

இயற்கை சூழலில் மாணவர்கள் கல்வி கற்க உதவும் வகையில், ஊரடங்கு நேரத்தில் ஜோதிநகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் காய்கறி, மூலிகை தோட்டம் அமைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நாச்சியகவுண்டனூர், ஜோதிநகர்,காமராஜ் நகர், கெங்கபிராம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
நிகழாண்டில் கரோனாவால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை இன்று(17-ம் தேதி) நடைபெறுகிறது.
இந்நிலையில் பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையை மாற்றி அமைக்க இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைக்க முடிவு செய்தனர். இதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமையில் ஆசிரியர்கள் லட்சுமி, ராஜ்குமார், சிவக்குமார் ஆகியோர் கடந்தஒரு வாரமாக பள்ளிக்குச் சென்று தோட்டம் அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் கூறும்போது, ‘‘பள்ளியில் மாணவர்கள் இயற்கை சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பள்ளியில் புதிதாக பல்வகை மலர்த் தோட்டம், மூலிகைத் தோட்டம், காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் செய்துள்ளனர்.
இயற்கை உரம் தயாரித்து செடிகள் வளர்க்க தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால், பள்ளி முழுவதும் ஊராட்சி பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் புதிதாக 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என்கிற நம்பிக்கை உள்ளது,’’ என்றார்.