

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கூடங்களைத் திறக்கும் காலம் தள்ளிப்போனாலும் அதை ஈடு செய்யத் தமிழக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் இணையம் வழியாகப் பாடங்கள் கற்க https://e-learn.tnschools.gov.in/welcome என்ற புதிய இணையதளத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது.
இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் 'click here for content' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால் வகுப்பு, தமிழ் அல்லது ஆங்கில வழி, பாடம் ஆகியவற்றில் தத்தமது தேர்வின் மூலம் கற்றலைத் தொடங்கலாம். ஒவ்வொரு பாடத்துக்கான அத்தியாயங்கள் பாடப்புத்தகத்தில் உள்ள வரிசைப்படி இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை க்ளிக் செய்து காணொலிகளைக் காணலாம்.
பாடக் காணொலிகள் பெரும்பாலும் 6 நிமிடங்களுக்கு மிகாமல் இருப்பதால் மாணவர்கள் சோர்வின்றி பாடத்தின் சுருக்கத்தைக் கற்றுக்கொள்ள இந்த இணையதளம் உதவும். மொழிப் பாடங்கள், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களுக்கும் உரிய காணொலிகள் ஓவியம், கதை, கிராஃபிக்ஸ் போன்ற சுவாரசியமான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன. சில பாடப் பகுதிகளுக்கான விளக்கத்தை சிறுவர்களே தரும்படியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் காணொலிகள் நிச்சயம் மாணவர்களை ஈர்க்கும். இருப்பினும் சில பாடங்களுக்கான காணொலிகள் பதிவேற்றப்படாமல் இருக்கிறது.
தொடர்ந்து இணையதளம் மேம்படுத்தப்படும், அனைத்து பாடங்களின் அனைத்து அத்தியாயங்களும் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிளஸ் 1 வரையிலான பாடங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் பிளஸ் 2 வகுப்புக்கு உரிய பாடங்களும் சேர்க்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.