உளவியல் ஆபத்துக்கு ஆளாகும் குழந்தைகள்: வீட்டிலேயே சரி செய்யலாம்; நிபுணர்கள் காட்டும் வழிமுறைகள்
பொதுவாக குழந்தைகளே பேரிடரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் மற்றெந்த பேரிடரைக் காட்டிலும் கரோனா நம்முடன் தொடர்ந்து பயணிக்கிறது. அதனால் கரோனா பேரிடரால், ஊரடங்கால் மனதளவில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பள்ளிக்குச் செல்லும் முன்பே உளவியல் சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதற்கிடையே கரோனா பேரிடர் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உளவியல் முதலுதவி வழங்க, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அண்மையில் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது. மைண்ட் ஜோன் என்னும் மனநல மருத்துவமனை, ஆசிரியர்களுக்கு உளவியல் முதலுதவிப் பயிற்சி அளித்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிறுவனரும் மனநல மருத்துவ உளவியல் நிபுணருமான சுனில்குமார் விஜயன் கூறும்போது, ''நாம் சந்திக்கும் நபர்களில் நான்கில் ஒருவர் உளவியல் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் 130 கோடி இந்திய மக்களுக்கு 6 ஆயிரம் மனநல நிபுணர்கள் மட்டுமே உள்ளனர்.
வருங்காலத்தில் உலகளாவிய அளவில் பேரிடர்கள் வரும் என்பதைக் கணித்த உலக சுகாதார நிறுவனம் அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும் என்று 2016-ல் கூறியது. இதனால் மக்களின் மனநலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் கூடுதலாக உள்ளதாகவும் எச்சரித்தது. இதற்காக ’உளவியல் முதலுதவி’ என்னும் முறைமையை அறிமுகப்படுத்தியது.
உளவியல் சிக்கல் உள்ளவர்களுக்கு ஆரம்பக்கட்ட முதலுதவி அளித்தாலே 70 சதவீதப் பாதிப்புகள் குணமாகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். கரோனா பேரிடர் உலகளாவிய அளவில், உளவியல் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் மனநலத் துறை அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஐ.நா. சபை கடந்த மே 16-ம் தேதி எச்சரிக்கை விடுத்தது.
எனினும் இதை முன்கூட்டியே கணித்து, மார்ச் 26 முதலே மனநலம் சார்ந்த பயிற்சிகளை ஜூம் மூலமாக இலவசமாகப் பொதுமக்களுக்கு வழங்கி வந்தோம். தொடர்ச்சியாக 53 நாட்கள் மைண்ட்ஜோன் நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்பட்டது. தேவைப்பட்டால் யாருக்கு வேண்டுமானாலும் மீண்டும் இலவசமாக உளவியல் பயிற்சி அளிக்கத் தயாராக உள்ளோம்'' என்றார் சுனில்குமார்.
தமிழகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கிய நிகழ்வை ஒருங்கிணைத்த குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும் அரசுப்பள்ளி ஆசிரியருமான சுடரொளியிடம் இதுகுறித்துப் பேசினேன்.
''குழந்தைகளுக்கு, குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள் அதிகம் வெளியில் தெரிவதில்லை. அதனாலேயே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் நம்மால் முடிந்த மாற்றத்தை மாணவர்களிடம் முன்னெடுக்க முடிவெடுத்தோம்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களை மண்டல வாரியாகப் பிரித்து, உளவியல் முதலுதவியை ஆன்லைன் வழியாக வழங்கினோம். தினந்தோறும் 4 மணி நேரம் 10 நாட்களுக்குத் தொடர்ந்து இந்தப் பயிற்சி நடந்தது. சுமார் 800 ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டனர்'' என்றார் சுடரொளி.
பயிற்சி குறித்து விளக்கமாகப் பேசிய அவர், ''இது உளவியல் சிகிச்சை அல்ல; உளவியல் முதலுதவி. யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேவையுள்ளவர்களுக்கு அவர்களை வருத்தாமல் ஆலோசனை வழங்குவதே உளவியல் முதலுதவி ஆகும்.
பாதிக்கப்பட்டவர்களின் உரிமை, மாண்பு, பாதுகாப்பு ஆகிய மூன்றுக்கும் அணுவளவும் குறை ஏற்பட்டு விடாமல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உதவி செய்யப்போகும் நம்மை, வேண்டாம் என அவர்கள் ஒதுக்கவும் வாய்ப்புண்டு. அப்போது இப்படிச் செய்கிறார்களே என்று எண்ணாமல் அதற்கான காரணத்தை யோசிக்க வேண்டும்.
அடிப்படை சாராம்சம்
* உளவியல் தேவையோடு இருப்பவர்களை அடையாளம் காண்பது,
* அவர்களுடன் உரையாடலை நிகழ்த்துவது,
* சிகிச்சை தேவைப்படுபவர்களை மருத்துவர்களுடன் இணைப்பது
இதில் அடிப்படையில் 4 படிநிலைகள் உள்ளன.
