பிடிமானம் வேண்டும் | இது நம் வகுப்பறை சமூகம் 10

பிடிமானம் வேண்டும் | இது நம் வகுப்பறை சமூகம் 10
Updated on
2 min read

அடிக்கடி வெறுமை வந்து கவ்வுகிறது. வயதாகும்போது வெறுமையும் அதிகரிக்கிறது. சிலருக்குச் சில ஆர்வங்கள் நடைப்பயிற்சியில்; அரசியலில்; பேரன்பேத்திகளைத் தூக்கித் திரிவதில்; பத்திரிகை கள் வாசிப்பதில்; சடங்கு சம்பிரதாயங்களில் என முதியவர்களுக்குப் பல மாதிரி ஆர்வங்கள்.

அவையே பிடிமானங்களாகி அவர்களைக் காக்கின்றன. ஆர்வமற்றோரும் உள்ளனர். எவ்விதப் பிடிமானங்களும் அற்றோர். பலருக்குச் திறன்பேசிதான் பிடிமானம். திறன்பேசியில் மூழ்கிப் புதைந்து கிடக்கும் முதியவர்களை தினசரி என் குடியிருப்பில் சந்திக்கிறேன்.

பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் பார்க்கிறேன். தங்கள் வகுப்பறை ஞாபகங்களில் அடிக்கடி அவர்கள் மூழ்குகிறார்கள். பணியில் இருந்தபோது விடுமுறைக்காக ஏங்கியவர்கள், பணி ஓய்வுபெற்றதும் வகுப்பறைக் காக ஏங்குகிறார்கள்.

இணைப்பது எப்படி? - சமுத்திரத்தின் ஒரே பிடிமானம் வகுப்பறை. தந்தை இறந்த மூன்றாம் நாளே மொட்டைத் தலையுடன் வகுப்பறைக்கு வந்தவர் அவர். நெருங்கி வரும் மாணவர்கள் சிலரே. பலர் விலகிப் போகின்றனர். விலகிப்போகிறவர்களையும் இணைத்தால்தான் வகுப்பறையின் பிடிமானம் மேலும் இறுகும்.

எப்படி இணைப்பது? ஆசிரியர் என்கிற அடையாளத் தையும், ஆசிரியப் பணியில் கிடைக்கும் அதிகாரத்தையும் கழற்றிவைத்தால் மட்டுமே அனை வரையும் இணைக்க முடியும். பிடிமானமும் கெட்டிப்படும்.

உணர்வுபூர்வமான இணைப்பு போதாது. சமுத்திரம் அடிக்கடி காபிக் கடைக்குப் போவார். ஒருநாள் பொன்னுத்துரை அங்கு வந்திருந்தான். வளர்ந்த பையன். ஒட்டாமல் விலகிப் போகிறவன்.

மதிய உணவுக்குத் தயிர்ச்சாதம் வாங்க வந்திருந்தான். “பொன்னுத்துரை! காபி சாப்பிடுய்யா” என்று அவனிடம் பேச்சுக் கொடுத்தார் சமுத்திரம். பொன்னுத்துரையின் முகம் மலர்ந்தது.

தன் பெயரை யார் கூப்பிட்டாலும் மகிழ்ச்சிதான். ஆசிரியரே கூப்பிட்டால்?… பொன்னுத்துரை குழைந்தான். ‘காபி குடிக்கமாட்டேன் சார்’. ‘காபி சாப்பிடுய்யா’ என்ற இரண்டு வார்த்தைகள் பொன்னுத்துரையின் போக்கையே மாற்றிவிட்டன. அதன் பிறகு, ஆசிரியரோடு பொன்னுத்துரை மிக நெருக்கமானான்.

அவன்தான் ரகுபதியையும் ஆபிரகாமையும் ஆசிரியர் பக்கம் கொண்டுவந்தான். வளரும் பிள்ளைகளின் உளவியலை ஆசிரியர் அறைகள் பேசுவதில்லை. பேசவேண்டும். காபிக் கடைக்காரர் ஒருமுறை கேட்டார்: “ஒவ்வொரு பையன் கிட்டவும் வலியப் போய்ப் பேச்சு கொடுக்கிறீங்களே! ஏன்?”. சமுத்திரம் மெல்லச் சிரித்தார்.

