

'இந்து தமிழ்' அன்பாசிரியர்கள் திலீப், சரஸ்வதி ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 47 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து விழுப்புரம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப் மற்றும் சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரின் தன்னிகரற்ற ஆசிரியப் பணி மற்றும் தனித்துவக் கற்பித்தல் பாணி குறித்த கட்டுரைகள் 'இந்து தமிழ்' இணையதளத்தில் 'அன்பாசிரியர்' என்ற தொடரில் விரிவாக வெளியாகின. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 'இந்து தமிழ் திசை'யின் அன்பாசிரியர் விழாவில் விருது வழங்கப்பட்டது.
ஆசிரியர் திலீப்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் திலீப். கல்வி, வழக்கமான முறையில் கற்பிக்கப்படாமல் வகுப்பறையைத் தாண்டியும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பவர். தகவல் மற்றும் கணினித் தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக ஏற்கெனவே ஐ.சி.டி. தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்.
தன் மாணவர்களுக்குப் புதுமையான முறையில் ஆங்கிலத்தை முழுமையாகக் கற்றுக்கொடுப்பவர். ஒரு எழுத்து, அதில் தொடங்கும் ஒரு பழத்தின் பெயர், அதில் ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம், ஒரு பாரா என்று மாணவர்களை எழுதப் பழக்குகிறார். இதன் மூலம் மாணவர்களின் உச்சரிப்பு, எழுத்துத் திறமை, மொழியறிவு, சிந்தனை ஆகியவற்றை மேம்படுத்துகிறார்.
ஆங்கிலம் கற்பதில் தொழில்நுட்பத்தைப் புகுத்தி, கற்றலை இனிமையாக்கி வருகிறார். பள்ளிக் கல்விக்கென ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களை நிர்வகித்து வருகிறார்.
ஆசிரியர் திலீப் குறித்து மேலும் அறிய: அன்பாசிரியர் 6 - திலீப்: அரசுப் பள்ளியில் ஓர் இணைய வித்தகர்!
***
ஆசிரியர் சரஸ்வதி
சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை. 2014-ல் அவர் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே சென்னை வெள்ளம் வந்தது. அதில் பள்ளியில் இருந்த பொருட்களும் நாசமாகின. தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மெல்ல மெல்ல அவற்றை மீட்டெடுத்தார்.
சிசிடிவி கேமராக்கள், பெரிய நுழைவு வாயில், தனித்தனிக் கட்டிடங்கள், பசுமை போர்த்திய வகுப்பறைகள், சுமார் 4 ஆயிரம் மாணவிகள், 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், நவீன ஆய்வகங்கள், உயர்தர ஏசி அரங்கம் என ஐந்தரை ஏக்கர் நிலத்தில் ஒரு பல்கலைக்கழகம் போலக் காட்சியளிக்கிறது அந்தப் பள்ளி.
மாணவிகள் மட்டுமே படிக்கும் பள்ளியில் இயல்பாகவே எழும் அத்தனை இடர்ப்பாடுகளையும் சுமுகமாகக் கையாண்டு மாணவிகளின் தோழியாகவும் இருக்கிறார் ஆசிரியர் சரஸ்வதி.
ஆசிரியர் சரஸ்வதி குறித்து மேலும் தெரிந்துகொள்ள: அன்பாசிரியர் 50- சரஸ்வதி: விடலைப் பருவ மாணவிகளின் செல்ல டீச்சர்!