

பள்ளிக் கட்டிடங்களில் பிரத்யேக கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்பதாலேயே மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் சேர்க்கை வழங்குவது இல்லை என்று மாற்றுத் திறனாளிகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் மாற்றுத் திறன் மாணவர்களுக்காக 20 அரசு சிறப்பு பள்ளிகள், 50-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடத்த 25 சதவீத இடங்களை ஒதுக்கவேண்டும். இதில், மாற்றுத் திறனாளிகள், துப்புரவு தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், மாற்றுத் திறன் மாணவர்களை சேர்க்க பல தனியார்பள்ளிகள் மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால், படிப்பதற்கான தகுதிகள் இருந்தும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இடம் கிடைப்பது இல்லை.
இதுதொடர்பாக அமர் சேவாசங்கத்தின் செயலாளர் சங்கரராமன் கூறியதாவது:
அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான கழிப்பறை, சாய்வுதளம், கைப்பிடி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது கட்டாயம் என்று 2016-ல் நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் கூறுகிறது.
இதையேற்று, அரசு பள்ளிகளில் பெரும்பாலும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தனியார் பள்ளிகளில் இந்த கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மாற்றுத் திறன் மாணவர்களை சேர்த்தால், இத்தகைய வசதிகளை கட்டாயம்ஏற்படுத்த வேண்டும் என்பதாலேயே, அவர்களுக்கு சேர்க்கைவழங்காமல் தவிர்த்துவிடுகின் றனர்.
நடவடிக்கை எடுப்பதில்லை
தென்காசி, திருநெல்வேலி போன்ற ஒருசில மாவட்டங்களில்கூட தனியார் பள்ளிகளில் ஓரளவுக்கு மாற்றுத் திறன் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில்தான் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு வாய்ப்பு பெரும்பாலும் மறுக்கப்படுகிறது.
பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கிவிடும். எனவே, பள்ளிக்கல்வி, மாற்றுத் திறனாளிகள் நலம் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து, தனியார் பள்ளிகளில் மாற்றுத் திறன் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெருநகரங்களில்...
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.சிம்மசந்திரனிடம் கேட்டபோது, ‘‘கடந்த ஆண்டு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய 1.25 லட்சம் இடங்களில் சுமார் 66 ஆயிரம் இடங்களைத்தான் தனியார் பள்ளிகள் நிரப்பின. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில்கூட மாற்றுத் திறன் மாணவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்விஅதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் கூறியும், விதிகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை. மாற்றுத்திறன் மாணவர்களை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலமாகவே பள்ளியில் சேர்க்கும் நடைமுறையை அமல்படுத்தினால்தான் இப்பிரச்சினை தீரும்’’ என்றார்.