

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 3-ம் பருவ பாடப் புத்தகங்கள் நேற்று விநியோகிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது.
முதல் பருவம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும், இரண்டாம் பருவம் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம்வரையிலும், மூன்றாம் பருவம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலும் பின் பற்றப்பட்டு வருகிறது. இதன்படி காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் இரண்டாம் பருவத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த டிசம்பர் மாதம் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு, விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, "தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தில் இருந்து மூன்றாம் பருவத்துக்கான பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டு, அரையாண்டு தேர்வு விடுமுறையில் கோவைக்கு கொண்டுவரப்பட்டு, ஓர் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
முன்னதாக பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்ட ஜன. 3-ம் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பாக அரசு, அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பாடநூல்கள் ஒப்படைக்கப்பட்டன.
இதன்படி கோவை, பொள்ளாச்சி, பேரூர், எஸ்எஸ் குளம்கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளிக்கு வராத மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரும் போது, புத்தகங்கள் வழங்குமாறு தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தி உள்ளோம்” என்றனர்.