

‘குண்டு மனிதர், குட்டிப் பையன்’ எவ்வளவு வேடிக்கையான பெயர்கள். ஆனால், அவர்கள் செய்த கொடுஞ் செயல்கள், இன்றளவும் உலக வரலாற்றில் மறக்க முடியாதது. ஆம்! ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட யுரேனிய அணுகுண்டின் பெயர் ‘குட்டிப் பையன்’, நாகாசாகி மேல் வீசப்பட்ட புளூட்டோனிய அணுகுண்டு ‘குண்டு மனிதர்’.
“ஒரு பொருளின் நிறை, அதன் ஆற்றல் இருப்பை சார்ந்ததா?” என்கிற சிறிய கட்டுரையை, 1905 செப்டம்பரில் ‘அனாலன் டெர் ஃபிசிக்’ (Annalen der Physik) இதழில் வெளியிட்ட ஐன்ஸ்டைனுக்கு, நாற்பது ஆண்டுகள் கழித்து, அவரின் கருத்து அணுகுண்டுகளாக மாறும் என்பது தெரியாது.
அந்தக் கட்டுரையில், ஒரு பொருள் ஆற்றலை (Energy) வெளி யிடும்போது, அதன் நிறை (Mass) குறைகிறது என்று மட்டுமே சொல்லி யிருந்தார். நிறையும் ஆற்றலும் ஒன்றை ஒன்று மாற்றிக் கொள்ளக் கூடியவை எனும் ஆழமான உண்மை பின்னாள்களில் விரிந்தது. அவர் வரையறுத்த E = MC2 சமன்பாடு உலகப் புகழ் வாய்ந்தது.
அறிவியல் திருப்புமுனை: ஆற்றலை வரையறுக்கும் சமன்பாட்டை அதற்கு முன்பு யாரும் உருவாக்கவில்லை என்பதல்ல. மரபு இயற்பியலில், பொருளின் நிறையும், ஆற்றலும் தனித்தனியானவை. ஆனால், சிறப்புச் சார்பியலுக்குப் பிறகு, நேரமும் வெளியும் ஒவ்வொருவரின் நகர்தல்களைப் பொறுத்து மாறுபட்டதால், ஆற்றலைப் பற்றிய கணிதப் பார்வை மறுசீரமைக்கப்பட்டது.
மரபு இயற்பியலில், அடிப்படையாக இரண்டு ஆற்றல்கள்தான் இருந்தன. ஒரு பொருளின் இயக்கத்தின் மூலம் கிடைப்பது ‘இயக்க ஆற்றல்’ (Kinetic Energy), ஒரு பொருளின் நிலையைப் பொறுத்து உருவாவது ‘நிலை ஆற்றல்’ (Potential Energy). உதாரணமாக, இழுக்கப்பட்ட ஒரு ஸ்ப்ரிங்கில் சேமிக்கப்பட்டி ருக்கும் ஆற்றல், நிலையாற்றல்.
ஆனால் ஐன்ஸ்டைன், நகராமல் இருக் கும் (Rest) பொருளின் நிறைகூட, அதிக ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது என்றதுதான் பெரும் திருப்புமுனை. எடுத்துக்காட்டுக்கு, ஒரு கிராம் நிறையுள்ள பேப்பர் கிளிப் 90 ட்ரில்லியன் ஜூல் ஆற்றலை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
மேலும் அவர் உருவாக்கிய சமன்பாடு, நிறையை ஆற்றலாகவும் ஆற்றலை நிறையாகவும் மாற்றிக்கொள்ள முடியும் என்று விளக்கியது. உதாரணமாக, யுரேனி யத்தின் அணுவை இரண்டாகப் பிளந்து, அந்த இரண்டின் நிறையைக் கூட்டினால், மூலஅணுவின் நிறையைவிடக் குறைவாக இருக்கும்.
அப்படிக் காணாமல் போன ‘நிறை’, அபரிமிதமான ஆற்றலாக வெளிப்படும். அப்படித்தான், ‘குட்டி பையன்’ என்றழைக்கப்பட்ட, யுரேனிய அணுகுண்டில் ஒரு கிராமுக்கும் குறைவான நிறை மட்டுமே, அணுப்பிளவின்போது ஆற்றலாக மாறி ஹிரோஷிமாவில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
உயிர்ப்புள்ள சமன்பாடு: அதே போல, ‘பெரும் ஹாட்ரான் மோதச்செய்யும் கருவியில் (LHC),’ புரோட்டானின் வேகத்தை ஒளியின் வேகத்துக்கு நெருங்கச் செய்ய, அதன் மேல் ஆற்றலைச் செலுத்துகிறார்கள். புரோட்டான் கிட்டத்தட்ட, ஒளியின் வேகத்தை நெருங்கும் போது, ஆற்றல் மூலம் அதன் வேகத்தை அதிகரிப்பது கடினமாக இருக்கிறது. ஏனென்றால், அதன் சார்பு நிறை அதிகரிப்பதாக மாறுகிறது.
கண்டுபிடிக்கப்பட்டு நிறைய ஆண்டுகளுக்குக் கரும்பலகையில் எழுதப்படும் இயற்பியலாகவே E = MC2 சமன்பாடு இருந்தது. முதன்முறையாக, 1938இல் ஜெர்மானிய விஞ்ஞானிகள், யுரேனி யத்தை, பிளந்து அபரிமிதமான ஆற்றலை வெளிக்கொணர முடியும் என்று நிரூபித்தனர். ஆனால், கெடு வாய்ப்பாக அன்றைய ஜெர்மனி ஹிட்லரின் வசம் இருந்தது.
நாஸிக்கள் அணுகுண்டை தயாரித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில், மான்ஹாட்டன் செயல்திட்டத்தில், இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கண்ட, அணுகுண்டுகளை தயாரித்து, ஜப்பான் மேல் அமெரிக்கா வீசியதெல்லாம் வரலாறு. ஆனால் ஐன்ஸ்டைன், அழிவுக்கான ஆற்றலுக்காக, இந்த சமன்பாட்டை உருவாக்கவில்லை. மனித அழிவுக்கான அந்த அணுகுண்டை அமெரிக்கா வீசிய பிறகு ஐன்ஸ்டைன் கடுமையாக எதிர்த்தார்.
இந்தப் பிரபஞ்சத்தின் மாபெரும் உண்மையை அந்தச் சமன்பாட்டின் மூலம் அவர் வெளிக்கொண்டுவந்தார். இன்றைக்கும் பூமியில் மனித உயிர்களை வாழவைக்கும் சூரியனின் ஒளி, அதில் நடைபெறும் அணு இணைப்பு ஆற்றலின் விளைவே.
இன்றைக்கும், E = MC2 சமன்பாடு, மின்சாரம், மருத்துவம், தொல்லியல், துகள் இயற்பியல், வானியல், ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள் எனப் பல துறை களிலும் பயன்பட்டு மனிதக்குலத்தை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது.
(தொடர்ந்து தேடுவோம்)
- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com