புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் செப். 3-ம் வாரத்தில் நுழைவுத் தேர்வு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 3-ம் வாரத்தில் நுழைவுத் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள், பிஎச்டி, முதுநிலைப் பட்டயப்படிப்பு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் இங்கு படித்து வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பல்கலைக்கழகத்தில் வரும் 2020-21 ஆம் கல்வியாண்டில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு பல்வேறு மையங்களில் செப்டம்பர் 3-ம் வாரத்தில் நடக்க உள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''புதுவை பல்கலைக்கழகம், 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான பல்வேறு பட்ட மேற்படிப்பு / ஆராய்ச்சித் துறைக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழத்தில் உள்ள படிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு, தேர்வு முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழக இணைய தளத்தில் பார்க்கலாம்.
அதற்கான இணைய முகவரி: www.pondiuni.edu.in
