'இந்து தமிழ்' செய்தி எதிரொலி: நாரணாபுரம் அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு மையம்

'இந்து தமிழ்' செய்தி எதிரொலி: நாரணாபுரம் அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு மையம்
Updated on
1 min read

'இந்து தமிழ் திசை'யில் வெளியான செய்தியை அடுத்து, நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்காக தேர்வு மையம் குறித்து இந்து தமிழ் இணையதளம் வாயிலாக அரசிடம் கணிதப் பட்டதாரி ஆசிரியர் கருணைதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது, ''எங்கள் பள்ளியில், மாணவர்கள் அமர போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் பத்தாம் வகுப்புக்கான தேர்வு மையம் வழங்கப்படவில்லை. இதனால் ஆண்டுதோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர், இரண்டு பேருந்துகள் மாறிச் சென்று, பொதுத் தேர்வுகளை எழுதி வந்தனர். இதற்காக வருடத்துக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை பேருந்துக் கட்டணம் செலுத்தி வந்தனர். தற்போது தேர்வு எழுதத் தேவையான இருக்கை வசதிகள் பெறப்பட்டுவிட்டன.

இதனால் தேர்வு மையத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளோம். தேர்வு மையம் அமைந்தால் மாணவர்களின் பண விரயம் தவிர்க்கப்படுவதோடு, தேர்வுக்குப் படிக்கக் கூடுதல் நேரமும் கிடைக்கும்'' என்று தெரிவித்தார். இந்தச் செய்தியை கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி இந்து தமிழ் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் பள்ளியின் கோரிக்கையை ஏற்று, சிவகாசி கல்வி மாவட்டம் நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகிழ்வுடன் நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் ஆசிரியர் கருணைதாஸ், ''சிவகாசி டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக 10 மேசை, நாற்காலிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்து தமிழ் திசையில் இதுதொடர்பாக செய்தி வெளியானது.

அத்துடன் விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் சிவகாசி மாவட்டக்கல்வி அலுவலர்களின் முயற்சியால் எங்கள் பள்ளிக்கு பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மையம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்களின் 8 கி.மீ. தூரம் பயணித்துச் சென்று தேர்வு எழுதும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலையும் , பண விரயத்தையும் தடுத்துள்ளது. படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதால் பயமின்றி தேர்வு எழுதவும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

தேர்வு மையத்தை வழங்கிய அரசுத் தேர்வுத் துறைக்கும் பள்ளியின் சார்பாக நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்'' என்று ஆசிரியர் கருணைதாஸ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in