Published : 01 Aug 2022 06:33 AM
Last Updated : 01 Aug 2022 06:33 AM

என்ன ஒரு அழகு! - கோடி கொடுத்தாலும் கிடைக்குமா இந்த புன்னகை?

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 6 முதல் 8 மற்றும் 9-10 மற்றும் 11-12 ஆகிய 3 பிரிவுகளில் சதுரங்கப் போட்டிகள் பள்ளி அளவிலும் வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் நடத்தப்பட்டன.

மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட்டையொட்டி மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஒரு சிறு அன்பளிப்பாக, கடந்த 27-ம் தேதி சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை விமான நிலைய நுழைவு வாயிலை மிதித்தவுடன் அவ்வளவு ஆனந்தப்பட்டனர் மாணவர்கள்.

இன்னும் சற்று நேரத்தில் விமானத்திற் குள்ளே சென்று விடுவோம் என்ற நம்பிக்கை 100 சதவீதம் நிறைந்திருந்த அந்தச் சூழலில், கடைசி நிமிடத்தில் ஒரு மாணவியின் ஆதார் அட்டை இல்லை என தகவல் வர அனைவரும் பதற்றமாயினர். தன்னுடைய வீட்டிலேயே ஆதார் அட்டையை வைத்துவிட்டு வந்ததாக அந்த மாணவி கூறியதும் அனைவருக்குமே பதற்றம்.

அந்த மாணவியோ தன்னை மட்டும் விட்டுவிட்டு அனைவரும் விமானத்தில் ஏறிவிட்டனரே என்ற உச்சபட்ச கவலையில் இருந்தார். போனில் அனுப்பினால் போதுமே என்ற கேள்விக்கு கையில் இருந்த பட்டன் ஃபோனை காட்டியதும் பதில் தேவையில்லாமல் ஆனது.

அந்த சிறுமியின் முகத்தில் வாட்டத்தைக் கண்டவுடன் அருகில் நின்றிருந்த ஐஏஎஸ் அதிகாரி, “கவலைப்படாதே அம்மா, அப்பா நம்பர் சொல்லு. போன் பண்ணி அனுப்ப சொல்லலாம். எப்படியாவது உன்னை விமானத்தில் ஏறச் செய்திடலாம்” என்று ஆறுதல் கூறினார். அந்த அதிகாரியின் பதவியைப் பற்றி ஏதும் அறியாத அந்தச் சிறுமி, “வீட்டுல உள்ள போனை தான் நான் எடுத்துட்டு வந்துட்டேன்.

பக்கத்து வீட்டு நம்பர் தரவா அங்கிள்” என்று சொன்னதும் உடன் இருந்த மற்ற கல்வித்துறை அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் நிலைமையை விளக்கி அந்த ஒரு குழந்தைக்கு மட்டும் விலக்கு அளிக்கச் சொல்ல, “முடியவே முடியாது” என்று அவர்களும் அடம்பிடித்தனர்.

கடைசியாக எப்படியோ அச்சிறுமியின் ஆதார் அட்டை புகைப்படத்தைக் காட்டி அவளைவிமானத்தில் ஏறச் சொல்ல, கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத புன்னகை, எப்படித்தான் ஒரு நொடியில் அவள் முகத்தில் மலர்ந்ததோ!

அப்துல் கலாம் நினைவு தினத்தில்அரசுப் பள்ளிக் குழந்தை களை விமானத்தில் ஏற்றிஅழகு பார்த்த அனைவருக்கும் நன்றி.

எளிய குடும்பத்தில் இருந்து வந்தாலும், அரசுப் பள்ளியில் படித் தாலும் திறமை இருந்தால் விமானத்தில் ஏறலாம். வானில் பறக்கலாம். வேறு மாநிலம் செல்லலாம். பறக்கும் விமானத்தில் சதுரங்கம் ஆடலாம். எல்லாமே சாத்தியம் தான்.

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக இருக்கும் அரசுப்பள்ளி மாணவர்களே, உங்கள் மனதில்இந்த வாசகத்தை மட்டும் பதிந்து கொள்ளுங்கள். புதுமையான பல திட்டங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்காகவே வகுக்கப்படுகின்றன. திறமைகளோடு காத்திருங்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். வாய்ப்புகளோடு வந்து கொண்டிருக்கிறோம்.

த. மீனாட்சி,

பட்டதாரி ஆசிரியை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x