

நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து அரசு விரைவாக முடிவெடுக்க வேண்டும் எனவும் குறுகிய காலமே எஞ்சியிருக்கிறது என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்பட உள்ளது. தேர்வுகளை நடத்த மத்திய அரசு தீவிரமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
நீட் தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜேஇஇ நுழைவுத் தேர்வை (மெயின்) எழுத 6,58,273 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையிலும், பல்வேறு மாநிலங்களில் மழை, வெள்ளம் குறையாத நிலையில் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதைத் தள்ளிப்போடுங்கள் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றன.
மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் மாநில, மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன், நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து அரசு விரைவாக முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ''கரோனா தொற்றுக் காலத்தில் லட்சக்கணக்கான மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் தங்களின் உடல் நலம் குறித்த கவலையில் உள்ளனர்.
குறுகிய காலமே எஞ்சியிருப்பதால் நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். தேர்வுகளைத் தள்ளி வைப்பதில் அரசு தயக்கம் காட்டக்கூடாது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசு சரியான முடிவை எடுக்கவேண்டியது அவசியம்'' என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த 6 அமைச்சர்கள், நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை மறுசீராய்வு செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.