

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு, தினந்தோறும் இணையப் பயிற்சிகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
ஆரம்பத்தில் நாகப்பட்டினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து இயங்கி வந்த போட்டித் தேர்வுப் பயிற்சி மையம், தற்போது கரோனா ஊரடங்கில் இணையப் பயிற்சியை அளித்து வருகிறது.
இதுகுறித்துப் பேசும் அதன் ஒருங்கிணைப்பாளரும் ஆழியூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியருமான சிவக்குமார், 3 ஆண்டுகளாக ஆர்வமுள்ள மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சியை வழங்கி வந்தோம். குரூப்-2 நேர்முகத் தேர்வு, காவலர்கள் போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தொடங்கி குரூப்-4 வரை பயிற்சி அளித்து வந்தோம்.
இதற்கான பாடங்களை ஒவ்வொரு பாடத்திலும் நிபுணத்துவம் பெற்ற 15 கருத்தாளர்கள் எடுத்து வந்தனர். தன்னார்வத்துடன் பள்ளி ஆசிரியர்களே முன்வந்து பயிற்சி அளித்தனர். இந்த வகுப்புகளில் சராசரியாக 50 மாணவர்கள் பயிற்சி பெற்று வந்த நிலையில் ஆண்டுதோறும் சராசரியாக 10 மாணவர்கள் அரசுப் பணிக்குத் தேர்வு பெற்றனர்.
இந்நிலையில் ஊரடங்கால் இப்பணி தடைப்பட்டது. இதைத் தொடர்ந்து இணையத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சியை மீட்டுருவாக்கம் செய்ய முடிவெடுத்தோம்.
இணையத்தில் பயிற்சி என்பதால் தேர்வர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருக்கிறது. நாகப்பட்டினம், சீர்காழி தேர்வர்கள் தாண்டி, கேரளா, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு மாவட்ட மாணவர்கள் இப்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.
தினந்தோறும் மாலை 4 - 6 மணி வரை வகுப்புகள் எடுக்கிறோம். பாடத்தில் உள்ள சந்தேகங்களைத் தீர்க்கக் கலந்துரையாடலும் நடைபெறுகிறது. சிஸ்கோ வெபெக்ஸ் செயலி மூலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்துக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கூகுள் ஷீட் மூலமாகத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
கடந்த ஆண்டு எங்களிடம் படித்த மாணவர் இப்போது அரசுப் பணிக்குத் தேர்வான நிலையில் கரோனா விடுமுறையால் மாணவர்களுக்கு இணையத்தில் பாடம் எடுக்கிறார். பயிற்சி மாணவர்கள் மற்றும் கருத்தாளர்களுக்காகத் தனியாக வாட்ஸ் அப் குழுவையும் உருவாகியுள்ளோம். அதில் தினசரி வகுப்புகள், இணைய இடர்ப்பாடுகள் உள்ளிட்ட அவசியத் தகவல்களை மட்டுமே பகிர்கிறோம்’’ என்கிறார் முனைவர் சிவக்குமார்.
தொடர்ந்து பேசுபவர், ''இணைய வகுப்பில் கருத்தாளர்களை அமர்த்துவது, போட்டித் தேர்வர்களுக்கு ஆலோசனை வழங்குவது, தேர்வு வினாத்தாள்களை உருவாக்குவது, அன்றாடம் பின்னூட்டங்களைப் பதிவிடுவது, அன்றைய வகுப்புப் பற்றி விளம்பரம் செய்து தேர்வர்களை ஈர்ப்பது எனத் தொடர்ச்சியான செயல்பாடுகளால் ஊரடங்கு நேரம் ஓய்வில்லாமல் செல்கிறது'' என்கிறார் ஆசிரியர் சிவக்குமார்.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in