“தேவை ஏற்படும்போது பேசுறேன். வலியப் பேசுறது, பேசுனா பதிலுக்குப் பேசுறது - இந்த வித்தியாசமெல்லாம் எனக்குத் தெரியாது” என்றார். உண்மைதான்.

விலகிப்போன மாணவர்களை வகுப்பறையில் இணைப்பது சமுத்திரத்தின் இன்றைய தேவை. அவர்கள் இணையும்போது வகுப்பறை கெட்டிப்படுகிறது. ஒவ்வொரு வரையும் அக்கறையுடன் பார்க்கும் கண்களும் விரிவடைகின்றன.

புது அன்பு! - துர்காவுக்குப் பயந்த சுபாவம். தயக்க மும் அதிகம். இருட்டின் மீது துர்காவுக்கு எப்போதும் பயம். வயது நாற்பதாகிறது. இரண்டு பையன்கள். பள்ளியில் படிக்கிறார்கள்.

கணவர் கோபால் ஆட்டோ ஓட்டினார். பொறுமையானவர். துர்காவுக்கு அடிக்கடி கோபம் வரும். பயந்தவர்களுக்கு வரும் கோபம். துர்கா கோபம் கொண்டு பேசும்போது, கோபால் பதில் பேசமாட்டார்.

கோபம் தீரட்டும் என்று அமைதி காப்பார். வந்த கோபம் வெகு விரைவில் போகும். பிறகு எல்லாம் சகஜமாகும். கோபால் ஆறு மாதங்களுக்கு முன் இறந்துபோனார். முதலில் நெஞ்சு வலி என்றார். படுத்தே இருந்தார். இரண்டு நாளில் இறந்துவிட்டார். வீடு திக்குமுக்காடிப் போனது.

தினசரி செலவுக்குப் பணம் வேணும். என்ன செய்யலாம்? கணவரின் ஆட்டோ சும்மா கிடந்தது. மூத்த பையன் ராஜா பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறான். ராஜாதான் துர்காவுக்கு ஆட்டோ ஓட்டப் பழக்கிக்கொடுத்தான். இப்போது துர்கா ஆட்டோ ஓட்டுகிறார். வருமானம் பரவாயில்லை. சமாளிக்கலாம்.

ஒரு நாள்- இரண்டு பெண்கள் ஆட்டோ வில் ஏறினர். சமூகப் பிரச்சினைகளைப் பேசியபடி வந்தனர். புது அனுபவம். அவர்கள் பேச்சில் துர்கா ஈர்க்கப்பட்டார். இரண்டு பெண்களும் ஒரு தொழிற்சாலை முன் இறங்கினர். ஏற்கெனவே பலர் அங்கு இருந்தனர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட இரு தொழிலாளர்களுக்கு ஆதரவான போராட்டம். துர்காவும் ஆட்டோவில் இருந்து இறங்கி கூட்டத்தில் கலந்துகொண்டார். வழக்கமான தயக்கம் சிறிதும் இன்றி, கையுயர்த்தி முழக்கமிட்டார். அத்தகைய கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டார். பலரும் அவரைத் தேடிவந்து துர்கா! துர்கா! என்று அவரிடம் பேசினர்.

புது அன்பு. சிலர் வீடு தேடிவந்து பிரச்சினைகளை அவரிடம் பேசினர். மனம் லேசாகித் திரும்பினர். ஆட்டோ துர்கா என்றால் இப்போது பலருக்கும் தெரிந்தது. வீடு ஒரு பிடிமானம் என்றால் சமூகம் மற்றொரு பிடிமானம். அது இப்போது துர்காவுக்கும் தெரிந்திருக்கிறது. வீடு போனால் என்ன?

சமூகம் இருக்கிறது துர்கா.

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; smadasamy1947@gmail.com

பிடிமானம் வேண்டும் | இது நம் வகுப்பறை சமூகம் 10
பிகு பண்ணுவதும்... சண்டை போடுவதும்! | இது நம் வகுப்பறை சமூகம் 09

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in