கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘மாதிரி’ அணுமின் நிலையத்தை ஆர்வத்தோடு பார்வையிடும் பள்ளி மாணவ, மாணவிகள்.
கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘மாதிரி’ அணுமின் நிலையத்தை ஆர்வத்தோடு பார்வையிடும் பள்ளி மாணவ, மாணவிகள்.

புவி வெப்பமயமாதலை தடுக்க அணுசக்தி உதவும்: கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி தகவல்

Published on

கோவை: புவி வெப்பமயமாதலை தடுக்க அணுசக்தி உதவும் என்று கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

இந்திய அணுசக்தி கழகம் மற்றும் மண்டல அறிவியல் மையம் சார்பில், ‘ஐகானிக்’ வார விழா மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மைய வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், விநாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை மாவட்டத்திலுள்ள 60 பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு கூடங்குளம் அணுமின்நிலைய திட்ட, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கூடத்தின் அறிவியல் அதிகாரி பி.சுந்தர்ராஜன் பரிசுகளை வழங்கினார். அவர் பேசியதாவது:

அணுசக்தி மாசற்றது, மிகவும் பாதுகாப்பானது. அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கு அணுசக்தி உதவும். மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கூடங்குளத்தில் 2013-ம் ஆண்டு அணு மின்நிலையத்தின் முதல் யூனிட் அமைக்கப்பட்டது. அது 2014 முதல் செயல்பட தொடங்கியது. இதுவரை 60,536 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 1,000மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இந்த அணுமின் நிலையத்தில், 60% மின்சாரம் தமிழகத்துக்கும் மீதமுள்ளவை அண்டை மாநிலங்களுக்கும் வழங்கப் படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

மண்டல அறிவியல் மைய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி அணுமின் நிலையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in