டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 1: படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்கா?

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 1: படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்கா?
Updated on
2 min read

“பறவையை கண்டான் விமானம் படைத்தான்துள்ளும் மீன்களைக் கண்டான் படகை படைத்தான்மின்னலைக் கண்டான் மின்சாரத்தைக் கண்டுபிடித்தான்தன் பிம்பத்தைப் பார்த்தான் ரோபோட் கண்டுபிடித்தான்”

இன்று தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கும் பலரிடம் ஒரே ஒரு கேள்வி கேளுங்கள் உங்களுக்கு பல செய்திகள் புரியும். இதுதான் அந்த கேள்வி“நீங்கள் பள்ளியில் கற்ற கணிதம், அறிவியல் மற்றும்பொறியியல் கல்வி எந்த அளவுக்கு உங்கள் வேலையில் பயன்படுகிறது?" இந்த கேள்வி எல்லோரையும் சிந்திக்கவைக்கும்.

இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளி பல கேள்விகளை எழுப்பும். ஏன் ஒவ்வொரு மாணவரும் இவ்வளவு படிக்கிறார்கள், பயனில்லாத கல்வியை நமது மாணவர்கள் படிக்கிறார்களா, அல்லது நாம் நமது மாணவர்கள் மீது திணிக்கிறோமா, வேறெப்படி சொல்லித் தரலாம், எதை கற்றால் அறிவும் வளரும் வேலைக்கும் உதவும் என்பன போன்ற கேள்விகளுக்கு இந்த தொழில்நுட்பத் தொடரில் விடை கண்டறிய முயல்வோம்.

வள்ளுவர் கொடுத்த டிப்ஸ்!

நமது மாணவர்களும், நாடும் முன்னேற நாம் தொழில்நுட்பக் கல்வியில் செய்யவேண்டியது என்ன? இதை அன்றே திருவள்ளுவர் தனது இரண்டடி குறளில் கூறிவிட்டார்.

“கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக"

இதுதான் இன்றைய தேவை

“கற்க கசடற" நாம் கற்பனவற்றை பிழை இல்லாமல் புரியும்படி கற்க வேண்டும்.

“கற்றபின் நிற்க அதற்குத் தக" நாம் கற்றவற்றை உடனடியாக தொழில்நுட்பத்தில் செய்துபார்க்க வேண்டும்.

இன்று எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக மிகச்சிறிய அளவிலான, விரல் நுனியில் வைக்கக்கூடிய மைக்ரோ மெமரி கார்டுகளில் மிக அதிக அளவில் (1 லட்சம் கோடி எழுத்துக்கள்) சேமிக்க முடிகிறது. இதனை 1 டெரா பைட் (Tera Byte) என்று அழைக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியமாகிறது? இதற்கும் கணிதத்திற்கும் தொடர்பு உள்ளதா? நான் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கிறேன் எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. எனக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் தவிர கணிதத்தில் எதுவும் தெரியாது.

என்னால் இந்த தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ள முடியுமா? பள்ளியில் பயிலும் 7ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு மாணவர்களால் இன்றைய தொழில்நுட்பத்தை எளிதில் புரிந்துகொண்டு சிறிய சிறிய பொருள்களை தாங்களாகவே உருவாக்க இயலுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு இந்த தொடர் விடையளிக்கும். உங்களால் தினமும் ஒருமணி நேரம் பயிற்சி செய்ய இயலுமானால் இன்றைய தொழில்நுட்பம் மிகவும் எளிமையானது.

கம்ப்யூட்டர் துறை மட்டும் ஒசத்தியா?

இன்றைய பெற்றோரும், மாணவர்களும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்த்து அதிகம் குழம்பியிருக்கிறார்கள். ஏன் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை படித்தால் அல்லது பயிற்சி செய்தால் கல்லூரி படிப்பை முடித்தவுடன் உடனடியாக அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது, இன்றைய சூழலில் பொறியியல் படிப்பே அவசியம் இல்லையா இது போன்ற பல கேள்விகளுக்கு இத்தொடர் விடையளிக்கும்.

கம்ப்யூட்டர் துறையில் ஏன் இவ்வளவு வேலைவாய்ப்புகள், கம்ப்யூட்டர் துறையில் ஏன் அதிகசம்பளம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் எளிதா அல்லது கடினமா இவற்றைப் பற்றி ஒரு சிறிய உதாரணத்துடன் தொடங்குவோம். அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம்.

அமெரிக்காவில் ஒரு எலக்ட்ரீசியன் உங்கள் வீட்டின் ஒயரிங்கை சரிசெய்ய வந்தால் அவரது சம்பளம் ஒருமணி நேரத்திற்கு 70 டாலர். இன்று ஒரு டாலரின் மதிப்பு ரூ.78. ஆகவே எலக்ட்ரீசியனுக்கான ஒரு மனிநேரசம்பளம் (70x78)= ரூ. 5,460. இதே சம்பளம்தான் பிளம்பிங் செய்பவருக்கும், கார் ஓட்டுபவருக்கும், பழுதுபார்ப்பவருக்கும் மற்றும் கம்ப்யூட்டர் புரோக்ராமருக்கும். இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு நீங்கள் இந்தியாவில் இருந்து கார் ஓட்ட இயலாது. அமெரிக்காவில் உள்ள பிளம்பிங் வேலைகளை இந்தியாவில் இருந்துசெய்ய இயலாது. அமெரிக்காவில் உள்ள வீட்டில்எலக்ட்ரிக் வேலைகளை இந்தியாவில் உள்ள எலக்ட்ரீசியன்களால் செய்ய இயலாது. ஆனால், அமெரிக்காவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்துக்குத் தேவையான வேலைகளை ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர் இந்தியாவில் இருந்தே செய்ய இயலும். அதுதான் கம்ப்யூட்டர் செய்யும் மாயம்.

(தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…)

கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்

அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், கணினி அறிவியல், பொறியியல் சார்ந்த உங்களுடைய அனைத்து சந்தேகங்களையும் ‘டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்!’ பகுதியில் கேட்கலாம். மின்னஞ்சல்: vetrikodi@hindutamil.co.in
Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in