

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளராக சிபிஎஸ்இ தலைவர் அனிதா கார்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வி வாரியத்தின் அதிகார மையமான இவரால், வாரியத்தின் தலைவர் மற்றும் பிற துறைகளின் தலைவர்களை நியமிக்க முடியும்.
அனிதா கார்வால் குஜராத் கேடரின் 1988-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றினார். கடந்த 2017-ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவராக நியமிக்கப்பட்டார்.
சிபிஎஸ்இ வாரியத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த அவர், அதன்கீழ் இயங்கும் எட்டுத் துறைகளுக்கும் பொறுப்பாளராக இருந்தார். தனது பணிக்காலத்தில் மூன்று முறை பொதுத் தேர்வுகளை நடத்தினார். மாணவர்களின் கல்வி மற்றும் முழுமையான வளர்ச்சிக்குக் காரணகர்த்தாவாக விளங்கினார். குறிப்பாக 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடல்நலம் மற்றும் உடற்கல்வித் திட்டத்தைக் கட்டாயமாக்கி, பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றார்.
இந்நிலையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளராக அனிதா கார்வால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.