

இன்றைய தொழில்நுட்பம் பல அதிசயங்களை செய்கிறது. ஒரு ஸ்மார்ட்போனில் கேமரா, வீடியோ பிளேயர், இணையதள வசதி, ரிமோட் கண்ட்ரோல் என பல்வேறு செயல்பாடுகளை பொருத்திவிடுகிறார்கள்.
இது எப்படி சாத்தியம்? புதிய எலக்ட்ரானிக் சாதனங்கள், எலக்ட்ரிக் கார், ஸ்கூட்டர்களில் பல்வேறு பொருட்கள் இணைக்கப்பட்டு இருந்தாலும் அவற்றுக்கு பொதுவான முக்கியமான பகுதி ஒன்று உள்ளது. அதுதான் ‘சாப்ட்வேர்’.
‘சாப்ட்வேர்’ என்றதும் கணினியுடன் மட்டுமே தொடர்புப்படுத்திப் பார்க்கிறோம். இன்று நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான சாதனங்களில் சாப்ட்வேரின் பங்கு அதிகம். அடுத்து இது ஏதோ பெரிய சமாசாரம் என்று நினைக்க வேண்டாம்.
கலக்கும் தமிழர்கள்!
உங்கள் வீட்டுக்கு புதிதாக வரும் விருந்தினருக்கு வீட்டில் இருந்து பேருந்து நிலையத்துக்கோ, ரயில் நிலையத்துக்கோ சரியாக வழி சொல்லத் தெரிந்தால் நீங்களும் ஒரு சாப்ட்வேர் பொறியாளர் ஆகலாம். இந்த சாப்ட்வேர் தொழில்நுட்பத்தில் இந்தியர்கள் கில்லாடி.
ஆகவேதான் உலகில் தயாரிக்கப்படும் எல்லா எலக்ட்ரானிக் மற்றும் கணினியுடன் தொடர்புடைய பொருட்களிலும் இந்தியரின் பங்கு அதிகம். அதிலும் அமெரிக்கா, ஜெர்மனியில் தயாராகும் எலக்ட்ரானிக் கார்களுக்கு தேவையான சாப்ட்வேர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தயாராகிறது.
ஆகவே இந்தியாவில் கைபேசிகள் தயாரிக்காவிட்டாலும் அதில் உள்ள ‘சாப்ட்வேர்’ தொழில்நுட்பம் பெங்களூர், சென்னை, ஹைதராபாத்தில்தான் தயாராகிறது.
தேவை சமத்துவ மனப்பான்மை!
பொறியியல் பட்டம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு குட்டி ரகசியம் சொல்கிறேன். அதை பட்டப்படிப்பு காலத்தில் செயல்படுத்தி வந்தால் குறைந்தபட்சம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலையில் சேரலாம் அல்லது சொந்தமாக எலக்ட்ரானிக் சாதனங்களை உருவாக்கலாம். பொறியியல் மாணவர்கள் மட்டுமல்ல கலை, அறிவியல் டிப்ளமா படிக்கவிருப்பவர்களும் இந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டால் நல்ல சம்பளத்தில் வேலையில் சேரலாம்.
ரகசியத்தை தெரிந்து கொள்ள முதன்மையான தேவை சமத்துவ மனப்பான்மை. எனக்கு இந்த தொழில்நுட்பம் ‘வராது’, இந்த தொழில் நுட்பத்துக்கு ‘ஆங்கில புலமை தேவை’, இந்த தொழில்நுட்பத்தை பொறியியல் கல்லூரியில் குறிப்பிட்ட பிரிவை தேர்ந்தெடுத்தவர்கள் மட்டுமே படிக்க இயலும், இந்த தொழில்நுட்பத்தில் நிபுணராக ஐ.ஐ.டி. போன்ற பெருங்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்தாக வேண்டும் போன்ற மனத் தடைகளை உடைத்தெறிய வேண்டும். எல்லாமும் எல்லோரும் கற்கலாம் என்று நம்ப வேண்டும்.
கற்றுக் கொள்ளாமல் அல்லது பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு சாக்கு போக்கு கூறிக் கொண்டிருக்கக் கூடாது. சில சமயங்களில் சில புதிய வார்த்தைகள் அல்லது புதிய செயல்பாடுகளை கற்க வேண்டியிருக்கலாம்.
ஆனால், அவை கடினமானது அல்ல. உதாரணமாக வீட்டில் உள்ள சுவிட்சை ‘ஆன்’ செய்தால் பல்பு ஒளிரும். இதில் என்ன இருக்கிறது என்று கேட்பீர்கள். சிறிது யோசித்துப் பாருங்கள் எலக்ட்ரீசியன் வந்து வேலை செய்யாத சுவிட்சை மாற்றும் போது முதலில் மெயின் சுவிட்சை ‘ஆப்’ செய்து விடுவார்.
பின்னரே வேலை செய்யாத சுவிட்சை சரி செய்வார். அவர் மெயின் சுவிட்சை ‘ஆப்’ செய்யும் போது வீட்டில் உள்ள அனைத்து சுவிட்சுகளுக்கும் செல்லும் மின்சாரம் தடைபடுகிறது. அதன் பிறகு எந்த மின்சாதனமும் வேலை செய்யாது. ஆனால், இப்போது மெயின் சுவிட்சு போக ஒவ்வொரு அறைக்கும் ஒரு பொது சுவிட்சு பொருத்தப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.
எந்த அறையில் எலக்ட்ரீசியன் வேலை செய்யப் போகிறாறோ அந்த அறையின் பொது சுவிட்சை மட்டும் ‘ஆப்’ செய்து விட்டால் இனி போதும். மற்ற அறைகளில் மின்சாரம் தடைப்படாது. நம்மிடம் இப்போது மெயின் சுவிட்சு, பொது சுவிட்சு மற்றும் ஒவ்வொரு மின் சாதனத்திற்கும் ஒரு சுவிட்சு என்று மூன்று விதமான சுவிட்சுகள் உள்ளது. இதுதான் இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படை.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்
முந்தைய அத்தியாயம்: டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 1: படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்கா?