Published : 08 Jun 2020 06:31 am

Updated : 08 Jun 2020 06:31 am

 

Published : 08 Jun 2020 06:31 AM
Last Updated : 08 Jun 2020 06:31 AM

தேடலைத் தொடர்பவரே விஞ்ஞானியாக துளிர்க்க முடியும்- முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் உறுதி

how-to-become-a-scientist
த.வி.வெங்கடேஸ்வரன்

சென்னை

அறிவியல் பாட நூல்களைத் தாண்டி அறிவியல் புத்தகங்கள், செய்தித் தாள்களில் வெளிவரும் அறிவியல் கட்டுரைகள் என்று தங்கள் தேடலை தொடர்பவரே விஞ்ஞானியாக துளிர்க்க முடியும்என்று விஞ்ஞானி, முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத்துடன் (என்டிஆர்எஃப்) இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘விஞ்ஞானி ஆவது எப்படி?’ என்ற 5 நாள் இணைய வழி பயிலரங்கத்தின் 4-வது அமர்வு நேற்று நடைபெற்றது. இதில் டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் பிரசார் நிறுவனத்தின் (விக்யான் பிரசார்) முதுநிலை விஞ்ஞானியான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பேசியதாவது:

விஞ்ஞானி ஆவது எப்படி என்பதை பொதுவாகச் சொல்வதற்கு பதிலாக உலகப் புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி ஆரியபட்டரின் வாழ்க்கை குறிப்புகள் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். 1,500ஆண்டுகளுக்கு முன்னால், பூமிதட்டையாக இருப்பதாக மட்சயபுராணத்தில் விவரிக்கப்பட்டிருந்தது. அதுவே உண்மை என்று அக்காலத்தில் நம்பப்பட்டது. ஆனால் ஆரியப்பட்டர், இதற்கு என்ன ஆதாரம்?, பூமியின் வடிவத்தை யார் பார்த்தது என்பன உள்ளிட்ட கேள்விகளைஎழுப்பினார். தொடர் ஆய்வின் மூலம் பூமியின் வடிவம் கோளம் என நிரூபித்தார். இதுவே அறிவியல்மனப்பான்மையின் அடிநாதம்.

விஞ்ஞானியாக முதலில் அறிவியல் மனப்பான்மை அவசியம். இந்த புரிதலோடு இந்தியாவில் நடந்துவரும் சில ஆராய்ச்சிகள் குறித்து தெரிந்துகொள்வோம். உலகத்தை நடுங்கச் செய்து கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றுக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஜம்முவில் உள்ள இந்தியன்இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டக்ரேட்டிவ் மெடிசின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அப்பகுதியில் வாழும்பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் ஒரு வகை மூலிகையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கான மூலக்கூறு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இன்னும் சில தினங்களில் மனிதர்களுக்குச் சோதிக்கப்பட்டு இதன் பயன் கண்டுபிடிக்கப்படும்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த ஆராய்ச்சியில் மருத்துவர்கள் மட்டுமல்ல தாவரவியலாளர்கள், வேதியியலாளர்கள் உள்ளிட்ட பல்துறை ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல நம்முடைய பாரம்பரிய பயிர் வகைகளில் பலவற்றை இழந்துவிட்டோம் என்று அடிக்கடி சொல்ல கேட்டிருப்போம். ஆனால், டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ப்ளான்ட் ஜீனோம் ரிசர்ச் நிறுவனத்தில் நாட்டின் பழம்பெரும் நெல் வகைகள், வாழை வகைகள்உள்ளிட்ட அத்தனை விதைகளும்செடிகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு மேலும் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கீழடி அகழாய்வைதொல்லியல் துறை மட்டுமேசெய்து வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், எங்கே தோண்டினால் பானை, சுவர்கிடைக்கும் என்ற தடத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோ மேக்னடிசம். இப்படி இந்தியாவில் ஏராளமான ஆய்வு நிறுவனங்கள் அதிமுக்கியத்துவமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சிலின் கீழ் 32 ஆராய்ச்சி மையங்கள் நாட்டில் உள்ளன. இதேபோல இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், அறிவியல், தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, இந்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட ஆலமரங்களின் கீழ் நாடு முழுவதும் பல கிளை ஆராய்ச்சி நிறுவனங்கள் செயலாற்றிக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் பணிவாய்ப்பு பெற தொழில்நுட்ப உதவியாளர் பிரிவை சேர்ந்த பணிகளுக்கு பொறியியல், தொழில்நுட்பக் கல்வி தேவை. விஞ்ஞானி ஆக கனவு கண்டால் அறிவியல் துறையில் முனைவர் பட்டம், முதுநிலை முனைவர் பட்டம் பெற வேண்டும். அதற்குத் தொடக்கப் புள்ளியாகப் பள்ளி மாணவர்கள் அறிவியல் பாட நூல்கள் மட்டுமல்லாது சோதனை மனப்பான்மையுடன் பலவிதமான அறிவியல் புத்தகங்களையும் செய்தித் தாளில் வெளிவரும் அறிவியல்கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும். இவ்வாறு தங்கள் தேடலைவிரிவுபடுத்தினால்தான் விஞ்ஞானியாகத் துளிர்க்க முடியும்.

இவ்வாறு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பேசினார்.

‘விஞ்ஞானி ஆவது எப்படி?’ பயிலரங்கத்தின் கடைசி அமர்வாகஇன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை முனைவர் பி.வெங்கட்ராமன் உரை நிகழ்த்துகிறார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்அறிவியல் புத்தகங்கள்அறிவியல் கட்டுரைகள்விஞ்ஞானி ஆவது எப்படி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author