* தேவையுள்ளவர்களின் விவரங்களைத் தெரிந்துகொண்டு, முன் தயாரிப்புடன் அவர்களை அணுகுவது (Preparation)
* உளவியல் சிக்கல்கள் இருப்போருக்கு அது உடல், மனம், நடத்தை ஆகிய மூன்றிலுமே வெளிப்படும். அச்ச நிலையில் இருக்கும் குழந்தைக்கு வேர்ப்பது, பதற்றம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தலை வலிப்பதாகக் கூறுவது ஆகியவற்றை உற்றுநோக்கிக் கண்டறிவது (Look)
* ஒரு குழந்தைக்கு உளவியல் சிக்கல் என்று தெரிந்தவுடனே அறிவுரை கூறவோ, சமாதானப் படுத்தவோ ஆரம்பிப்பதுதான் வழக்கம். ஆனால் அவர்களின் பிரச்சினையை முதலில் முழுமையாகக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். (Listen)
* குழந்தைகள் பாதுகாப்பற்றவர்களாக உணரும் கணத்தில், பெற்றோர் உடனோ, அதீத பாதிப்பில் இருப்பவர்களை உளவியல் மருத்துவரிடமோ இணைக்க வேண்டும். (Link)'' என்றார்.
உளவியல் ஆற்றுப்படுத்தலில் என்ன செய்யலாம், செய்யக் கூடாது? என்பதைப் பிரதானமாகக் கற்றுக்கொண்டதாகக் கூறும் ஆசிரியர் சுடரொளி, அவற்றை உதாரணங்களுடன் விளக்கினார்.
* குழந்தைகளின் பிரச்சினைகளை நாமாகக் கேட்காமல் அவர்களையே சொல்ல வைக்க வேண்டும். ''என்ன ஆச்சு உனக்கு?, சொல்லு!'' என்று கேட்காமல் ''என்கிட்ட பேசறியா?, பிரச்சினையைச் சொல்லத் தோணுச்சுன்னா சொல்லலாம்'' என்று பேச வேண்டும். பிரச்சினைகளை இவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவு செய்யும் சுதந்திரத்தை அளிக்க வேண்டும்.
* நம்மைப் பற்றிய தவறான தகவலை அளிக்கக் கூடாது.
* உளவியல் முதலுதவி அளிக்கிறோம் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லக் கூடாது என்ற கற்பிதம் தவறானது. அவர்களிடம் உண்மையைச் சொல்லிப் பேசுவதே சரியானது.
* முன்பின் அறிமுகமில்லாதவர்கள் நம்மை நம்பும் அளவுக்கு வார்த்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டும். நம்மைப் பாதுகாப்பான ஆளாக அவர்கள் உணரும்போது இது சாத்தியமாகும்.
* நம்பிக்கையை அளித்தால் மட்டுமே நம்மிடம் அவர்கள் பேசுவார்கள். ஆனால், ''நான்தான் உங்களின் ஆபத்பாந்தவன்; என்னால் உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும்'' என்ற ரீதியில் தவறான நம்பிக்கையை விதைக்கக்கூடாது.
* குழந்தைகளுடன் உரையாட வேண்டும், அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும்.. வாடா, போடா, செல்லம் என்ற வார்த்தைகளை அறவே பயன்படுத்தக்கூடாது. உணர்வுபூர்வ இணைப்பு கூடாது.
* உனக்கு பதற்றம், உனக்கு சோர்வு என்று எந்தக் குழந்தைக்கும் முத்திரை குத்திவிடக்கூடாது. ஒருவர் நம்மிடம் மனம் விட்டுப் பேச நண்பராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நம்மை நம்பினால் போதும்.
* அவர்களின் மாண்பைக் குலைத்துவிடக் கூடாது. வறுமையில் இருக்கிறாய், சோகமாய்ப் பார்க்கிறாய், கஷ்டப்படுகிறாய் என்று எந்த முத்திரையும் குத்தக் கூடாது. அதேபோல அடுத்தவர்களுடன் ஒப்பிடக் கூடாது.
* அதே நேரத்தில் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது நம் வேலையல்ல. முழுவதுமே கொட்டித் தீர்த்துவிட்டாலே பிரச்சினை சரியாக வாய்ப்புள்ளது.
* அதேபோல நாம் மருத்துவராகவே மாறி ஆலோசனை வழங்கக்கூடாது. முதலுதவி மட்டுமே அளிக்கவேண்டும். தேவைப்பட்டால் உளவியல் மருத்துவர்களைப் பரிந்துரைத்து சிகிச்சையை ஒருங்கிணைக்கலாம்'' என்றார் ஆசிரியர் சுடரொளி.
மாறிவரும் கலாச்சார சூழலில், பொதுமக்களுக்கு குறிப்பாகக் குழந்தைகளுக்கு உளவியல் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதை அரசும் மக்களும் கருத்தில்கொண்டு உளவியல் சிகிச்சைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
