையை நிலைநாட்டினார்.
மேல் இருந்து கீழே வீசப்படும் பொருளின் நகர்வை நிர்ணயிப்பது அதன் அளவோ, வடிவமோ, நிறையோ அல்ல. புவியீர்ப்பு விசை காரணமாகத்தான் வெவ்வேறு எடை கொண்ட பொருள்கள் ஒரே நேரத்தில் தரையில் வந்து விழுகின்றன என்பதையும் அவர் நிறுவினார்.
அரிஸ்டாட்டில் காலம் தொட்டு பலரும் சோதனை செய்யாமலே இதனை நம்பிக்கொண்டிருந்தனர். நம்புவது, ஆய்வு செய்வது இரண்டில் ஆய்வு செய்வதே சிறந்தது என்பதை இவ்வாறு நிரூபித்தவர் யார்? வேறு யாருமல்ல இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி (1564-1642).
அருகில் இருந்த பள்ளிகளில் இலக்கணம், சமயக் கல்வி போன்றவற்றைப் பயின்றார் கலிலியோ. இவர் பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோது ஆண்களைவிட பெண்களுக்குப் பற்கள் குறைவு என்ற நம்பிக்கை நிலவியது.
ஆணுக்கு பற்கள் அதிகமா?
ஆண்கள் சமூக மாற்றத்துக்காக உழைக்கிறார்கள். அவ்வாறு உழைக்கப் பெரிய மூளை தேவை. மூளை பெரிதாக வளர வேண்டுமானால் நிறைய சாப்பிட வேண்டும். அவ்வாறு நிறைய சாப்பிட அதிக பற்கள் தேவை என்று நம்பப்பட்டது. அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்து பல நூற்றாண்டுகளாக இப்படி நம்பப்பட்டு வந்தது.
ஒருநாள் மாலை கலிலியோ தனது தாயின் வாயைத் திறக்கச் சொல்லி எண்ணிப் பார்த்தார். அக்கம் பக்கத்தில் இருந்த பெண்களிடமும் சோதனைசெய்தார். ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பற்களின் எண்ணிக்கையில் வித்தியாசமில்லை என்பதை இவரே முதலில் பதிவு செய்ததாக வரலாறு கூறுகிறது.
சிறுவனாயிருந்தபோதே, மாலை நேரமாகிவிட்டால் போதும் வானத்தை உற்றுநோக்க ஆரம்பித்துவிடுவார். அந்த பழக்கம் பின்னாளில் அவருக்கு பல அடிப்படையான விஷயங்களை ஆராய உதவியாய் இருந்தது. இவரது தந்தை கவிஞராகவும், இசைக் கலைஞராகவும் விளங்கினார். இதனால் இசையிலும் கலிலியோவுக்கு ஆர்வம் உண்டானது.
பள்ளி முடித்த பிறகு, கணிதம், இசை, இயந்திரவியல் படிக்க ஆசையிருந்தும் அவரது தந்தையின் ஆசைப்படி மருத்துவம் பயிலச் சென்றார். மருத்துவம் படித்துக்கொண்டே கணிதப் பாடங்களையும் ஆர்வமாகக் கற்றார்.
படித்தது மருத்துவம் விரும்பியது கணிதம்!
கணித மேதைகள் யூக்ளிட், ஆர்கிமிடீஸ் போன்றோரின் கணித நூல்களையும் ஊன்றி வாசித்தார். மேலே நாம் பார்த்ததைப் போன்று முன்னோர்களான அரிஸ்டாட்டில் போன்றோர் கூறியகருத்துக்களில் இருந்த முரண்பாடுகளையும் பகிரங்கப்படுத்தி வந்தார். இதனால் மருத்துவம் படிக்கும் மாணவன் எதற்காக கணிதம் கற்க வேண்டும் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கலிலியோ எதனையும் பொருட்படுத்தவில்லை. அவர் மனதிற்கு சரியெனப்படும் விஷயங்களைப் படித்தும் பகிர்ந்தும் வந்தார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலரின் அதிருப்தியைச் சம்பாதித்த காரணத்தால் மருத்துவக் கல்வியை இவரால் நிறைவு செய்ய இயலவில்லை.
“அறிவியலைப் பொறுத்தவரை, ஒருதனிமனிதனிடம் ஏற்படும் அறிவார்ந்த சிந்தனையை விட ஆயிரம் சக்திவாய்ந்தவர்களின் கருத்துக்கள் முக்கியமானவை அல்ல” என்ற கருத்தை ஆணித்தரமாக முன்னிறுத்திய இவரைக் கணிதம் கைவிடவில்லை. எப்படி என்று அடுத்த வாரம் பார்ப்போம்...
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com