

நவீன தொழில்நுட்பத்தில் கில்லாடி ஆகிவிட்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், டிஜிட்டல் கில்லாடி ஆவதெப்படி என்பதுதான் பலருக்கு தெரிவதில்லை.
இதற்கு நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையை சிலிக்கான் மூளையை புரிந்துகொள்ள வேண்டும். சிலிக்கான் மூளையின் அடிப்படை வேகம். கணிதச் செயல்பாடுகளை அது அதிவேகமாகச் செய்து முடிக்கும்.
ஆனால், மனித மூளைக்கும் சிலிக்கான் மூளைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் சிலிக்கான் மூளைக்கு சுயமாக யோசிக்க தெரியாது. சிலிக்கான் மூளை ஜீபூம்பா பூதம் போன்றது.
இதனை மிகச் சரியாக வேலை வாங்க முடிந்தால் நிறைய செயல்களை எளிதில் செய்துவிடலாம். உதாரணத்துக்கு, அறிவாளி/முட்டாள், நல்லவன்/ கெட்டவன் என்பதாக பிரித்துப் பார்ப்பது போல புதிய பிரிவினை ஒன்று உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. சிலிக்கான் மூளையை வேலை வாங்கத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற பிரிவினைதான் அது.
கரோனாவிலும் மவுசு குறையவில்லை
கரோனா காலகட்டத்தில் பலர் வேலை இழந்து, பணத்தை இழந்தபோது சிலிக்கான் மூளையை வேலை வாங்கத் தெரிந்தவர்கள் மட்டும் வீட்டில் இருந்தபடியே அதிக அளவில் சம்பாதித்தார்கள். அது எப்படி சாத்தியமாயிற்று? வாருங்கள் தெரிந்து கொள்வோம். முதலாவதாக கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் மட்டும் தெரிந்திருந்தால் போதும் எளிதில் சிலிக்கான் மூளையை வேலை வாங்க கற்க முடியும்.
உதாரணத்துக்கு, பள்ளியில் படிக்கும்போது நமக்கு முதலில் எப்படி எண்ணுவது என்றும் பின்னர் கூட்டல், கழித்தல் போன்ற செயல்பாடுகளை ஆசிரியர் கற்பிப்பார். ஆரம்பத்தில் ஒற்றை இலக்கக் கூட்டலை விரல்களை பயன்படுத்தி கணக்கிடுவோம். அதுவே மனப்பாடம் ஆனதும் ஒற்றை இலக்கக் கூட்டலை உபயோகித்து இரட்டை இலக்க, மூன்று, நான்கு என்று பல இலக்க கூட்டல்களை ஆசிரியர் கற்பிப்பார்.
இதில் என்ன இருக்கிறது என்று யோசிப்போம். ஆனால், இதில்தான் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை கற்கும் ரகசியமே அடங்கி உள்ளது. இதனை நாம் சரியாகப் புரிந்துகொண்டால் நவீன தொழில்நுட்பத்தில் நிபுணராவது எளிது. ‘அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்’ என்கிற பழமொழி நவீன தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற நினைப்பவர்கள் அடிக்கடி மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.
7 8 என்றால் உடனடியாக 15 என்றும் 5 6 என்றால் 11 என்றும் விடையளிப்போம். ஆனால், 28 56 என்றால் உடனடியாக விடையளிக்க இயலாது. இந்த ஒற்றை இலக்க கூட்டலை நாம் ஞாபகப் பகுதியில் இருந்து விடையளிக்கிறோம். அதாவது 1 1 முதல் 9 9 வரை நாம் நினைவில் வைத்திருக்கிறோம். ஆனால் இரண்டு, மூன்று, நான்கு இலக்கக் கூட்டல்களை நினைவில் வைத்திருப்பதில்லை. அதற்கு ஒரு செய்முறை தேவைப்படுகிறது. அது தெரிந்தால் நம்மால் 56 78-ஐ கூட்டி விடையளிக்க இயலும்.
அறிவு வேறு, திறன் வேறு!
இந்த செய்முறையை ஆசிரியர் நமக்கு கற்றுத் தருகிறார். 56 7ஐ நினைவில் வைத்துக்கொள்வதற்குப் பதிலாக இந்த செய்முறையை நினைவில் கொள்கிறோம். பள்ளியில் ஆசிரியர் (மனித மூளை) மாணவருக்கு (மனித மூளை) இந்த செயல்பாடுகளை சொல்லித் தருகிறார்.
மாணவரும் வாழ்நாள் முழுவதும் இந்த செயல்முறையை பயன்படுத்தி எத்தனை எண்களானாலும் கூட்டுவார். ஆசிரியர் மாணவருக்கு இரட்டை இலக்கக் கூட்டலை சொல்லித்தரும்போது மாணவருக்கு ஒற்றை இலக்கக் கூட்டல் தெரியும் என்ற அடிப்படையில்தான் கற்பிப்பார். மீண்டும் சொல்கிறேன், இது மிகவும் சுலபமாகத் தெரிந்தாலும் இதுதான் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படை. இதனை புரிந்துகொண்டால் நவீன தொழில்நுட்பத்தைக் கற்பது எளிது.
“வானத்தில் பற. ஆனால், முதலில் பூமியில் நன்றாக கால்களை ஊன்றி நிற்கக் கற்றுக்கொள்” என்று டாக்டர் அப்துல் கலாம் அடிக்கடி கூறுவார். அதேபோல் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையைக் கற்றால் சிலிக்கான் மூளையை கைப்பற்றி விடலாம். சிலிகான் மூளைக்கு சில சிறிய செயல்பாடுகள் தெரியும்.
நாம் அந்த சிறிய செயல்பாடுகளை செய்ய வைக்கிறோம். உதாரணமாக, மிகவும் குறைந்த வேகத்தில் செயல்படும் ஒரு சிலிக்கான் மூளையால் ஒரு வினாடியில் 10 லட்சம் செயல்பாடுகளை செய்ய இயலும்.அதிவேகமாக செயல்படும் சிலிக்கான் மூளை 1 லட்சம்கோடி செயல்பாடுகளை ஒரு வினாடியில் செய்யும்.
அதற்காக சிலிக்கான் மூளையை கண்டு மிரள வேண்டாம். மனித மூளையை விட மிக குறைந்த ஆற்றல் கொண்டதுதான் சிலிக்கான் மூளை. அதில் பொருத்தப்பட்டிருக்கும் அதிவேகம்தான் சிலிக்கான் மூளையை பெரிதாகக் காட்டுகிறது.
உங்களுக்கு தெரிந்த கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் செயல்பாடுகளை செய்முறையாகத் தாளில் எழுதி அடுத்தவரை செய்யச் சொல்லுங்கள். நீங்களும் இந்த வழிமுறைகளை எழுதலாம். இதுதான் முதல் படி. முதலில் இதில் நிபுணராக முயற்சி செய்யுங்கள். பொறியியல் பட்டம் படிக்கும் மாணவர்கள்கூட இதில் தடுமாறுகிறார்கள்.
இதுதான் இன்றைய பிரச்சினையே. அறிவு வேறு, திறன் வேறு. திறனுக்குப் பயிற்சி தேவை. நாம் பயிற்சி செய்ய மறுக்கிறோம். எல்லாவற்றையும் மனப்பாடம் செய்கிறோம். இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் நிபுணராகப் பயிற்சி தேவை.
(டிஜிட்டல் மொழி தொடரும்)
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்
முந்தைய அத்தியாயம்: டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 2: புதிய தொழில்நுட்பம் கற்பது கடினமா?